Published : 19 May 2015 08:28 AM
Last Updated : 19 May 2015 08:28 AM
அமெரிக்காவில் கருப்பின மக்களின் உரிமைக்காகப் போராடிய தலைவர் என்றால் நம் நினைவுக்கு வருபவர் மார்ட்டின் லூதர் கிங்தான். காந்தியின் அகிம்சைக் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டு, சாத்வீகமான முறையில் போராடியவர் அவர். அவரது கால கட்டத்தில் கருப்பின விடுதலை, வெள்ளையினத்தவரின் அடக்கு முறைக்கு எதிரான போராட்டம் என்று தீவிரமாக இயங்கியவர் மால்கம் எக்ஸ். வெள்ளையினத்தவரும் கருப்பின மக்களும் ஒற்றுமையாக இருக்க முடியாது என்று பகிரங்கமாகப் பேசியவர். அந்த வகையில் மார்ட்டின் லூதர் கிங்குக்கு முற்றிலும் எதிரானவர். நெப்ராஸ்கா மாகாணத்தின் ஒமாஹா நகரில் 1925 மே 19-ல் பிறந்தவர் இவர். பெற்றோர் வைத்த பெயர் மால்கம் லிட்டில். அவரது தந்தை ஏர்ல் லிட்டிலும் கருப்பின விடுதலைப் போராளிதான். இந்தக் காரணத்துக்காகவே ‘பிளாக் லீஜியான்’ எனும் வெள்ளையின நிறவெறி அமைப்பின் உறுப்பினர்களால் படுகொலைசெய்யப்பட்டார் ஏர்ல் லிட்டில்.
வறுமை, வன்முறைச் சம்பவங்கள் நிறைந்த இளமைப் பருவத்தைக் கழிக்க நேரிட்ட மால்கம் லிட்டில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டார். 1946-ல் திருட்டுக் குற்றத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மால்கமுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப் பட்டது. எனினும் சிறையில் ஜான் பெம்ப்ரி என்பவரின் அறிமுகம், புத்தக வாசிப்பை நோக்கி அவரைத் திருப்பியது. லிட்டில் எனும் குடும்பப் பெயர், அடிமை வம்சத்தை நினைவுபடுத்துவதால் தனது பெயரை மால்கம்-எக்ஸ் என்று மாற்றிக்கொண்டார். இந்தக் காலகட்டத்தில் ‘நேஷன் ஆஃப் இஸ்லாம்’ எனும் இயக்கம் அமெரிக் காவில் வசித்த கருப்பின மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மால்கமின் சகோதரரும் அந்த இயக்கத்தில் இருந்தார். 7 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் இணைந்தார். அந்த அமைப்பின் தலைவர் எலிஜா முகமது மீது அளப் பரிய நம்பிக்கை வைத்திருந்தார். இஸ்லாம் மதத்துக்கு மாறிய அவர், தனது பெயரை எல் ஹாஜ் மாலிக் எல் ஷபாஜ் என்று மாற்றிக்கொண்டார். கூர்ந்த அறிவும் துணிச்சலும் மிக்க அவருக்குக் கருப்பின மக்களிடம் செல்வாக்கு அதிகரித்தது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க பல உரைகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். இதற்கிடையே எலிஜா முகமதுவின் சில நடவடிக்கைகள் மால்கம் எக்ஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தின. இதையடுத்து, நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பிலிருந்து, விலகி ‘தி முஸ்லிம் மாஸ்க்’ எனும் பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கினார். மெக்காவுக்குப் புனிதப் பயணம் சென்றுவந்தார். ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம்செய்தார். இந்தப் பயணங்கள் கருப்பின மக்கள் மட்டுமல்லாமல், பிற இனத்தவர் குறித்த பார்வையை அவருக்குள் விதைத்தன. இதற்கிடையே அமைப்பிலிருந்து வெளியேறிவிட்டதால் நேஷன் ஆஃப் இஸ்லாம் தலைமை அவர் மீது அதிருப்தியில் இருந்தது. 1965 பிப்ரவரி 21-ல் நியூயார்க் நகரின் ஆடுபான் பால்ரூம் அரங்கில் பேசிக்கொண்டிருந்த அவரை, அந்த அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT