Published : 06 May 2015 07:19 PM
Last Updated : 06 May 2015 07:19 PM
வறட்சிக்கு எதிரான நீர்ப்பாசன முறைகள் குறித்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "டெல்லியில் எனக்கு பெரிய பங்களா உள்ளது. அங்கு சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஏராளமான மரங்கள் உள்ளன. எனது சிறுநீரை ஒரு பிளாஸ்டிக் கேனில் சேமிக்கத் தொடங்கினேன். அது 50 லிட்டர் அளவுக்கு சேர்ந்தவுடன், எனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள சில செடிகளுக்கு மட்டும், சேமித்து வைத்த சிறுநீரை தோட்டக்காரர் உதவியுடன் பாய்ச்சினேன். மற்ற செடிகளை விட சிறுநீர் ஊற்றப்பட்ட செடிகள் ஒன்றரை அடி உயரம் கூடுதலாக வளர்ந்தன.
இதை உங்களிடம் சொல்வது சிரமம்தான். இதனை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நான் ஒரு பரிசோதனை முயற்சியாகவே இதனைச் செய்தேன். நீங்கள் உங்கள் சிறுநீரை சேமித்து செடிகளுக்கு பயன்படுத்துங்கள். அதில், யூரியாவும், நைட்ரஜனும் இருக்கிறது. சிறுநீரை நீங்கள் ஆரஞ்சு மரத்துக்கு ஊற்றினால், அதன் வளர்ச்சியை நீங்கள் பார்க்க முடியும்."
இதைத்தான் இரண்டு நாட்களாக சமூக வலைதள தலைமுறை மிகக் கொண்டாட்டமாக அணுகியிருக்கிறது. கிரி படத்தில் மூத்திரச் சந்துக்குள் சிக்கிக்கொண்ட வடிவேலுவை சந்தானத்தின் பாணியில் வச்சு செய்வோம் என்பதுபோல் அடித்துத் துவைத்துக் கொண்டிருக்கிறது. அதேநேரம், மேற்கூறிய நிதின் கட்காரியின் பேச்சு நாள் முழுக்க அடித்துத் துவைக்க வேண்டிய அளவுக்கான, முட்டாள்தனமான, அவதூறான, மூடநம்பிக்கையான கருத்தா என்பதையும் ஆராயவேண்டிய சூழலில் நாம் இருந்தோமா என்பதுதான் முதல் கேள்வி?!
எதிலிருந்தும் தங்களுக்குத் தேவையான ஒரு வரியைக் கத்தரித்து, அதை மட்டும் ஒட்டி அதற்குக் கீழே வினையாற்றிப்போவது மிகப் பரவலாகவும், எளிதாகவும் நடக்கும் அவரச மற்றும் ஆபத்தான காலத்தில் இருக்கின்றோம். எதையும் கேள்விக்குட்படுத்து, எதையும் புனிதப்படுத்தாதே என்பது அறிவின் திறவுகோலாய் இருப்பதையும் மறுக்கக் கூடாது. அதேசமயம் ஒரு செயலை, ஒரு செய்தியை எந்த வகையில், எந்த நோக்கத்தில் கேள்விக்குட்படுத்துகிறோம் என்பதும் மிக முக்கியமான ஒன்று.
தன் உதாரணத்தைச் சொன்னதன் நோக்கம் வறட்சிக்கான தீர்வாக சிறுநீரை பயன்படுத்த யோசனை கூறினாரா அல்லது உரமாக சிறுநீரை பயன்படுத்த யோசனை கூறினாரா என்பதைத்தான் முதலில் கேள்விக்குட்படுத்த வேண்டும். ஒருவேளை வறட்சிக்கான தீர்வாக சிறுநீரை அவர் முன்னிறுத்தியிருந்தால் மிக நிச்சயமாக நாம் எதிர்வினையாற்றுவது அவசியம். அதேபோல் ஏதேனும் மதரீதியான காரணங்களை முன்வைத்து மூடநம்பிக்கையாக மட்டுமே திணித்திருந்தால் வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்றே.
ஆனால், பிஜேபி அரசின் ஓர் அமைச்சர் சொல்லியிருக்கிறார், அதும் சிறுநீர் ஆரஞ்சு செடிக்கு பயன்படுத்துவதாகச் சொல்லியிருக்கிறார் என்பதையொட்டி, பிஜேபி என்பதற்காகவும், ஆரஞ்சுப் பழச்சாறில் சிறுநீரின் உப்பு கரிக்கும் என்பதாகவும் நினைத்து எதிர்வினையாற்ற நினைத்தால் அது சரியானதுதானா என்பதையும் நாம் ஆராய வேண்டும்.
ஒருவேளை ஆரஞ்சுச் செடிக்கு பாய்ச்சிய (!) சிறுநீர் அதன் பழங்களில் கலந்திருக்கும் எனும் ஒவ்வாமை எண்ணம் ஏற்பட்டால் அதற்கு எதிர்வினையாற்றும் முன்பாக, திருப்பூர் மாதிரியான பகுதிகளில் சாயக்கழிவுகளை ஆழ்துளைக் கிணறுகளில் விட்டு, அது பூமிக்கடியில் இருக்கும் நீர்த்தடங்களின் வழியாக பல மைல்கள் கடந்து ஏதாவது ஒரு வறண்ட கிணற்றில் பாய்ந்து அங்கிருந்து பாசனமாக தென்னை மரங்களுக்குச் சென்று, அதை மட்டுமே குடித்து வாழும் தென்னையின் இளநீரில் வீச்சம் அடிப்பது குறித்தும் ஒவ்வாமை கொண்டு சமூக வலைதளங்கள் உறைந்துபோகும் அளவிற்கு இதைவிடப் பலமடங்கு எதிர்வினையாற்ற வேண்டும்.
இங்கே கணினியில் ஓர் அமைச்சர் தன் தோட்டத்தில் சில செடிகளுக்கு தமது சிறுநீரைப் பயன்படுத்தியாக கேலியும் கிண்டலுமாக பதிவு செய்பவர்களில் எத்தனை பேருக்கு, குறிப்பிட்ட விவசாயப் பயிர்களுக்கு பன்றியின் எருவை (மலம்) தேடித் தேடி மூட்டை மூட்டையாக வாங்கி வந்து நிலம் முழுக்க இறைத்து பயிர் செய்கிறார்கள் என்பது தெரியுமெனத் தெரியவில்லை. ஒரு காலத்தில் கிராமத்தில் மாடு, எருமைகளின் சாணம் மட்டுமே பயன்படுத்திய விவசாயிகள், விருப்பமாக 'டவுன் குப்பை' என, குறிப்பாக மனித மலக் குப்பையை வாங்கி வருவதையும் கண்டிருக்கிறேன். பசுமாட்டின் கோமியம் சொட்டுவிடாமல் சேகரிக்கப்பட்டு பஞ்சகாவ்யம் உட்பட்ட இயற்கை உரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை ஓரளவு நாம் அறிவோம்தானே. அதே பசுமாட்டின் சிறுநீரில் இருந்து வடிகட்டித் தயாரிக்கப்படும் 'அர்க்' கூட மிகப் பிரபலமான மருந்துதானே.
நிதின் கட்கரியும் கூட சிறுநீரை தாம் பயன்படுத்தியதற்காக எவ்விதத்திலும் நம்ப முடியாததைக் காரணமாய்க் காட்டவில்லை. சிறுநீரில் யூரியாவும், நைட்ரஜனும் இருப்பதால் பயன்படுத்துவதாகவே அவர் சொல்லியிருக்கிறார். அவரின் கருத்து குறித்து கூர்மையான கேலிகளைப் பயன்படுத்த நேரம் இருந்த நமக்கு, அவ்வாறு சிறுநீரில் இருக்கும் தாது உப்புகள் அப்படியான பயிர்களுக்கு எந்தெந்த வகைகளில் பலனளிக்கும் அல்லது தீங்கிழைக்கும் என்பதை வேளாண்துறை கல்வி பயின்றவர்கள் எவரிடமாவது கேட்க நேரமோ எண்ணமோ தோன்றியிருக்கிறதா? வேளாண்துறை கல்வி சார்ந்தவர்கள் எவரேனும் நிதின் கட்காரியின் கருத்து குறித்து வெட்டியோ ஒட்டியோ விளக்கமாக எழுதுதலும் நலம்.
முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட எத்தனையோ பேர் தத்தம் சிறுநீரை பருகும் பழக்கம் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். நமக்கு நம்மிடம் இருந்து வருவது கழிவாக இருக்கும் நிலையில், இன்னொருவருக்கு அவரிடமிருந்து வருவது மருந்தாக இருப்பதுதான் விந்தையும், தவிர்க்க முடியாததும்.
சிறுநீரைப் பயன்படுத்தியதாகச் சொன்னார் என்பதற்காக கேலியும், கிண்டலும் செய்வதும் கூட ஒருவித மேட்டிமைத் தன மனோபாவம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஊருக்கு ஒதுக்குப்புறமாக தமது கழிவுகளைக் கழித்துக்கொண்டிருந்த அதே மனித சமூகம்தான் வீட்டிற்குள்ளேயே அதும் படுக்கை அறையின் இணைப்பாக, சில இடங்களில் பூஜை அறையின் சுவரையொட்டிய இடத்தில் கழிப்பறை கட்டி கழிவுகளை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்குள் மூத்திரம், மலம் கழிப்போம் என்பதை கற்பனையே செய்ய முடியாத அதே மக்கள்தான், இன்று கழிவறைக்கு வெளியே மூத்திரம், மலம் கழிப்பதை கற்பனைகூட செய்ய முடியாத நிலைக்கு மாறியிருக்கிறோம்.
இதெல்லாம் நிதின் கட்கரியின் கருத்து மிகச் சரியானது, ஆகச் சிறந்தது என எவ்வகையில் சான்றிதழ் வழங்கும் பொருட்டு அல்ல. நமக்கு மேலோட்டமாக பிடிக்காத ஒன்றை முகச்சுழிப்போடு கேலியும் கிண்டலும் செய்வதற்கு இருக்கும் சுதந்திரம், மற்றொருவருக்கு தன் பயன்பாட்டில் கண்டதை, பிடித்ததைச் சொல்லவும் இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவும்தான்.
சில வருடங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் புனிதா என்ற பள்ளிச் சிறுமி படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக, விடுதி காப்பாளர் அந்தச் சிறுமியை சிறுநீரைக் குடிக்க வைத்த கொடிய சம்பவத்திற்கு நிகரானதுதான், ஓர் அமைச்சர் தம் சிறுநீரை பயிர்களுக்குப் பயன்படுத்தினேன் என்பதை வெறும் கேலியும் கிண்டலுமாக மட்டுமே அணுகுதலும் கூட!
ஈரோடு கதிர் - எழுத்தாளர், அவரது வலைதளம் >http://maaruthal.blogspot.in/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT