Published : 02 May 2015 10:27 AM
Last Updated : 02 May 2015 10:27 AM

சத்யஜித் ரே 10

திரைத்துறை சாதனைக்காக ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியரும், பிரபல இயக்குநருமான சத்யஜித் ரே (Sathyajit Ray) பிறந்த தினம் இன்று (மே 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கொல்கத்தாவில் 1921-ல் பிறந்தார். தந்தை மறைந்தபோது இவருக்கு 2 வயது. அதன் பிறகு, தாய்மாமாவின் வீட்டில் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். பிரசிடென்சி கல்லூரியில் (கொல்கத்தா பல்கலைக்கழகம்) பொருளாதாரத்தில் பட்டப் படிப்பை முடித்தார். சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் ஓவியக்கலை பயின்றார்.

l விளம்பர நிறுவனங்களில் வேலை பார்த்தார். புத்தகங் களுக்கு அட்டைப் படம் வரையும் வாய்ப்புகளும் தேடிவந்தன. ஜவஹர்லால் நேருவின் ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’, பூபதி பூஷணின் ‘பதேர் பாஞ்சாலி’ நாவல் ஆகிய புத்தகங்களுக்கு அட்டைப் படம் வரைந்து புகழ்பெற்றார். பதேர் பாஞ்சாலி கதை இவரைப் பெரிதும் ஈர்த்தது.

l இயக்குநர் சித்தானந்த தாஸ் குப்தாவுடன் இணைந்து கொல்கத்தாவில் திரைப்பட சங்கம் தொடங்கினார். 1950-ல் லண்டன் சென்ற இவர் 3 மாதத்தில் ஏராளமான திரைப்படங்கள் பார்த்தார். நாடு திரும்பியதும், தனக்குள் காவியமாக சுழன்றுகொண்டிருந்த பதேர் பாஞ்சாலியை கலைப்படமாக இயக்க முடிவுசெய்தார்.

l மனைவியின் நகைகளை விற்று படப்பிடிப்பைத் தொடங்கினார். நிதிப் பற்றாக்குறையால் சிரமப்பட்டார். பிரச்சினைகளைத் தாண்டி, 1955-ல் ‘பதேர் பாஞ்சாலி’ வெளிவந்தது. உலக அளவில் தலைசிறந்த இயக்குநராக அவரை இத்திரைப்படம் அடையாளம் காட்டியது.

l இந்தியத் திரைப்படங்கள் மீது உலகின் கவனம் திரும்பியது. அதன் பிறகு அபராஜிதோ, அபுர் சன்சார், தேவி, மஹாநகர், சாருலதா, தீன் கன்யா உள்ளிட்ட இவரது எல்லாப் படைப்புகளுமே உலக அளவில் புகழ்பெற்றன.

l இசையில், குறிப்பாக மேற்கத்திய செவ்வியல் இசையில் அதிக ஆர்வம் உடையவர். சிறந்த பியானோ கலைஞரும்கூட. ‘ரே மிகுந்த இசை ஞானம் கொண்டவர். தன் திரைப்படத்துக்குத் தேவையான கச்சிதமான இசையை, இசை அமைப்பாளரிடம் இருந்து பெற்றுவிடுவார்’ என்பார் பிரபல சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர். அவர் இவரது நெருங்கிய நண்பர்.

l ‘சந்தோஸ்’ என்ற சிறுவருக்கான இதழை ரே நடத்திவந்தார். அதில் சிறுகதைகள், ஓவியங்கள், தேவதைக் கதைகள், மாயாஜாலக் கதைகள், அறிவியல் கதைகள், ஏராளமான கட்டுரைகளை எழுதி வெளியிட்டார்.

l வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கச் சிங்கம் விருது, பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளிக் கரடி விருது, 1965-ல் தேசிய சிறந்த திரைப்படத்துக்கான வெண்தாமரை விருது, பத்ம, பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதாசாஹேப் பால்கே விருது, 1992-ல் பாரத ரத்னா பெற்றுள்ளார்.

l தேசிய விருதுகள், பிலிம் ஃபேர் விருதுகள், மாநில அரசின் விருதுகளையும் பலமுறை பெற்றுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. வாழ்நாள் சாதனைக்கான கவுரவ ஆஸ்கர் (Honorary Oscar) விருது 1992-ல் இவருக்கு வழங்கப்பட்டது.

l உலக அளவில் 20-ம் நூற்றாண்டின் இணையற்ற இயக்குநராகப் போற்றப்பட்ட சத்யஜித் ரே 71 வயதில் (1992) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x