Published : 16 May 2015 11:15 AM
Last Updated : 16 May 2015 11:15 AM

ஜெயகாந்தனோடு பல்லாண்டு 31 - வாழ்க்கையே விளையாட்டுதான்!

“என்ன இது விளையாட்டு? எனக் கும்கூட விளையாடத் தெரியும். வாழ்க்கையையே ஒரு விளை யாட்டாக வாழ்கிறவன் நான். விளையாட விருப்பமிருந்தால் வெளியே வாருங் கள். மல்யுத்தம்கூட ஒரு விளையாட்டு தான். எனக்கும் அது ரொம்பப் பிடிக்கும். ஆடலாம்!” என்று ஜெயகாந்தன் ஆரம் பித்தார்.

ஒவ்வொரு வாக்கியத்தையும் நிதான மாகவும், கல்லூரி அரங்கு பூராவையும் ஓர் அறியாச் சிறுவர் கூட்டமாகப் பாவித்தும், விளையாட்டாகவோ வெறும் பேச்சுக்காகவோ பேசவில்லை என்று தீர்க்கமாகப் பிறருக்குத் தெரிகிற மாதிரியும் பேசினார் ஜெயகாந்தன்.

அந்த அரங்கு பூராவும் அமைதி யாயிற்று.

“நீங்கள் அழைத்து நான் பேச வந் திருக்கிறேன். பேச வேண்டும் என்பதற் காக நான் தேடிக்கொண்டு உங்களிடம் வரவில்லை. எனக்குப் பேசுவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. நான் எப்போதும் யாரிடமும் எதையாவது பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்!”

தாங்கள் வழக்கமாக வரவேற்று, உபசரித்து மாலை சூட்டிக் கைதட்டி, விசில்கள் அடித்துக் கிண்டல்களும் புரிந்து வழியனுப்பி வைக்கும் மனிதர் களுள் ஒருவர் அல்லர் இவர் என்று உணர்ந்து, அனைவரும் தங்கள் இருப் பிடத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தனர். மிகச் சுவையானதோர் காட்சி கிட்டியது போல் சில முகங்கள் பிரகாசமுற்றன.

அப்புறம் ஜெயகாந்தன், அந்த மாணவர்களின் தகப்பன்மார்களைப் பற்றிப் பேசினார்.

“அவர்களது தலைமுறை எங்கோ மண்ணைக் கிளறிக்கொண்டும், ஆடு மாடுகள் மேய்த்துக் கொண்டும் கழிந்தது. உங்களுக்குக் கிட்டியிருக்கிற வாய்ப்பு கள் அவர்களுக்குக் கிட்டவில்லை. ஆனாலும், அவர்கள் வாழ்க்கை அர்த்த முள்ளதும் அற்புதமானதும் ஆகும். நீங்கள்தான், நீங்கள் கற்றிருக்கும் இந்தக் கல்வியினால் இரண்டுங்கெட்டான் ஆகிப் போனீர்கள்!”

மாணவர்கள் தங்கள் ஹாஸ்டல் வாழ்க்கையிலும் அசட்டுச் சிரிப்பிலும் மறந்து போன அந்தத் தந்தையர், எந்தெந்த மண்ணின் வாழ்விலோ முளைத் தவர், கல்வியின்பால் மதிப்பு கொண்டு, அதைத் தம் மைந்தர் கற்க என்று விடுத்த அந்தக் கசடற்ற மாந்தர், கோவணத்துடன் ஏர் ஓட்டிக்கொண்டும் வெயிலிலே வரப்பு களில் நின்று ஆடு மாடுகள் மேய்த் தும், சந்தையிலே முட்டை விற்றும் தேங் காய் விற்றும் சிறுகச் சிறுகப் பணம் சேர்த்தனுப்பிய அந்தப் பாமரர், ஜெயகாந்தன் பேசப் பேச நினைவில் ஒரு புதிய ஒளி பெற்றுத் துலங்கலாயினர்.

“அவர்கள் வாழ்வு நாம் மேற்கொள் ளத் தகாத ஒன்று என்று உங்களில் பெரும்பாலோர் நினைத்துவிட்டீர்கள்! ஒரு குமாஸ்தா உத்தியோ கமே உங்கள் லட்சியமாகிப் போயிற்று. மாடு மேய்ப்பது, உழுவது, உடலார உழைப்பது என்பதெல்லாம் கடைநிலை மாந்தர் செய்யும் தொழில் என்று கருதிவிட்டீர்கள்! உங்களைப் பழிக்கும் போதெல்லாம், “நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு...” என்று சொல்லிச் சொல்லி உங்கள் வாத்தியார்களும் மாடு மேய்ப்பது என்றால், ஏதோ மட்டமானது என்னும் அந்த மனோபாவத்தையே உங் களுக்கு உண்டாக்கிவிட்டனர் போலும்!”

ஓர் அழகான விஷயம் சொல்லப்பட் டது போல் சபை நடுவே ஒரு சிரிப்பலை ஓடிற்று!

“மேன்மக்கள் எல்லாம் மாடு மேய்த் திருக்கிறார்கள். கிருஷ்ணன் மாடு மேய்த்தவன்தான். அது ஒன்றும் அற்ப மானதன்று! அதைத் திறம்படச் செய் வதற்கு ஒரு சாதுரியமும் கவனிப் பும் ரசிப்பும் பொறுமையும் தேவை. இடைநடுவே லீலைகளும் விளையாட் டும்கூட நிகழ்த்திக்கொள்ளலாம். சமயங் களில் எனக்கு மாடு மேய்த்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துப் பொறாமைகூட ஏற்படுவது உண்டு!”

அவர் ஒன்றும் கோபமாகப் பேச வில்லை என்கிற தொனிக்கு ஜெய காந்தனின் குரல் கனிந்து வந்தது.

“உங்கள் நிலைமை ரொம்பப் பரி தாபம். உங்கள் ஆரவாரத்துக்கும் ஆழ மற்ற தன்மைக்கும், சற்று முன்பு பட்டாசு வைத்தீர்களே அந்தச் சிறு பிள்ளைத் தனத்துக்கும் மாற்றாக, ஒரு பெரிய சோகம் உங்கள் எதிர்காலத்தைக் கப்பிக்கொண்டிருக்கிறது. எல்லோருக் கும் குமாஸ்தா வேலை கிடைத்துவிடப் போவதில்லை.

உங்களைப் படிக்க வைத்ததற்கு இந்நேரம் ஒரு கோழி வளர்ந்திருந்தால் அது முட்டையாவது இட்டிருக்கும். அந்த அளவும் லாபமில்லா மல், கடைசியில் ஒரு காகிதச் சுருளைக் கையில் வைத்துக்கொண்டு அலையப் போகிறீர்கள். இதை விடவும் மாடு மேய்க்கப் போவது நல் லது. போங்கள்... எல்லாரும் போய் மாடு மேயுங்கள்!”

எல்லோரும் வந்து கல்வி யின் உயர்வையும் நூல்களின் சாரத்தையும் போற்றிப் பொழிந்து தள்ளுகிற இடத் தில், ஜெயகாந்தன் ஏனோ, மாடு மேய்ப்பதன் மகத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.

அதற்கப்புறம் அவர் இந்தக் கல்வி முறையின் தலைக் குடுமியையே பற்றிக் கொண்டார். அதன் இயல்புகளையும் விளைவுகளையும் விளக்கலானார். கல்விக் கூடங்களில் நீடித்து நடந்துவரும் மூடக் கிரியைகளின் வேடிக்கை நாட கத்தை விவரித்தார்.

ஆசான்கள் தாழ நேர்ந்த அவலத்தைக் கோடிட்டுக் காட்டி னார். கற்பதன் பலனாக ஞானம் அல்லா மல், அச்சமும் வெறுப்பும் சோர்வும் விரக் தியும் அன்பின்மையும் பொறுப்பின்மை யும் விளைவதுதான் என்று வினவினார்.

அவ்வப்போது நடு நடுவே, “இதை விடவும் மாடு மேய்க்கப் போவது நல்லதல் லவா?” என்று கேட்டுக் கொண்டார்.

அந்தக் கல்லூரி அரங்கு பூராவும் வாயடைத்திருந்தது.

ஆரம்பத்தில் மேம்போக்காக அல்ப காரணங்களில் ஓடிக்கொண்டிருந்த அவர் கள் மனவெள்ளத்தை இப்போது ஓர் ஆழ்நிலைக்கு கொண்டு வந்தாயிற்று. தீர்மானமான திசையொன்று இல்லா மல் திரும்பின பக்கமெல்லாம் சென்று கொண்டிருந்த சித்தம் கட்டி இழுக்கப் பட்டு உரிய திசை காண்பிக்கப்பட்டது.

அவர்களது பிரச்சினை, ஒவ்வொருவரு டையதாக அணுகப்பட்டு, எப்படியோ ஒரு பெரும் பிரயாசையில் தீர்க்கக்கூடியன அல்ல என்பது தெரிந்தது. வானமே விடிந் தால்தான் ஒவ்வொரு வீட்டுக்கும் வெளிச் சம் வரும். ஒட்டுமொத்தமான அடிப் படைத் திருத்தத்தினாலேயே இந்த சமூகப் பிரச்சினைகள் தீரும். முரண்பட்டு முறுக்கேற்றி மூச்சையிறுக்கும் சிக்கல் முடிச்சுகள் அவிழும் என்பது உணர்த்தப் பட்டது.

அந்த வழியில் அந்தத் திசைநோக்கி நில்லாமல், காரியப் பலன் கிட்டாத சிறு கலவரங்களை இருக்குமிடத்தில் செய்துகொண்டு, தவறான இலக்குகள் நோக்கிப் பாய்ந்து, தடுமாறி வீழ்ந்தும் தங்கள் ஆற்றல்கள் தீர்ந்தும், கடைசியில் இடநெரிசல் மிக்க பழைய தொழுவத்திலேயே மேலும் ஒன்றாகப் போய்ச் சேர்ந்து, காலமெல்லாம் வாழ்வு பற்றிப் பெருமூச்சு விடுவதற்கோ இக்கல்வி..? என்பதோர் கேள்விபோல் ஜெயகாந்தன் அன்று அங்கு நின்றார்.

இதற்கிடையில் அவர் பேச்சின் சில நயமான குத்தல்களை அவர்களால் ரசித்துச் சிரிக்காமல் இருக்க முடிய வில்லை. மேடைப் பேச்சாளர்களின் சட்டைப் பையில் தயாராக ஏற்கெனவே திரட்டி வைக்கப்பட்டிருக்கும் ஹாஸ்யத் துணுக்குகள் அல்ல அவை! ஒரு மேதைமை விழி செலுத்திப் பார்த்ததும் விளங்க வருகிற உறுத்தல்களின் மீது உட னடியாக உபயோகிக்கப்படுகிற ஞான மென்னும் வாளின் தகதகப்பு அது!

வாஸ்தவம்தான் என்று ஒப்புக் கொண்டு, சரேலென்று வீழ்ந்து வணங் கப் பண்ணுகிற உண்மையின் சொரூபங் களாக இருந்த காரணத்தாலும், ஒரு வெறுப்புணர்ச்சியின் போர்வையைப் போர்த்திக்கொண்டது போல் அல்லா மல், நிஜ அக்கறை என்னும் நிழலில் குளிர்ந்து நின்றவையாக இருந்ததாலும், அவர் பேசிய இவ்விஷயங்களை எல்லாம் அந்தச் சபை அதன்பின் மிக அந்நியோன்யம் காட்டிக் கடைசி வரை சிரத்தையுடன் கவனித்தது.

- தொடர்வோம்...

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com

வாசிக்க: >முந்தைய அத்தியாயம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x