Published : 05 May 2015 10:19 AM
Last Updated : 05 May 2015 10:19 AM
தமிழ்த் திரையுலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பல்வேறு களங்களில் தனி முத்திரை பதித்த பி.யு.சின்னப்பா (P.U.Chinnappa) பிறந்த தினம் இன்று (மே 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l புதுக்கோட்டையில் பிறந்தவர் (1916). தந்தை உலகநாதன் நாடக நடிகர் என்பதால் 5 வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். தந்தை பாடிய பாட்டுகளை கம்பீரமான, இனிய குரலில் இவரும் பாடுவார்.
l 4-ம் வகுப்போடு கல்வி முடிவடைந்தது. குடும்ப வறுமை காரணமாக, கயிறு திரிக்கும் கடையில் மாதம் 5 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தார்.
l மகன் நாடகத் தொழிலிலேயே ஈடுபட வேண்டும் என்று விரும்பிய தந்தை, மீனலோசனி வித்வபால சபாவில் சேர்த்துவிட்டார். ‘சதாரம்’ நாடகத்தில் குட்டித் திருடனாக நடித்து பல பரிசுகளை வென்றார். சின்னச் சின்ன வேடங்களே கிடைத்ததால், அங்கு 6 மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை.
l புதுக்கோட்டை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நாராயண செட்டியார் என்பவரது சிபாரிசால் வாய்ப்பு கிடைத்தது. மாத சம்பளம் 15 ரூபாய். அங்கும் சிறு வேடங்களே கிடைத்தன. மற்றவர்களது வசனங்களைப் பேசியும் அவர்களுக்கான பாட்டுகளைப் பாடியும் சுயமாக பயிற்சி பெற்றார். இவர் பாடுவதை எதேச்சையாக கேட்ட கம்பெனி முதலாளி வியந்துபோனார். சம்பளத்தை ரூ.75 ஆக அதிகரித்து, கதாநாயகனாக உயர்த்தினார்.
l அந்த கம்பெனியில் இவர் கதாநாயகனாக நடித்தபோது, உடன் நடித்தவர்களில் எம்.ஜி.ஆர், பி.ஜி.வெங்கடேசன், எம்.கே.ராதா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் ஸ்ருதி பிசகாமல் பாடுவதைக் கேட்கவே ஏராளமானோர் நாடகம் பார்க்க வருவார்கள். இவர் பரதனாக நடித்த ‘பாதுகா பட்டாபிஷேகம்’ நாடகம் சென்னையில் தொடர்ந்து ஓராண்டு காலம் நடத்தப்பட்டது.
l நாடக கம்பெனியில் இருந்து 19 வயதில் விலகி இசைப் பயிற்சி மேற்கொண்டு கச்சேரிகள் செய்தார். சிலம்பம், குஸ்தி, குத்துச் சண்டை, பளு தூக்குதல், கத்திச் சண்டை ஆகியவற்றைக் கற்று, அவற்றிலும் பரிசுகளை வென்றார். சிறிது காலம் மாந்திரீகமும் கற்றுக்கொண்டாராம்.
l ஜூபிடர் பிலிம்ஸின் ‘சவுக்கடி சந்திரகாந்தா’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 1938-ல் பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி ஆகிய படங்களில் நடித்தார். வசனம் பேசும் முறையாலும், சிறந்த நடிப்பாலும் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு சமமாக ரசிகர்களைக் கவர்ந்தவர்.
l தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1940-ல் இரட்டை வேடத்தில் இவர் நடித்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது.
l அதைத் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்த ‘மனோன்மணி’ உட்பட பல வெற்றிப் படங்கள் வந்தன. ஜகதலப்பிரதாபன் படத்தில் 5 இசைக் கருவிகளை வாசித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். ஏறக்குறைய 30 படங்களில் நடித்தார். இவற்றில் பெரும்பாலானவை வெற்றிப் படங்கள். சில படங்களையும் தயாரித்துள்ளார்.
l ‘நடிக மன்னன்’ என்று போற்றப்படுபவரும் தன் குரல் வளத்தால் ஏராளமான தமிழ் ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டவருமான பி.யு.சின்னப்பா உடல்நலக் குறைவால் 35 வயதில் (1951) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT