Published : 20 May 2015 11:03 AM
Last Updated : 20 May 2015 11:03 AM

சுமித்ரா நந்தன் பந்த் 10

இந்தி புதுயுக கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர் என பன்முகத் திறன் கொண்ட சுமித்ரா நந்தன் பந்த் (Sumithranandan Pant) பிறந்த தினம் இன்று (மே 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கவுஸானி என்ற கிராமத்தில் (1900) பிறந்தவர் . பிறந்த சில மணிநேரத்தில் தாய் இறந்துவிட்டார். பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தார். இவரது இயற்பெயர் குஸாயி தத். அல்மோராவில் ஆரம்பக் கல்வி கற்றார்.

* சிறு வயதில் பாட்டி வீட்டில் இமயமலை அடிவாரத்தில் பசுமையான பச்சை படுக்கை விரித்ததுபோன்ற புல்வெளி, மலர்கள், மரங்கள், வெகு தொலைவில் கேட்கும் கோயில் மணி ஓசை, இவற்றுடன் பாட்டி கூறும் கதைகளைக் கேட்டு வளர்ந்த இவருக்குள் கவிதை தானாக ஊற்றெடுத்தது.

* 4-ம் வகுப்பு படிக்கும்போது கவிதை எழுதினார். இதைப் பார்த்து வியந்துபோன பள்ளி ஆய்வாளர் அவருக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளித்தார். இலக்கிய ஆர்வலர்கள் நடத்திவந்த ‘சுத்த சாகித்யிக் சமிதி’ என்ற நூலகத்தில்தான் தலைசிறந்த இலக்கிய மேதைகளின் புத்தகங்களைப் படித்தார்.

* பள்ளிப் பருவத்தில், அல்மோடோ அக்பார், சுதாகர் என்ற 2 கையெழுத்துப் பத்திரிகைகளில் கவிதை எழுதி வந்தார். 16 வயதில் 200 பக்கங்கள் கொண்ட ‘ஏக் கிலவுனா’ என்ற நாவலை எழுதினார்.

* 1918-ல் காசிக்குச் சென்றார். அங்கும் பின்னர் அலகாபாத்திலும் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1921-ல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தினார். தன் பெயரை சுமித்ரா நந்தன் பந்த் என்று மாற்றிக்கொண்டார். வீட்டிலேயே இந்தி, சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளின் இலக்கியங்களைப் படித்தார்.

* இவரது புகழ்பெற்ற காவியத் தொகுப்பான ‘பல்லவ்’ 1926-ல் வெளிவந்தது. 1938-ல் ‘ரூபாப்’ என்ற மாதப் பத்திரிகையை வெளியிட்டார். 1955 முதல் 1962 வரை வானொலி நிலையத்தில் பணியாற்றினார்.

* இந்தி இலக்கியத்தில் ‘சாயாவாத்’ எனப்படும் புதுயுக கவிதைகளின் வளர்ச்சிக்காகவே பிறந்தவர் என போற்றப்பட்டவர். அருவி, பனி, பூ, கொடி, தேனீ, பட்டாம்பூச்சி, காலைக் கதிரவன், குளிர்ந்த காற்று, மாலை, இரவு இப்படி அனைத்தும் இவரது படைப்புகளில் இடம்பெற்றன. பல்வேறு சமூக, பொருளாதார சூழல்களை ஆழமாக, நுட்பமாகப் புரிந்துகொண்டவர். அதுவும் இவரது படைப்புகளில் பிரதிபலித்தது.

* அரவிந்தரின் படைப்புகளால் கவரப்பட்டார். ஆன்மிகப் படைப்பாளியாகவும் மாறினார். கிராந்தி, குஞ்சன், கிராம்யா, யுகாந்த், ஸ்வர்ணகிரண் ஆகியவை இவரது பிற முக்கியப் படைப்புகள். கவிதைகள், உரைநடை, நாடகம், கட்டுரைத் தொகுப்பு என 28 புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

* 1961-ல் பத்மபூஷண், 1968-ல் ஞானபீட விருது, சாகித்ய அகாடமி விருது மற்றும் சோவியத் லேண்ட் நேரு விருது ஆகியவற்றைப் பெற்றார்.

* 50 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன இந்தி இலக்கியத்தின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய சுமித்ரா நந்தன் பந்த் 77 வயதில் (1977) மறைந்தார். கவுஸானி கிராமத்தில் இவர் வாழ்ந்த இல்லம் அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x