Last Updated : 21 Apr, 2015 08:50 AM

 

Published : 21 Apr 2015 08:50 AM
Last Updated : 21 Apr 2015 08:50 AM

இன்று அன்று 1989 | ஏப்ரல் 21: தொடங்கியது தியானென்மென் சதுக்கப் போராட்டம்!

26 ஆண்டுகளுக்கு முன் சீனாவின் பெய்ஜிங் நகர தியானென்மென் சதுக்கத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் இன்றளவும் பேசப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிலரின் ஊழல்கள், அரசின் கெடுபிடிகள், பணவீக்கம் உள்ளிட்ட விஷயங்களால் மனக் கசப்புடன் இருந்த சீன மக்கள், 1989 ஏப்ரல் மாதம் போராட்டத்தில் இறங்கினர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரும் சீர்திருத்தவாதியுமான ஹு யாவோபாங்கும் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தார். இதனால், பதவியிலிருந்து நீக்கப்பட்டார். சில நாட்களில் மாரடைப்பால் அவர் மரணமடைந்தார். இதையடுத்து, 1989 ஏப்ரல் 21-ல் தியானென்மென் சதுக்கத்தில் ஏராளமான மாணவர்கள் குவிந்தனர்.

கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று எச்சரிக்கப்பட்ட பின்னரும், 40 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தியானென்மென் சதுக்கத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார்கள். தொழிலாளர்கள், அறிவுஜீவிகள், பொதுமக்கள் என்று லட்சக் கணக்கானோர் அங்கு குவிந்தார்கள். மே 20-ல் நெருக்கடி நிலையை சீன அரசு அறிவித்தது. இதையடுத்து, ராணுவ டாங்கிகளுடன் ஏராளமான ராணுவ வீரர்கள் மக்களின் போராட்டத்தை நசுக்க விரைந்தனர். எனினும், மக்கள் போராட்டம் தொடர்ந்தது.

ஜூன் 3-ல் போராட்டத்தை முற்றிலும் நசுக்குமாறு அரசு கட்டளையிட்டதை அடுத்து, ஏராளமான மாணவர்கள் கொல்லப்பட்டனர். பலர் கைதுசெய்யப்பட்டனர். ஜூன் 5-ல் பெய்ஜிங் நகரில் டாங்குகள் முன்னேறிக் கொண்டிருந்தபோது கையில் இரண்டு பைகளுடன் ஓர் இளைஞர் சாலையில் தோன்றினார். திடீரென்று வழிமறித்த அவரைப் பார்த்து டாங்குகள் சட்டென்று நின்றன. அவர் வழிமறித்து நின்ற டாங்கு மீண்டும் நகரத் தொடங்கியபோது அவர் மீண்டும் அதன் முன்னர் துணிச்சலுடன் நின்றார். பின்னர் டாங்கின் மேல் ஏறி அதன் ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் மீண்டும் இறங்கி நின்ற அவர், கிளம்ப முயன்ற டாங்கைத் தடுத்து நிறுத்தினார். சிறிது நேரத்தில் அங்கு விரைந்த இரு இளைஞர்கள், அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அந்த நபர் யார்? அதன் பின் என்னவானார் என்று யாருக்குமே தெரியாது. ஆனால், இந்தச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்

20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான புகைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் போராட்டத்தை சீன அரசு இரும்புக் கரம் கொண்டு முறியடித்தது, சர்வதேச அளவில் அதிர்வலைகளைக் கிளப்பியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x