Published : 31 May 2015 11:54 AM
Last Updated : 31 May 2015 11:54 AM

வால்ட் விட்மன் 10

அமெரிக்க புதுக்கவிதையின் முன்னோடியும், அடிமை வியாபாரத்தை எதிர்த்தவருமான வால்ட் விட்மன் (Walt Whitman) பிறந்த தினம் இன்று (மே 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் ஹன்டிங்டனில் (1819) பிறந்தவர். 12 வயது வரை ப்ரூக்ளினில் வசித்தார். குடும்பம் வறுமையில் வாடியதால் படிப்பை நிறுத்திவிட்டு, அச்சகத்தில் பணிபுரிந்தார். புத்தகம் படிப்பதிலும், கவிதை எழுதுவதிலும் ஆர்வம் பிறந்தது.

l பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதினார். பத்திரிகைகளில் தொகுப்பு ஆசிரியராகப் பணியாற்றி னார். 17-வது வயதில் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்தார். 27 வயதில் ப்ரூக்ளின் நாளிதழின் ஆசிரியரானார். புரட்சிகரமான கவிதைகளைப் படைத்தார். இவரது படைப்புகள் தனித்துவம் மிக்கவை.

l கவிதைகளில் இலைமறை காய்மறை என்று இல்லாமல் அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக கூறியதால், ஆரம்பத்தில் இவரது படைப்புகள் பலராலும் ஆபாசம் என்று ஒதுக்கப்பட்டன. இவரது ‘ஐ சிங் தி பாடி எலக்ட்ரிக்’, ‘சாங் ஆஃப் மைசெல்ஃப்’ ஆகிய 2 கவிதை நூல்களும் மனித உடல், உடல்நலம், பாலுறவு ஆகியவற்றை விவரித்தன. எமர்ஸன் போன்ற கவிஞர்கள் இவரது கவிதைகளை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

l இவரது கவிதைகள் அனைத்தும் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டு, வசனநடையாக எழுதப்பட்டவை. அதனால், ‘வசனநடை கவிதையின் தந்தை’ என்றும் போற்றப்பட்டார்.

l முதலில் 12 பாடல்களுடன் ‘லீவ்ஸ் ஆஃப் கிராஸ்’ புத்தகத்தின் முதற்பதிப்பை 1855-ல் வெளியிட்டார். அதையே பலமுறை திருத்தியும் சேர்த்தும், பின்னாளில் 300 கவிதைகளுடன் விரிவாக வெளியிட்டார். ஆரம்பத்தில் இது அந்தளவு வரவேற்பு பெறவில்லை. 1882-ல் மறுபதிப்பு செய்யப்பட்டபோது, மாபெரும் வெற்றி பெற்றது. ‘பிராங்க்ளின் இவான்ஸ்’ என்ற நாவல் மற்றும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். 1848-ல் நியூயார்க்கில் இருந்து நியூஆர்லியன்ஸ் சென்றார்.

l அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப்படும் இழிவான வாணிபத்தையும், அடிமைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் கண்டு மனவேதனை அடைந்தார். சொந்தமாக ‘Free Soil’ (சுதந்திர பூமி) என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

l கருப்பின மக்களை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்க ஆபிரஹாம் லிங்கன் எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது. அரசின் ஐக்கியப் படைக்கும், கூட்டு மாநிலங்கள் என்ற கன்ஃபெடரேஷன் படைகளுக்கும் இடையே போர் மூண்டது.

l விட்மன் ஐக்கிய படைகளுடன் இணைந்து போர் புரிந்தார். போருக்குப் பிறகு, காயமடைந்த சுமார் ஒரு லட்சம் பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு விட்மன் தொண்டு புரிந்தார்.

l போர் வெற்றி பெற்றது. அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. இதிலிருந்து 5-ம் நாளில் ஆபிரஹாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். மனவேதனையில் விட்மன் எழுதிய ‘ஓ கேப்டன், மை கேப்டன்’ என்ற இரங்கற்பா, படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

l 19-ம் நூற்றாண்டில் கவிதை படைத்த இவருக்கு 20-ம் நூற்றாண்டில்தான் புகழும் பெருமையும் கிடைத்தது. அமெரிக்க புதுக்கவிஞர், புரட்சிக் கவிஞராகப் போற்றப்படும் வால்ட் விட்மன் 73 வயதில் (1892) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x