Last Updated : 31 May, 2015 09:13 AM

 

Published : 31 May 2015 09:13 AM
Last Updated : 31 May 2015 09:13 AM

சொல்லத் தோணுது 36: காசிருந்தால் வாங்கலாம்!

எந்தப் பொறுப்பும் அற்ற மக்களையாவது என்றைக்காவது ஒருநாள் சிந்திக்க வைத்துவிட முடியும். இம்மக்களுக்கு அரணாக இருக்கும் அரசை யார்தான் சிந்திக்க வைப்பது? சமூகத்தின் எந்த சிக்கல்களும் அவர்களின் காதுகளுக்கு எட்டியதுபோல் தோன்றவில்லை.

வாரம் ஒருமுறை ஊடகங்களை சந்திப்பேன் எனக்கூறிவிட்டு ஆட்சி முடியும் வரை அதை நிறைவேற்றாத அரசாங்கம் யார் மூலமாக மக்களின் தேவையை உணர்ந்து கொள்கிறது? மக்களாட்சியின் தூண்களில் நான்காவதான ஊடகங்களே ஆட்சியாளர்களை நெருங்க முடியாத பொழுது, வாய்க்கும் வயிற்றுக்குமே திண்டாடிக் கொண்டிருக்கின்ற ஒரு சாதாரண குடிமகன் எவ்வாறு அவனது கோரிக்கைகளை இந்த அரசிடம் எடுத்துக்கூற முடியும்?

இப்போது எந்தத் துறைக்கு எந்த அமைச்சர்கள், அவர்களின் பெயர்கள்தான் என்ன என்பது ஊடக நண்பர்களுக்கேத் தெரியவில்லை.விபத்துக்குள்ளாகும் பொழுதும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்படும்பொழுதும், பதவி மாற்றம் அல்லது நீக்கம் செய்யும்பொழுது மட்டுமே அவர்கள் குறித்த செய்திகள் வெளியாகின்றன.

மனிதனை உருவாக்குகின்ற மனித முயற்சியே கல்வி எனக் கூறலாம். அந்தக் கல்வியைப் பெறுவதற்காக ஒவ்வொரு சாதாரண மனிதனும் இன்று எவ்வாறு எத்தனை சோதனைகளையும், தடைகளையும், போராட்டங்களையும் கடக்க வேண்டியிருக்கிறது!

இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தர வேண்டிய அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவ வசதிகள்கூட தனியார் வசம் ஒப்படைத்து விட்டதால் ஏற்படுகின்ற இன்னல்கள் கணக்கற்றவைகள். ஈ, எறும்பு போல், பறவை விலங்கினங்கள் போல் தினமும் கை, கால்களைக் கொண்டு உழைதால் மட்டுமே உணவு கிடைக்கும் எனும் நிலையில் இருக்கும் அன்றாடங்காய்ச்சி மக்கள் இந்தக் கல்வியைப் பெறுவதற்காகவும், நோய்களிலிருந்து உடலைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் படும் பாட்டை கடமைப்பட்டவர்கள் உணரவேயில்லை. அதனால்தான் இவைகளை தனியாரிடம் கொடுத்துவிட்டு வருவாய் தரும் மதுவை விற்பதிலேயே கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார்கள்.

அரசு பொறுப்பிலிருந்து நழுவியதால் அந்தச் சுமை முழுக்க பெற்றோர்களின் தலையில் விழுந்து விட்டது. அரசாங்கம் இந்தப் பிள்ளைகளுக்கு பணம் செலவில்லாத கல்வித் தந்து பொறுப்புடன் செயல்பட்டிருந்தால் தன் உழைப்பையும், இம்மக்கள், இம்மண், இந்நாடு என சிந்தித்து கடமையாற்றுவான். அவனிடம் பணம் வாங்கிக் கொண்டு கொடுத்ததால் தன் குடும்பம், தன் நலம் மட்டுமே என சமூகத்திலிருந்து கழன்று விடுகிறான்.

சொர்க்கவாசலை திறந்து வைத்துவிட்டோம் எனச் சொல்லித்தான் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார்கள்.விடுதலைபெற்று 67 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்னுங்கூட உயர்கல்வி என்பது சாதாரண மக்களுக்கு கனவாகவும் எட்டாக்கனியாகவும் இருந்து கொண்டிருக்கிறது.வசதியும், வாய்ப்ப்பும், வலிமையும் படைத்த மேட்டுக் குடியினர் அதிகப் பணம் கொடுத்து பெறும் இக்கல்வி எவ்வளவு ஆற்றல் திறமைகள் இருந்தாலும் எளிதில் ஒரு சாதாரண மனிதனுக்குக் கிடைத்து விடுவதில்லை.

ஏற்கெனவே படித்து முடித்து வேலையில்லாமல் அலைபவர்கள் ஒரு கோடியைத் தாண்டிவிட்ட நிலையில் இன்னும்கூட தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு அலையும் பொறியியல் பட்டதாரிகளாக மாற்றிவிட்டதோடு அல்லாமல் அவர்களுக்கு படிக்கக் கடன் கொடுத்து கடனாளியாகவும் மாற்றிவிட்டப் பெருமை அரசாங்கத்தையே சாரும்.

500 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்ணை 41 பேர் பெறும் மாநிலமாக இருப்பது எல்லோருக்கும் பெருமைதான். உண்மையில் இவர்களை உருவாக்கிய கல்வி தரமானது என்றால் ஏற்கெனவே இதேபோன்று அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களைக் கொண்டு எந்த மாதிரியான சமுதாயத்தை உருவாக்கி விட்டோம்.

என் உறவுக்காரப்பெண் ஒருத்தி ஒரு கிராமப் பள்ளியில் படித்துவிட்டு 1122 மதிப்பெண்களை பெற்றுவிட்டாள் என அனைவரும் மகிழ்ந்தது போலவே நானும் மகிழ்ந்தேன். முன்பின் நகரத்தை,கல்லூரியைப் பார்த்தறியாதவள் என்பதால் உயர்கல்விக்கான கல்லூரியைத் தேர்வு செய்யும் பொறுப்பை நானே ஏற்றுக் கொண்டேன். தேர்வுமுடிவு தெரிந்த நாளிலிருந்து தொடங்கப்பட்ட இது தொடர்பான வேலைகள் நேற்றுதான் ஒருவாழியாக முடிந்தது. வெறும் கையெழுத்தை மட்டுமே எழுதத்தெரிந்த அவளின் தந்தை தினமும் காலையில் எழுந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் போய் நின்றால் இரவுதான் கிராமம் திரும்புவார். அவருக்கு யாரைப் பார்த்தாலும் கைகட்டி மரியாதை கொடுக்க மட்டுமேத் தெரிந்திருக்கிறது.

இருப்பிடம், வருமானம்,முதல் பட்டதாரி போன்ற சான்றிதழ்களைப்பெற அவர் பட்டப்பாட்டினை என்னால் விளக்கி மாளாது. இத்தனைக்கும் நாள்தோறும் அவர்கள் கூறும் நேரத்துக்கொல்லாம் போய் வாசலிலேயே நின்று விடுவார். கடைசிநாள் நெருங்கிவிட்டதைக் காரணம் காட்டி எனது நண்பர் ஒருவர் உடன் சென்று அழுத்தம் கொத்தப்பின்தான் அந்தத்தாள்கள் இறுதிநாளில் கைக்குக்கிடைத்தது.

இவ்வாறு ஒவ்வொரு வட்டாச்சியர் அலுவலகத்திலும் தினமும் பிழைக்கிற கூலிவேலைப்பிழைப்பை விட்டுவிட்டு கால்கடுக்க பசியுடன் தெருநாய்போல காத்துக்கிடக்கும் பொற்றோர்கள் எந்த பாவத்தைச் செய்தார்கள். இந்த தாளைக் கொடுப்பதற்கு அவர்களை எத்தனை முறை எங்கெல்லாம் அலைய வைக்கிறார்கள்.

தானேபுயலில் தாக்குப்பிடித்து உயிர்வாழும் மரத்திலிருந்து ஒரு பலாக்காயுடன் தந்தையும் மகளும் சென்னை வந்து நான்கு நாட்களாக என் வீட்டிலேயேத் தங்கியிருந்தார்கள். அந்தப்பளியிலேயே முதல் மாணவியாக அனைவராலும் பாராட்டைப் பெற்று வந்தவளுக்கு மேற்படிப்பாக எதைத்தேர்வு செய்வது என்கிற தெளிவில்லை; விண்ணப்பங்களை நிரப்பத் தெரியவில்லை. கணினி வலைதளங்கள் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்கிற அறிவும் இல்லை. எந்தப்படிப்பைச் சொன்னாலும் படிக்கிறேன் என்கிறாள். மூன்று நாட்கள் இரண்டுபேர் உதவிசெய்து அவள் பெயரில் ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி இணையதளம் மூலம் நிரப்பி பணம் செலுத்தி விண்ணப்பித்தோம்.

கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க அவர்கள் பட்ட பாட்டை கண்டு கலங்கிவிட்டேன். நகரத்து மாணவர்களோடு கிராமத்து மாணவர்கள் எதிலெல்லாம் போட்டிப்போட வேண்டியிருக்கிறது? எந்தெந்த கல்லூரிகளில் எந்தெந்தப் பாடங்களைப் படிக்கலாம் என்கின்ற ஆலோசனைகளைத் தரவேண்டியது இந்த அரசாங்கம்தான். ஆனால், அதற்கோ வேறு வேலைகள் இருப்பதால் தனியார் தொலைக்காட்சிகளில் பணத்தைக் கொடுத்துவிட்டு கல்விக் கொள்ளையர்கள் அவரவர்களுக்கு சாதகமாக மாணவர்களை வலைவீசி பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். பின்னிரவு நேரங்களில் தொலைக்காட்சிகளில் இனவிருத்தி ஐய்யங்களுக்கு பதிலளித்து லேகியம் விற்பதுபோல கல்வி திறனாய்வாளர்கள் ஆலோசனை தந்து கொண்டிருக்கிறார்கள்.

விவசாயக் கல்லூரிகளையும் தனியார் மயமாக்கிவிட்டக் கொடுமை நம் நாட்டில்தான் நடந்திருக்கிறது. விவசாயம் தொடர்பான எந்தவித அடிப்படை அறிவும் இல்லாதவர்கள் 16 பாடப்பிரிவுகளைப் பார்த்து ஏதாவதொன்றை தேர்வு செய்துகொள்ள வேண்டும். அதை இணையதளம் மூலமாக மட்டுமே செய்ய முடியும். எந்த விவரமும் அறியாத குழப்ப நிலையிலுள்ள ஏழை எளிய மாணவனால் எவ்வாறு இதை விண்ணப்பிக்க இயலும்?விண்ணப்பப் படிவங்களுக்கு, கலந்தாய்வுகளுக்கு இணைப்புச் சான்றிதழ்களுக்கு சான்றொப்பங்களுக்கு என எல்லாவற்றுக்கும் பணத்தை செலவு செய்து அலையும் இந்நிலை தொடரத்தான் வேண்டுமா?

ஐ.ஐ.டி., ஐ.எம்.எம்., எல்லாம் வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தானா? துணை வேந்தர்களின் தகுதியும்,தரமும், பதவிபெரும் முறைகளையும் ஊடகங்கள் மூலமாக அறியும் பொழுது அவர்களின் பொறுப்பில் இயங்கும் கல்லூரிகளிலிருந்து இந்த ஏழைகளுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த நியாயம் கிடைக்கும்?

கல்வியின் தேவையையும், நோக்கத்தையும் புரிந்துகொள்ளாமல் அதையும் வணிகமயமாகப் பார்க்கும் அரசாங்கம் உள்ளவரை சமுதாயத்தில் எந்த மாற்றங்களும் நிகழப்போவதில்லை!

- சொல்லத் தோணுது…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x