Published : 14 May 2015 10:17 AM
Last Updated : 14 May 2015 10:17 AM

மிருணாள் சென் 10

இந்தியத் திரைப்படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்திய இயக்குநர் மிருணாள் சென் (Mrinal Sen) பிறந்த தினம் இன்று (மே 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l வங்காள மாகாணத்தில் உள்ள ஃபரீத்பூரில் (தற்போது வங்கதேசம்) 1923-ல் பிறந்தார். தந்தை வழக்கறிஞர். விடுதலைப் போராட்ட வீரர்களை விடுவிக்கும் வழக்குகளிலேயே அதிகம் ஆஜரான தால், சுமாரான வருமானம்தான் கிடைத்தது. கொல்கத்தா ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் இயற்பியலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பயின்றார் மிருணாள் சென்.

l படித்து முடித்தவுடன் மருந்துப் பொருள் விற்பனைப் பிரதிநிதி வேலை கிடைத்தது. அதில் அதிக நாள் நீடிக்கவில்லை. சினிமா குறித்து பல புத்தகங்களைப் படித்தார். திரைப்பட விமர்சனங்கள் எழுதிவந்தார்.

l கல்கத்தா ஃபிலிம் ஸ்டுடியோவில் ஆடியோ தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றினார். 1950 முதல் முழுநேர திரைப்படப் பணிகளில் இறங்கினார்.

l கம்யூனிசமும் சினிமாவும் இவரது இரண்டு கண்கள். தனது ஆரம்பகால திரைப்படங்களில் கம்யூனிசக் கொள்கைகளை வெளிப்படுத்தினார். இவரது முதல் திரைப்படமான ‘ராத் போர்’ வெற்றி அடையவில்லை. 2-வது திரைப்படமான ‘நீர் ஆகாஷெர் நீச்சே’ இவருக்கு இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது. 3-வது திரைப்படம் ‘பைஷே ஷ்ரவன்’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததோடு, இவருக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது.

l நடுத்தர மக்களின் குடும்பப் பிரச்சினைகளை சித்தரிக்கும் படங்களை அடுத்தடுத்து எடுத்தார். குறைந்த செலவில் எடுக்கப்பட்டு 1969-ல் வந்த ‘புவன் ஷோம்’ இவரை திரை உலகின் முக்கிய அடையாளமாக மாற்றியது.

l இவரது ‘ஏக் தின் பிரதிதின்’, ‘காரிஜ்’, ‘கல்கத்தா 71’ திரைப்படங்கள் பிரபலமானவை. 80 வயதில் இவர் இயக்கிய ‘அமர் புவன்’ திரைப்படம் மீண்டும் இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

l இவரது பல திரைப்படங்கள் கொல்கத்தாவை கதைக்களமாகக் கொண்டவை. அவரது படங்களில் கொல்கத்தா நகரமும் ஒரு கதாபாத்திரமாகவே இருக்கும். தான் படித்த கதைகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான படங்களை உருவாக்கினார். ஏறக்குறைய 30 திரைப்படங்கள், 14 குறும்படங்கள் 4 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். இவரைப் பற்றியும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

l இந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்கம் ஆகிய 4 மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். பல திரைப்படங்கள் இந்தியாவில் விருதுகளை வென்றதோடு கேன்ஸ், பெர்லின், வெனிஸ், மாஸ்கோ, சிகாகோ, கெய்ரோ உள்ளிட்ட அனைத்து உலகத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, விருதைகளை வென்றன.

l 2004-ல் சுயசரிதை (‘ஆல்வேஸ் பீயிங் பார்ன்’) எழுதினார். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் 1998 முதல் 2003 வரை கவுரவ உறுப்பினராக இருந்தார். இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது, பத்மபூஷண் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன.

l இந்தியத் திரையுலகின் தலைசிறந்த அடையாளமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள மிருணாள் சென் தற்போது கொல்கத்தாவில் வசிக்கிறார். இன்று 92-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x