Published : 26 May 2015 06:40 PM
Last Updated : 26 May 2015 06:40 PM

நெட்டெழுத்து: பல தளங்களில் பிரித்து மேயும் கிரி!

எழுத்துக்களில் பலவகை உண்டு. இலக்கியம் ஒரு வகை, ஜனரஞ்சகம் ஒரு வகை. அரசியல் மற்றோரு வகை. வர்த்தகம், திகில், ஆன்மீகம், பொருளாதாரம் மற்றும் பல வகைகள். தொழில்நுட்பம் சார்ந்தும் எழுத்துகள் உண்டு. இன்னும் எத்தனையோ பதிவர்கள் இருந்தாலும் மெலிதான நகைச்சுவை இழையோடுகிற பாணியிலும், வாசகனுக்கு வெகு நெருக்கத்தில் பயணிக்கும் பாவத்திலும் எழுதுபவர்கள்தான் எழுத்துலகில் நிலைத்திருக்கிறார்கள். அத்தகையோரின் வரிசையில் இடம் பிடிக்கக் காத்திருக்கிறார் கிரி.

பிறந்து வளர்ந்தது கோபிச்செட்டி பாளையம். சிங்கப்பூரில் பணிபுரியும் கிரி, பதிவு எழுத ஆரம்பித்தது 2006-ம் ஆண்டில். ''தமிழ்மணம்'' திரட்டியில் இணைந்த பிறகு பல வாசகர்களைப் பெற்றிருக்கிறார்.

"தமிழைப் பிழையில்லாமல் எழுதுவதே தமிழுக்கு செய்யும் பெரிய தொண்டு!" என்னும் கிரி, மற்றவர்களோடு தன் கருத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக எழுத ஆரம்பித்திருக்கிறார். நாளடைவில் தமிழின் மீது ஆர்வம் கொண்டு தொடர்ந்து எழுத ஆரம்பித்தவர், அதன் வழி ஏராளமான அனுபவங்களைக் கடந்திருக்கிறார். தொழில்நுட்பம் குறித்த இவரின் கட்டுரைகள் பல, இணைய வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

வளர்ந்து வரும் நவீன உலகில், நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், டவுண்லோட், சாஃப்ட்வேர் போன்ற தொழில்நுட்பங்களின் பெயர்களைத் தமிழாக்கம் செய்து அதையே பயன்படுத்தி வருகிறார். நண்பர்களையும் பயன்படுத்தச் சொல்லிப் பரிந்துரைக்கிறார். அதன் வழியாய்த் தொலைந்து போகும் தமிழை மீட்டெடுக்கலாம் என்கிறார்.

வாசிக்க: >தமிழ் கலைச் சொற்கள்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் குறித்த அறிமுகம் அனேகமாக யாருக்குமே தேவைப்படாது. இளம் தலைமுறையும் இன்றளவில் ரசித்துப் படிக்கும் நாவல்களில் பொன்னியின் செல்வனும் ஒன்று. படித்திராதவர்களுக்கு அந்நூல் குறித்த தனது விமர்சனத்தை எளிய நடையில் எடுத்து வைத்திருக்கிறார் கிரி. கதாபாத்திரங்களைப் பற்றிய அறிமுகங்கள், அவர்களின் உடல்மொழி, உணர்வுக் குவியல்கள், சைவம், வைணவம், அழகியல் என நாவல் பற்றிய இவரின் விரிவான முன்னுரைகள் படித்தவர்களையே திரும்பப் படிக்கத் தூண்டும் வல்லமையோடு இருக்கிறது.

வாசிக்க: >பொன்னியின் செல்வன் புத்தக விமர்சனம்

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆர்வத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர்கள், அது தொடர்பான செய்திகளில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்காகவும், தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்களுக்காகவும் "இருவரி இணையத் தொழில்நுட்பச் செய்திகள்" என்னும் தலைப்பில் தொடர்ந்து எழுதி வருகிறார். தேவையான செய்திகளுக்கு வலைதள சுட்டிகளோடு காணொளிக்கான இணைப்புகளையும் தருகிறார்.

வாசிக்க: >"இருவரி இணையத் தொழில்நுட்பச் செய்திகள்"

மிக விரிவாகவும், விளக்கமாகவும் எழுதப்பட்ட "இணைய சம வாய்ப்பு" குறித்த இவரின் இணையக்கட்டணம் குறித்த கட்டுரை பலரால் பகிரப்பட்டது.

வாசிக்க: >மிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]

"நான் உங்களை செம்மொழியில் பேசுங்கள் என்று கூறவில்லை, தற்போதைய காலகட்டத்தில் அப்படிக் கூறவும் முடியாது. ஆனால், முடிந்தவரை எங்கெல்லாம் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்துங்கள். தமிழ் வார்த்தைகளைப் புறக்கணிக்காதீர்கள், பேசும்போது இல்லையென்றாலும் எழுதும்போது பயன்படுத்துங்கள். கூச்சமாக நினைக்காதீர்கள்.

Coffeeயை நான் தமிழில் 'குளம்பி' என்று எழுத வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை, Coffee (காஃபி) தமிழ் வார்த்தையாகி(!) பன்னெடுங்காலம் ஆகி விட்டது. ரோடு என்பதை சாலை என்றோ, ஆபிஸ் என்பதை அலுவலகம் என்றோ, கியூ என்பதை வரிசை என்றோ எழுதுவதால் என்ன பெரிய இழுக்கு வந்து விடப்போகிறது?!

பல நூற்றாண்டு பழமை வாய்ந்த நம் தமிழ் மொழியை நாகரீகம் என்ற பெயரில் தமிழர்களே அழிப்பது, தெரிந்தும் எழுத்துப் பிழையோடு எழுதுவது நாம் நம் தாய் மொழிக்கு செய்யும் துரோகம். நீங்கள் மனது வைத்தால் மட்டுமே இந்த இழி நிலை மாறும், தமிழ் உயர்வு பெறும்!" என்கிறார் கிரி.

வாசிக்க: >தமிழ் ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள்

"ஆங்கிலச் சொற்களை தமிழ்ப்படுத்துவது மிக நல்ல விஷயம்தான். அதற்காக பெயர்ச்சொல் உட்பட அனைத்தையுமே தமிழ்ப்படுத்துவது எந்த வகையில் சரி என்பது எனக்குத் தெரியவில்லை. நம்மவர்கள் தமிழ்ப் 'படுத்துகிறேன்' என்று நிறுவனங்களின் பெயர்களை எல்லாம் தமிழ்ப்படுத்தி வருகிறார்கள்.

ஃபைர்ஃபாக்ஸ், க்ரோம் என்பது பிராண்ட் பெயர். அவர்கள் தரும் அந்தப் பொருளின் அல்லது சேவையின் பெயர் ஆங்கிலத்தில் பிரவுசர். இதில் இந்த சேவையின் பெயரைத்தான் நாம் தமிழில் "உலவி" என்று மாற்ற வேண்டுமே தவிர, அந்த நிறுவனங்களின் பெயரை அல்ல, "நெருப்பு நரி" போல!" என்று ஆதங்கப்படுகிறார் கிரி.

வாசிக்க: >facebook "முகநூல்" என்றால் Lady Gaga "பெண் காகா" வா?

நம் மக்களின் பொறுமையின்மை குறித்து உளவியல் ரீதியாக அலசும் கிரி, "எந்த இடம் சென்றாலும் நமக்கு முன்னால் ஒரு பெரிய கும்பல் காத்திருக்கும். அதோடு மேலை நாடுகளைப் போலக் கட்டமைப்பு இல்லாததால் ஒழுங்கு இல்லாமல் போவதே பல பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகிறது. இந்தியாவில் ஒவ்வொரு விசயத்திற்கும் பெரும் கூட்டம் காத்து இருப்பதால் இயல்பாகவே மக்கள் பொறுமையற்றவர்களாகி விட்டனர்" என்கிறார் தனது >நமக்கு ஏன் பொறுமையில்லை?! கட்டுரையில்.

இவை போக ஏராளமான பயணக்கட்டுரைகளை, திரை விமர்சனங்களை, வாழ்க்கை அனுபவங்களை, இன்னும் பல தொடர் பதிவுகளை பல்சுவையோடு எழுதிவரும் கிரியின் வலைதள முகவரி >http://www.giriblog.com/

முந்தைய அத்தியாயம்: >நெட்டெழுத்து: என்றும் தணியாத 'விமரிசனம்'

| நீங்கள் வாசித்து வரும் நல்ல வலைப்பதிவு, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களைப் பரிந்துரைக்க ramaniprabhadevi.s@thehindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு இணைப்புகளை அனுப்பலாமே! |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x