Published : 18 May 2015 09:53 AM
Last Updated : 18 May 2015 09:53 AM
பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l பெர்ஷியாவின் குராசன் மாகாணத் தலைநகர் நிஷாப்பூரில் (தற்போது ஈரானில் உள்ளது) 1048-ல் பிறந்தார். கூடாரம் தயாரிக்கும் குடும்பத்தில் பிறந்தவர் என்று கருதப்படுகிறது. வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பால்க் என்ற நகரில் சிறு வயதில் சில காலம் வசித்தார்.
l ஷேக் முகமது மன்சூரி என்பவரிடம் கல்வி கற்றார். பின்னர் குராசன் பகுதியின் சிறந்த ஆசிரியரான இமாம் மோவாபாக் நிஷாபுரியிடம் கல்வி பயின்றார். தத்துவமும் கற்றார். மிகச் சிறந்த கணிதவியலாளரான இவர், எண்கணிதம், இசை, இயற்கணிதம் குறித்த புத்தகங்களை 25 வயதுக்குள் எழுதினார்.
l உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் என்ற இடத்தில் 1070-ல் குடியேறினார். அங்கு இவருக்கு அபுதாஹிர் என்பவரின் ஆதரவு கிடைத்தது. பரந்த உலகப் பார்வையுடன், வாழ்க்கையில் ஒரு இலக்கை வகுத்து செயல்பட்ட இவர், ஒரு சூஃபி போன்ற வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். பல திறன்களைப் பெற்றிருந்தாலும், ஒரு கவிஞராகத்தான் மிகவும் புகழ்பெற்றார்.
l தனக்கென ஒரு வாழ்க்கை நெறியை வகுத்துக்கொண்டு அவற்றை ரூபயாத் (Rubaiyat) எனப்படும் நான்குவரிக் கவிதைகளாக வெளிப்படுத்தினார். தனது துணிச்சலான கருத்துகளால் பல எதிர்ப்புகளை சந்தித்தார்.
l இவர் வித்தியாசமான கவிஞர். கடவுள், ரோஜா மலர்கள், திராட்சை ரசம், அதை ஊற்றும் இளம்பெண்கள் இவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட இவரது கவிதைகளில் வேதாந்தமும் பரவிக் கிடக்கிறது. மதுவைப் பற்றி மிக அற்புதமாக பாடியுள்ளார். உமர் கய்யாமை நாத்திகவாதி என்று கூறுபவர்களும் உண்டு.
l இயற்கணிதப் புதிர்களுக்கான செயல்விளக்கம் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதினார். அதில் முப்படிச் சமன்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கான வடிவியல் முறையை வகுத்தார். இருபடிச் சமன்பாடுகளைத் தீர்க்கும் விதியையும் தந்தார். இவர் இயற்றிய இயற்கணக்கியல், பெர்ஷியாவில் பாடநூலாகப் பயன்படுத்தப்பட்டது.
l நாள்காட்டி சீர்திருத்தத்துக்காக வானியல் ஆய்வுகள் மேற்கொள்ள சுல்தான் மாலிக் ஷா இவரை அழைத்தார். இதற்காக எஸ்ஃபகான் என்ற இடத்தில் ஒரு கண்காணிப்பு மையம் நிறுவப்பட்டது.
l நாள்காட்டியில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு ஜலாலி (Jalali) என்ற புதிய நாள்காட்டி உருவாக்கப்பட்டது. ஓராண்டு என்பது 365.24219858156 நாட்கள் என்று துல்லியமாக கணக்கிட்டார் உமர் கய்யாம்.
l நாட்டில் 1092-ல் புரட்சி உருவானது. பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். மாலிக்கும் இறந்தார். ஆட்சி கைமாறியது. வானியல் ஆய்வுக்கான நிதி நிறுத்தப்பட்டது. அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் இவரை நாத்திகவாதி என்றனர் புரட்சியாளர்கள். இவரும் தாக்கப்பட்டார். தன் எண்ணங்களைக் கவிதைகளாக வடித்தார்.
l இவரது நான்குவரிக் கவிதைகளை ஆங்கில எழுத்தாளர் எட்வர்டு ஃபிட்ஸ்ஜெரால்டு மொழிபெயர்த்து, ‘ரூபயாத் ஆஃப் உமர் கய்யாம்’ என்ற கவிதைத் தொகுப்பாக 1859-ல் வெளியிட்டார். அது உலகப் புகழ் பெற்றது. தத்துவவாதி, வானியலாளர், கணிதவியலாளர் என பன்முகத் திறன் கொண்டிருந்த உமர் கய்யாம் 83 வயதில் (1131) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT