Last Updated : 11 May, 2015 10:02 AM

 

Published : 11 May 2015 10:02 AM
Last Updated : 11 May 2015 10:02 AM

இன்று அன்று | 1998 மே 11 - அமெரிக்க செயற்கைக் கோளை ஏமாற்றிய பொக்ரான்

இந்தியாவை உலக நாடுகள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்க வைத்த இரண்டு முக்கிய நிகழ்வுகள் ஒரே இடத்தில் 24 ஆண்டுகால இடைவெளியில் நிகழ்ந்தன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தின் பொக்ரான் எனும் இடத்தில் நிகழ்ந்த அணுகுண்டு சோதனைகள்தான் அவை.

முன்னதாக, அணுமின் திட்டத்துக்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் தொழில்நுட்ப அளவில் ஆதரவு தந்திருந்தன. எனினும், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அணுகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடக் கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தன. இந்நிலையில்தான் 1974 மே 18-ல் பொக்ரானில் அணுகுண்டு சோதனையை இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு நடத்தியது மேற்கத்திய நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ‘அமைதியான அணுக்கரு வெடிப்பு’ என்று பெயரிட்டதன் மூலம் இந்த நிபந்தனையை மீறவில்லை என்று இந்திய அரசு அறிவித்தது. புத்தர் பிறந்த தினமான புத்த பூர்ணிமா அன்று நடத்தப்பட்டதால் இந்நிகழ்வு ‘சிரிக்கும் புத்தர்’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.

1998-ல் மீண்டும் ஒரு அணுகுண்டு சோதனை நடத்த வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு தயாரானது. இதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே அணுகுண்டு சோதனைக்கு நரசிம்மராவ் தலைமையிலான அரசு தயாரானது. ஆனால், பொக்ரானில் அணுகுண்டு சோதனைக்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருந்தது, உலகத்தைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க செயற்கைக் கோள்களின் கழுகுக் கண்களில் பட்டுவிட்டது. இதனால், இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வாஜ்பாய் அரசு அதை நிறைவேற்றிக்காட்டியது.

அதாவது, அமெரிக்க செயற்கைக் கோள்களின் பார்வையில் படாத வகையில் ஏற்பாடுகளை இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) மேற்கொண்டது. சுழன்றுகொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் பூமியில் பொக்ரான் பகுதியிலிருந்து வேறு திசைக்குத் திரும்பியிருந்த கால இடைவெளியில் அணுகுண்டு சோதனையைச் சத்தமின்றி முடித்துவிட்டது இந்தியா. மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் டைரக்டர்-ஜெனரலாக அப்துல் கலாம் இருந்தபோது இந்த சோதனை நடைபெற்றது.

சோதனை முழு வெற்றியடைந்ததாக அப்துல் கலாம் குறிப்பிட்டார். மே 11-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 45 கிலோ டன் ஹைட்ரஜன் குண்டை வெடித்து இந்தியா சோதனை செய்தது. அதே ஆண்டு மே 13-ம் தேதி இரு சிறிய குண்டுகள் வெடித்து சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனைக்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பில் கிளிண்டனால் இதை நம்ப முடியவில்லை. அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., தேசியப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இவ்விஷயத்தில் இந்தியாவிடம் ஏமாந்துவிட்டதாக அமெரிக்க அரசு கருதியது. இதற்கிடையே, இந்தியாவுக்குப் போட்டியாக 1998 மே 28-ல் சாகாய் எனும் இடத்தில் பாகிஸ்தானும் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதையடுத்து, இரண்டு நாடுகளையும் அமெரிக்கா கடுமையாகக் கண்டித்தது. அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்தியாமீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x