Published : 21 May 2015 09:02 AM
Last Updated : 21 May 2015 09:02 AM
ஆர். உமாநாத் (1922- 2014) இன்றைய கேரளத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் ஆதிக்க சாதியில் பிறக்க நேரிட்ட கம்யூனிஸ்ட். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக வந்தார். அங்கே அவருக்கு கம்யூனிச இயக்கத்தின் தொடர்பு ஏற்பட்டது. இயக்கத்தின் முழுநேர ஊழியர் ஆனார்.
ஆங்கிலேயர் காலத்து சென்னை மாகாணத்தில் அரசால் தடை செய்யப் பட்ட இயக்கமாக கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. ஆங்கிலேய அரசைக் கவிழ்ப்பதற்காகச் சதி செய்ததாக, அரசு போட்ட ‘சென்னை சதி வழக்கில்’ தமிழகத்தின் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான பி. ராம மூர்த்தியோடு இவரும் கைது செய்யப்பட்டார். அப்போது கிடைத்த மூன்றாண்டு சிறைத் தண்டனையோடு தொடங்கிய அவரது சிறை வாழ்வு, 10 ஆண்டுகாலம் வரை வளர்ந்தது. அரசின் அடக்குமுறையை மீறி ஏழு ஆண்டு காலம் தலைமறைவாகவும் அவர் செயல்பட்டார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தேர்தல் அரசியலில் ஈடுபட்ட அவர், நாடாளுமன்ற உறுப்பினராகவும் சட்ட மன்ற உறுப்பினராகவும் பணியாற்றி னார். தன்னைப் போலவே, கட்சியில் முழு நேரப் பணியாளராகச் செயல் பட்டுவந்த பாப்பா என்ற தனலட்சுமியை அவர் காதலித்து மணந்துகொண்டார். பிராமணராகப் பிறக்க நேரிட்டாலும் பெரியாரின் தலைமையில் தனது சாதி மறுப்புத் திருமணத்தை நடத்திக் கொண்டார்.
தொழிலாளர்களை ஒருங்கிணைப் பதில் தீவிரமாகச் செயல்பட்ட அவர், சிஐடியு என்று சொல்லப்படுகிற இந்தியத் தொழிற்சங்க மையம் எனும் அமைப்பை உருவாக்கிய நிறுவனர் களில் ஒருவர். தமிழகத்தில் கம்யூ னிஸ்ட் கட்சியை வளர்த்த முக்கிய மானவர்களில் ஒருவராகவும் அவர் மாறினார்.
கேரளத்தின் ஒரு மூலையில் வாழ்க்கையைத் தொடங்கிய உமாநாத், நாடு முழுவதும் தொழிலாளர்களைத் திரட்டி, அவர்களுக்காகப் போராடும் ஒரு தேசியத் தலைவராக மாறினார். மிக நீண்ட காலம் அந்தப் பணியைச் செய்த அவர், தனது 92-வது வயதில் திருச்சியில் கடந்த மே 21 அன்று காலமானார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பலவகையான தலைவர்கள் குறுக்கும் நெடுக்குமாகப் பணியாற்றி, தற்போதுள்ள இந்தியச் சமூகத்தைப் பல வண்ணமுள்ள அழகான ஆடையாக நெய்துள்ளனர். அத்தகையவர்களில் ஒருவர்தான் உமாநாத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT