Published : 21 May 2015 10:09 AM
Last Updated : 21 May 2015 10:09 AM
உலக அளவில் சிறந்த நடிகராக அங்கீகாரம் பெற்றவரும் நான்கு முறை தேசிய விருதைப் பெற்றவருமான மோகன்லால் (Mohanlal) பிறந்த தினம் இன்று (மே 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :
l கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இலந்தூர் என்ற இடத்தில் பிறந்தவர் (1960). தந்தை வழக்கறிஞர். குடும்பம் திருவனந்தபுரத்தில் உள்ள முடுவன்முகள் என்ற இடத்தில் குடியேறியது. பள்ளிக்கூடத்தில் படித்த போது, படிப்பைவிட கலை உலகம் இவரை அதிகம் கவர்ந்தது. பள்ளி நாடகங்களில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்.
l ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது பள்ளியில் சிறந்த நடிகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாத்மா காந்தி கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். தன்னைப் போலவே நாடகம், திரைப்படங்களின் மீது காதல்கொண்ட, பின்னாளில் இவரைப் போலவே பிரபல இயக்குனர்களாகவும் நடிகர்களாகவும் உருவான ப்ரியதர்ஷன், எம்.ஜி.குமார் மற்றும் மணியன் பிள்ளராஜு ஆகிய சக மாணவர்களுடன் நட்பு ஏற்பட்டது.
l முதன் முதலாக திறநோட்டம் என்ற படத்தில் 1978-ல் நடித்தார். சில காரணங்களால் படம் வெற்றிபெறவில்லை. 1980-ல் வெளிவந்த மஞ்சில் விரிஞ்ச பூக்கள் மாபெரும் வெற்றியடைந்தது. தொடர்ந்து ஏறுமுகம்தான். 1983-ல் மட்டும் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். ப்ரியதர்ஷனின் பூச்சைக்கு ஒரு மூக்குத்தி என்ற படத்தில் நகைச்சுவை வேடம் ஏற்று, அதிலும் முத்திரை பதித்தார்.
l நடிப்பு இவருக்கு சுவாசம் போன்றாகிவிட்டதால் காதல், வீரம், நகைச்சுவை, நையாண்டி, திமிர், முரட்டுத்தனம் என்ற அத்தனை உணர்ச்சிகளையும் அந்தந்த கதாபாத்திரத்திற்கேற்ப அனாயசமாக வெளிப்படுத்தி நடிப்பவர். 1986-ல் டி.பி. பாலகோபாலன் எம்.ஏ. திரைப்படத்திற்காக முதன் முதலாக இவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
l நிழலுலக தாதாவாக இவர் நடித்த ராஜாவின்டே மகன் திரைப்படம் மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெறக் காரணமாக அமைந்தது. “கேமராவுக்கு முன்பாக இவர் வேறு ஒரு நபராக மறுவடிவம் பெறுவதை நான் பார்த்து பிரமிப்பு அடைந்திருக்கிறேன் “ என்று தேசிய விருது பெற்ற இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ஷாஜி என். கருண் குறிப்பிட்டுள்ளார்.
l இருவர், உன்னைப் போல் ஒருவன், சிறைச்சாலை ஆகிய திரைப்படங்கள் தமிழ்த் திரையுலகில் இவருக்கென்று தனி இடத்தைப் பெற்றுத் தந்தன. இந்திய-பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பான வானப்ரஸ்தம் இவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்ததோடு, உலக அளவில் இவரை பிரபலமாக்கியது.
l கம்பெனி, ராம்கோபால் வர்மா கீ ஆக், பரதேசி ஆகிய இந்திப் படங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். 2001-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். 2009-ல் இந்திய ராணுவம் இவருக்கு லெப்டினன்ட் கர்னல் பட்டத்தை அளித்து கவுரவித்தது.
l ஸ்ரீ சங்கரா சமஸ்கிருத பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
l நான் சினிமாவை நேசிப்பவன், என் படங்கள் மட்டுமல்லாமல் எல்லாத் திரைப்படங்களும் வெற்றிபெற வேண்டும் என்றே விரும்புகிறேன் என்று கூறும் இவர், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
l தனியாகவும் கூட்டாகவும் 12 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். எத்தனை வயதானாலும் நான் நடித்துக்கொண்டுதான் இருப்பேன். எனக்கு இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார். பல இளம் நடிகர்கள் திரையுலகில் தடம் பதித்து வரும்போதிலும், 1978-ல் தொடங்கிய இவரது திரைப்பயணம் 37 வருட வெற்றிப் பயணமாக இன்றும் தொடர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT