Published : 12 May 2015 05:50 PM
Last Updated : 12 May 2015 05:50 PM
அரசியலே வியாபாரமாகிப் போன காலம் இது. செவ்வாய்க் கிரகத்தில் பிளாட் விற்பனைக்கு வருகிறதென்றால்கூட அதை வாங்கும் தகுதி படைத்தவர்களாக நமது அரசியல்வாதிகள் இருப்பதுதான் இன்று நாம் காணும் நடைமுறை. யாரோ சிலர் கோடியில் புரள யாரோ சிலர் அவர்களுக்கு வக்காலத்துவாங்க இதைத்தான் அரசியல் என்று பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இதனாலேயே அரசியலை சாக்கடை என்று இளைஞர்கள் நினைத்து ஒதுங்கிச் செல்கிறார்கள். உண்மையான மக்கள் நலனையும் அரசியல் வாழ்வை வேள்வியாகவும் நினைக்கும் பெருந்தகைகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணமுடியவில்லை என்பதால் இந்த முடிவுக்கு இளைஞர்கள் வருகிறார்கள்.
ஆனால் அப்படியொருவர் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார், இந்த வயதிலும் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளியவர்களுக்கு எதிராக போராடி தடை உத்தரவு பெற முடியும் என்பது போன்ற நம்பிக்கைகளை தருபவர் தோழர் ஆர்.நல்லகண்ணு. அவரது 90வது பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் கே.ஜீவபாரதி ஒரு தொகுப்புநூலைத் தந்திருக்கிறார். 'எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு' என்ற இந்த நூலில் கிட்டத்தட்ட 64 அறிஞர்களின் கட்டுரைகள் இடம் இடம்பெற்றுள்ளன.
இந்நூலுக்கு இளவேனில் அணிந்துரை வழங்கியிருக்கிறார். அதில், "தனிமையும் ஓய்வும் கிடைக்கும் போதெல்லாம் இலக்கியம் வரலாறு தத்துவம் தொடர்பான நூல்களைப் படித்துக் கொண்டிருப்பார். அண்மையில் அவரை நான் சந்தித்தபோது ராஜம் கிருஷ்ணனின் இறுதி நாட்களைப் பற்றிக் கசிந்துருகினார். ஆன்மா ஆன்மா என்று மெய்சிலிர்க்கப் பேசுகிறோமே, இலக்கியவாதிகள்தாம் ஒரு சமுதாயத்தின் ஆன்மா என்பதை மறந்து விடுகிறோம்.
ஆன்மாவைக் கொன்றுவிட்டு என்ன ஆர்ப்பாட்டம்? மேம்பட்ட சமுதாயம் என்பது அதன் இலக்கியச் செழுமையாலேயே அறியப்படும். சூதாட்டங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் தரப்படும் மரியாதை இங்கே இலக்கியத்துக்குத் தரப்படுவதில்லை என்னும் போக்கு வெட்கக்கேடானது என்று பொருமினார்." என்று இளவேனில் தனது அணிந்துரையில் நினைவுகூருகிறார்.
சாகித்ய அகாதமி விருதுபெற்ற ராஜம் கிருஷ்ணன் வேரும் விழுதும், கரிப்பு மணிகள், மலையருவி என உழைக்கும் மக்கள் வாழ்வை பல்வேறு படைப்புகளாகத் தந்தவர். ஆனால் கடைசி காலத்தில் ஆதரவற்ற நிலையில் முதியோர் இல்லத்தில் இறந்தவர். இவரின் நலிந்த நிலையை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இவரைப் போன்றவர்களை நல்லகண்ணு போன்றவர்கள்தான் பொக்கிஷமாகக் கருதுகிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராக பணியாற்றிவரும் நல்லகண்ணுவின் இந்நூல் எங்கும் பல அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் நம் பார்வைக்குக் கிடைத்த சில துளிகள்:
தெருவில் படுத்துறங்கினார்
துறையூர் பி.கணேசன் கட்டுரையிலிருந்து...
சுமார் 33 வருடங்களுக்கு முன்னால் 1972ல் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் சிங்காளந்தபுரம் ஊராட்சி தெற்குயூரில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் தோழர் நல்லகண்ணுவும், அன்றைய நாகை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.ஜி.முருகையனும் கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டம் முடிந்தது. இரவு அந்தக் கிராமத்தில் தங்க வசதியில்லை என்பதால் தலைவர்களை சைக்கிளில் வைத்து அழைத்து வந்தோம்.
துறையூரில் லாட்ஜ் ஒன்றில் தங்க வைக்க நினைத்து ஏற்பாடு செய்ய முயன்றோம். எளிமையும், நேர்மையும் மிக்க இரண்டு தலைவர்களும் மறுத்துவிட்டனர். லாட்ஜுக்கு வெளியே இருந்த காலியான இடத்தில் பேப்பரை விரித்து, கொண்டுவந்த பேக்கை தலையணையாக வைத்து தூங்க ஆரம்பித்துவிட்டனர். மக்களுக்காக தொண்டாற்றும் உத்தமத் தலைவர்கள் தூங்கிவிட்டனர். ஆனால் தலைவர்களை பெருமிதமாக நினைத்த எங்கள் மனம் அன்று உறங்கவில்லை.
அதிக நாள் சிறையில்
கே.ஆதிமூலம் கட்டுரையிலிருந்து... சில பகுதிகள்:
1949ல் கட்சி தடைசெய்யப்பட்ட பின் மீண்டும் நெல்லை மாவட்டத்துக்கே சென்று தோழர்கள் பாலதண்டாயுதம், மாணிக்கம் போன்றவர்களோடு தோழர் நல்லக்கண்ணு அவர்களும் தலைமறைவாக இருந்து நெல்லை மாவட்டத்தில் கட்சிப் பணியாற்றினார். அந்த சமயத்தில் பல தீவிரமான இயக்கங்களை நடத்தியதால் நெல்லை சதிவழக்கில் சேர்க்கப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். மதுரை சிறையில் இருந்தபோது ஏராளமான நூல்களைப் படித்து தன்னுடைய மார்க்சிய அறிவை வளர்த்துக்கொண்டார். மதுரை சிறையில் தோழர் பாலதண்டாயுதத்துக்கு அடுத்தபடியாக, அதிக நாள் சிறையில் இருந்தவர் தோழர் நல்லகண்ணு ஆவார்.
விவசாயிகளுக்கு நிலம் பெற்றுத்தருதல்
சிறையிலிருந்து விடுதலை ஆனதற்கு பின்னர் நெல்லை மாவட்ட விவசாய சங்க செயலாளராக தொடர்ந்து தனது விவசாயப் பணியை தொடர்ந்தார். ஸ்ரீவைகுண்டம் பக்கத்தில் ஆறுமுகமங்களம், பேத்துவார் விவசாயிகளுக்கு நிலத்தில் எந்த உரிமையும் இல்லை. தோழர் நல்லகண்ணு தொடர்ந்து போராடியதன் விளைவாக இப்பொழுது அந்த விவசாயிகளுக்கு நிலங்கள் சொந்தமாக்கப்பட்டன.
அங்கு முற்றிலும் 'நிலச்சுவாந்தாரி முறை' மறைந்து போய்விட்டது. கிராமத்தைப் போன்று நிதிக்காக வசூல் செய்வது பாசிக் குத்தகை வசூல், மேய்ச்சலுக்கு வசூல் போன்ற வகைகளில் கிராம நிதியாக வசூல் செய்து கிராம அபிவிருத்தி வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன. கிராம வரவு செலவு பார்க்கும்போதும் தோழர் நல்லகண்ணு அவர்களை வைத்துத்தான் பார்ப்பது இப்பொழுதும் நடந்து வருகிறது.
நீர்ப்பாசனத்துக்காக உண்ணாவிரதம்
ஆம்பூர் ஆழ்வார்குறிச்சி போன்ற கிராமங்களுக்கு பாசன வசதிக்காக, ராமநதி, கடனாநதி அணைகள் கட்டுவதற்கு தோழர் நல்லகண்ணுவும், தோழர் முருகானந்தமும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து அரசிடம் உத்தரவாதம் பெற்று அணைகள் கட்டப்பட்டு அதன்கீழ் உள்ள ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, பாப்பாங்குளம் போன்ற ஏராளமான கிராமங்களுக்கு நீர்ப்பாசன உத்தரவாதம் ஏற்பட்டிருக்கிறது.
வறட்சிக் காலங்களில் கூட இரண்டு அணைகள் மூலம் தண்ணீர் வசதி பெற்று பூரண விளைச்சல் ஏற்பட்டு வருகிறது. மேலும் தோழர் தோழர் நல்லகண்ணு களக்காடு போன்ற பகுதிகளிலும் தோழர் முத்து மாணிக்கம் போன்றவர்களுடன் சேர்ந்து ஏராளமான கிராமங்களில் பணியை மேற்கொண்டார்.
ஜப்திகளைத் தடுக்கப் போராட்டம்
கோவில்பட்டி தாலுகாவில் வரி பாக்கிக்காக விவசாயிகளுடைய ஏர் மாடுகளை அதிகாரிகள் ஜப்தி செய்து ஏலமிடும் போது ஏலத்தில் எடுக்கவிடாமல் தடுக்க நல்லகண்ணு, அழகர்சாமி ஆகியோர் தலைமையில் ஒரு பெரும் இயக்கம் நடத்தப்பட்டது.
அதில் வி.வி.ரெங்கசாமி என்பவரின் மாட்டை, அதிகாரிகள் கைப்பற்றி பல ஊர்களில் ஏலமிட்டும் யாரும் ஏலம் எடுக்கவில்லை. இறுதியாக தோழர் ரெங்கசாமியிடமே மாட்டை அதிகாரிகள் ஒப்படைத்தார்கள். இதுபோன்ற பல இயக்கங்கள் மாவட்டம் முழுவதும் தோழர் நல்லகண்ணு தலைமையில் நடத்தப்பட்டன.
தோழரின் வாழ்விலிருந்து இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் இந்நூலை அலங்கரிக்கின்றன.
மகாத்மா காந்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் கூறும்போது “இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக பூமியில் வாழ்ந்தார் என்பதையே வருங்கால சந்ததியினர் நம்ப மறுப்பார்கள்” என்று கூறினார். இந்த பொன்னான சொற்கள் நல்லகண்ணுவுக்கும் பொருந்தும்தானே.
நூலின் பெயர்: எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு
ஆசிரியர்: கே.ஜீவபாரதி
பக: 288, விலை: 180
வெளியீடு: ஜீவா பதிப்பகம், எண்.8 (பழைய எண்.388)
சீனிவாசன் தெரு, (தி.நகர் பேருந்து நிலையம் எதிரில்),
தி.நகர், சென்னை 600 017.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT