Published : 07 May 2015 12:31 PM
Last Updated : 07 May 2015 12:31 PM

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது எப்படி?

இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்... மாணவர், பெற்றோர், ஆசிரியர் என ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வோர் எதிர்பார்ப்புகள், கனவுகள். நன்றாக எழுதிய மாணவருக்கு ‘சதம்’ அடிப்போமோ என்று கவலை. சுமாராக எழுதிய மாணவருக்கு ‘எல்லை தாண்டுவோமா’ என்று கவலை. உண்மையில், தேர்வு முடிவுகள் - அவை எப்படி அமைந்தாலும் கவலைக்குரிய விஷயம் அல்ல. நீங்கள் உங்களால் இயன்றதை விதைத்திருக்கிறீர்கள். உங்கள் உழைப்புக்கேற்ப அது நெல்லாக விளையலாம். இல்லை, புல்லாக விளையலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். சரி, தேர்வு முடிவுகளை எப்படி எதிர்கொள்வது? இதோ பார்ப்போம்.

* கல்வி என்பது உங்களிடம் இருக்கும் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள உதவும் ஒரு சாதனம். அது உலகை இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள உங்களுக்கு உதவுகிறது. கற்பதின் மூலம் உங்களது பகுத்தறிவு மேம்படுகிறது. சமூகத்தில் நீங்கள் எழுத்தறிவு பெற்றவர் ஆகிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் பல்வேறு அங்கங்களில் கல்வியும் ஓர் அங்கம். ஆக, கல்வித் தகுதி என்பது உங்களுக்கான இறுதி மதிப்பீடு ஆகாது.

* தேர்வுகள் என்பது உங்களின் கற்றல் காலத்தை சுவாரஸ்யப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. போட்டி இல்லாமல் நீங்கள் மட்டும் மைதானத்தில் தனியாக விளையாடினால் நன்றாகவா இருக்கும்? ஆமாம், விளையாட்டுப் போட்டிக்கும் தேர்வுப் போட்டிக்கும் பெரியதாக வித்தியாசம் இல்லை. என்ன, இந்த மைதானம் பெரியது. போட்டியாளர்களும் அதிகம். சுவாரஸ்யமும் மிக அதிகம். இங்கே ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் இறுதிப் போட்டியில் நீங்கள் சுமார் ஒன்பது லட்சம் பேருடன் விளையாடுகிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். ஆர்வமும் முயற்சியும் இருந்தால் புகுந்து விளையாடலாம். அதேசமயம் முடிவுகள் எப்படி இருந்தாலும் சரி, விளையாடுவது மட்டுமே நோக்கமாக இருக்கட்டும். இன்றைய முடிவுகள் நாளைய பாடங்கள்.

* மதிப்பெண்கள் என்பது நீங்கள் கற்ற கல்வியின் அளவீட்டு குறியீடு மட்டுமே. அது மட்டுமே உங்களது எதிர்காலத்தை தீர்மானிப்பதில்லை. அணுகுமுறை, ஆளுமைத் திறன், பேச்சுத்திறன், எழுத்துத் திறன் என உங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் காரணிகள் நிறைய இருக்கின்றன. அவற்றிலும் கவனம் செலுத்துங்கள்.

* ஏராளமான மதிப்பெண்களுடன் லட்சக்கணக்கான பணத்தை கொட்டி பொறியியல்/மருத்துவம் படித்து பின்னாட்களில் கணினித் தொழில்நுட்ப நிறுவனங்களில்/மருத்துவமனைகளில் ரூ.15 ஆயிரம் சம்பளம் வாங்குவோரும் இருக்கிறார்கள். சொற்ப செலவில் விஷுவல் எஃபெக்ட்ஸ், விஷுவல் கம்யூனிகேஷன் போன்ற பட்டயப் படிப்புகளைப் படித்து லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே, பள்ளி இறுதியாண்டு படிப்புகள் மட்டுமே படிப்புகள் அல்ல. சான்றிதழ் படிப்புகள் நிறைய இருக்கின்றன. படிப்புக்கு உதவும் துறை சார்ந்த பகுதி நேர வேலை அல்லது பயிற்சி பெறலாம். கூடுதல் பட்டங்கள் பெறலாம்.

* இந்த நிமிடமே முன்முடிவுகளை எடுங்கள். நீங்கள் 100-க்கு 99 மதிப்பெண்கள் எடுப்பீர்கள். உண்மைதான். நீங்கள் விரும்பிய துறை கிடைக்கும். ஆனால், நீங்கள் அதிலேயே பிடிவாதமாக நிற்காதீர்கள். 90 எடுத்தால் என்ன செய்யலாம்? என்ன படிக்கலாம். 80 எடுத்தால் என்ன செய்யலாம்? எங்கு படிக்கலாம் என்று திட்டமிடுங்கள். அவற்றையும் ஏற்கும் அளவுக்கு இப்போதே மனதை பக்குவப்படுத்துங்கள்.

* சிலருக்கு தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தபடி வந்தாலும் குழப்பம்தான். ஒரே நேரத்தில் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களில் இருந்தும் அழைப்பு வரும். திட்டமிடுங்கள். நீங்கள் சேர விரும்பும் கல்வி நிறுவனத்தின் மீதான உங்கள் எதிர்பார்ப்பு ஒன்றாக இருக்கலாம். ஆனால், அதன் உண்மை நிலவரம் வேறாக இருக்கலாம். அதனால், நீங்கள் சேர விரும்பும் நிறுவனத்தில் ஏற்கெனவே படித்தவர்கள், படித்துக் கொண்டிருப்பவர்களிடம் ஆலோசித்துவிட்டு அங்கு சேர்வது நல்லது.

* கிணற்றுத் தவளையாக இருக்காதீர். மருத்துவமும் பொறியியலும் உயர் கல்விதான். ஆனால், அவை மட்டும் உயர்ந்த கல்வி அல்ல என்பதை உணருங்கள். வெளியுலக சூழலை முழுமையாக உள்வாங்குங்கள். தினசரி நாளிதழ்கள், கல்வி தொடர்பான இதழ்கள், நீங்கள் விரும்பும் துறை சார்ந்த இதழ்களை படியுங்கள். இன்றைய சந்தைக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்கள் படிப்பை தீர்மானியுங்கள்.

* விருப்பமானதை தேர்வு செய்யுங்கள். அதிக மதிப்பெண் வாங்கிவிட்டோமே என்று பிடிக்காத துறையை தேர்வு செய்வதை தவிருங்கள். இன்றைக்கு மருத்துவம் படித்துவிட்டு இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வானவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அவர்களின் மருத்துவப் படிப்பு வீண் என்று சொல்ல இயலாது. ஆனால், லட்சியம் இந்திய ஆட்சிப் பணி என்றால் அதற்கேற்ப திட்டமிடுதலுக்கும், முன் தயாரிப்புக்கும் மருத்துவப் படிப்பைவிட வேறு பட்டப் படிப்பே சரியாக இருக்கும்.

* தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை வெற்றி/தோல்வி என்கிற வரையறைகளே தவறு. மத்திய அரசுகூட இதனை மாற்றி அமைத்து கல்வித் துறையில் சீர்திருத்தம் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருகிறது. எனவே தேர்வில் தோல்வி அடைந்துவிட்டோம் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் ‘குறைந்த மதிப்பெண்’ எடுத்திருக்கிறீர்கள் அவ்வளவுதான். ஆனால், அவையும்கூட ‘மதிப்பு மிக்க எண்கள்’ என்பதை மறக்காதீர்கள். அதிக மதிப்பெண் எடுப்பதற்கான முயற்சியில் முதல் கட்டத்தை தாண்டியிருக்கிறீர்கள் என்பதே உண்மை. உத்வேகமாக அடுத்தக்கட்ட முயற்சியை தொடங்குங்கள்.

* முடிவுகள் எதுவானாலும் நேர்மறை சிந்தனையுடன் அதனை அணுகுங்கள். உங்கள் பெற்றோரின் கனவு வேறாக இருக்கலாம். ஆனால், உங்கள் கனவு என்ன என்பதை பெற்றோருக்கு பொறுமையாக புரிய வையுங்கள். உங்கள் வாழ்வில் வசந்தம் மணம் வீசும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x