Published : 24 May 2015 01:51 PM
Last Updated : 24 May 2015 01:51 PM

சு.வேலுப்பிள்ளை 10

இலங்கை உருவகக் கதையின் பிதாமகர் என்று போற்றப்பட்டவரும் நாடக ஆசிரியருமான சு.வேலுப்பிள்ளை (Su.Velupillai) பிறந்த தினம் இன்று (மே 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் நாவற்குழியில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் (1921) பிறந்தவர். அங்கு ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு, திருநெல்வேலி சைவ ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். அந்த கல்லூரி உருவாக்கிய பல முக்கிய படைப்பாளிகள் போல இவரும் புத்திலக்கியப் படைப்பாளியாக ஈழத் தமிழ் இலக்கியத் துறையில் முத்திரை பதித்தார்.

* ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கத்தில் கற்று தமிழ்ப் பண்டிதரானார். பண்டைய தமிழ் இலக்கியங்கள் மட்டுமின்றி, நவீன தமிழ் இலக்கியங்களையும் ஆழமாகத் தெரிந்து வைத்திருந்தார்.

* டிக்கோயா தோட்டப் பாடசாலை, ஹற்றன் சென் பொஸ்கோ, திருஞானசம்பந்தர் வித்யாசாலை, மானிப்பாய் இந்துக் கல்லூரி உள்ளிட்ட பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பிறகு அரசு பாடநூல் பிரசுர சபையில் பணியாற்றினார்.

* எந்தவொரு விஷயம் குறித்தும் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்ற பிறகு, மாணவர்களுக்கு மிக எளிமையாக விளக்குவார். தனது கற்பித்தல் திறனால் மாணவர்களைக் கட்டிப்போட்டவர் என்று போற்றப்பட்டார். ‘ஒரு தேசிய இனம் முழுமைக்கும் தமிழ் கற்பித்த மகாமகோபாத்தியாயராக விளங்கியவர் சு.வே.’ என அவருடன் ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருந்த பண்டிதர் பஞ்சாட்சரம் புகழாரம் சூட்டியுள்ளார்.

* புனைகதை, உருவகக் கதை, நாடகங்கள், துணைப்பாட நூல்கள் எழுதுவதிலும் ஈடுபட்டார். இவரது முதல் சிறுகதை ‘கிடைக்காத பலன்’ 1943-ல் ஈழகேசரியில் வெளிவந்தது. ‘மண் வாசனை’, ‘பாற்காவடி’ ஆகிய தலைப்புகளில் இவரது மற்ற சிறுகதைகள் தொகுப்புகளாக வெளிவந்தன.

* ‘மணற்கோவில்’ எனும் கதைக்காக மூதறிஞர் ராஜாஜியின் பாராட்டு களைப் பெற்றவர். செழுமைத் தமிழை நவீனப் படைப்பிலக்கியத்தில் புகுத்திய மூலவர் என்று அறிஞர்களால் போற்றப்படுபவர்.

* இவரது நாடகங்களும் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இலங்கை கலைக் கழகம் 1965-ல் நடத்திய நாடகப் போட்டியில் தனித்துவம் மிக்க இவரது ‘வஞ்சி’ நாடகமும், 1966-ல் இவரது ‘எழிலரசி’ நாடகமும் முதல் பரிசுகளைப் பெற்றன. இவரது நாடகங்கள் 14 வாரங்கள் முதல் 97 வாரங்கள் வரை ஒலிபரப்பப்பட்டன.

* தமிழ் இலக்கியமும் தமிழ் சம்பந்தமான தொழில்களும் பண்டித வர்க்கத்தின் ஏகபோக உரிமை என்ற கருத்தை உடைத்து எறிந்தவர்களில் முக்கியமானவர். நல்ல குணங்கள் நிறைந்தவர். மனித நேயம் மிக்கவர்.

* சங்க காலம் கண்ட மரபுகள், ஒழுக்கங்களை யாழ்ப்பாண மண்ணின் அழகிலும், வாழ்க்கையிலும், இயற்கையிலும் கண்டு அனுபவித்து தனது படைப்புகளில் வெளிக் கொணர்ந்தவர். பிற படைப்புகளைத் தழுவாமல், எந்த காலத்துக்கும் பொருந்தும் வகையில் இவரது படைப்புகள் தனிச்சிறப்புடன் திகழ்வதாக இவரது சக படைப்பாளிகள் கூறியுள்ளனர்.

* ஈழ சிறுகதைகளில் உருவகக் கதையின் முன்னோடியாகத் திகழ்ந்ததுடன், அதை வளர்த்த பெருமையும் இவரையே சாரும். ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் வழியில் வாழ்ந்தவருமான சு.வேலுப்பிள்ளை 86 வயதில் (2007) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x