Last Updated : 26 Apr, 2015 11:20 AM

 

Published : 26 Apr 2015 11:20 AM
Last Updated : 26 Apr 2015 11:20 AM

சொல்லத் தோணுது 31: மக்களாட்சியின் மகத்துவம்!



தமிழகர்களுக்கு சிக்கல்கள் என்பது புதிதில்லை. கடந்த காலங்களில் நடந்து முடிந்த ஈழ மக்களின் படுகொலைகளுக்குப்பின் எத்தனைத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும் அதனைக்காண பழகிவிட்டார்கள். எப்பொழுதுமே எல்லாவற்றிலுமே உயிரை இழப்பவர்கள் எதுவுமறியாத அப்பாவி மக்களாகவே இருக்கிறார்கள். அதிகாரப் பசியும், பணப் பசியும், இனவெறிப்பசியும்தான் இவ்வாறான அப்பாவி மக்களின் உயிரை சூரையாடிக் கொண்டேயிருக்கின்றன.

ஈழத்துப் போரிலிருந்து உயிரைக்காப்பாற்றிக் கொள்ள முடிவெடுத்தவர்கள் அதிகளாக வெளியேறினார்கள். எதிர்த்துப் போரிட்டவர்களும், வெளியேற விரும்பாத, வசதியற்ற மக்களும் அரசியல் ஆதிக்கர்களின் சூழ்ச்சியினால் படுகொலை செய்து குவிக்கப்பட்டார்கள். போரில் எத்தனைத் தமிழர்கள் கொல்லப்பட்டா்கள் என்பதை துல்லியமாகக் கணிக்க முடியாமல் போனாலும் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல்தான் என்பதை எல்லோராலும் சொல்ல முடிந்தது.

இலங்கை அரசே அந்நாட்டு மக்களை திட்டம் வகுத்துக் கொன்றது. தமிழகத்தில் இதுவரை நடந்த நெடியதும், வரலாற்றில் என்றும் மறக்க முடியாத, மறைக்க முடியாதப் போராட்டமும் ஈழ ஆதரவுப்போரட்டம்தான். இந்தப் படுகொலைகளை நிகழ்த்தியதற்காக இலங்கை அரசின் மீது ஆவேசப்பட்டோம்,தமிழ்நாட்டிலிருந்து 19 போரளிகளைப்பலி கொடுத்தோம்.

அண்மையில் ஆந்திராவில் கொல்லப்பட்ட இருபது தமிழர்களின் உடல்களும் மீண்டும் தமிழகத்தில் அதேபோன்ற அதிர்வை ஏற்படுத்தியது. கூலிக்காகச் சென்றத் தமிழர்கள் குற்றுயிரும் கொலை உயிருமாக கொல்லப்பட்டு சிதைக்கப்பட்டதை முன்வைத்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. அரசியல் கட்சிகளும், தமிழர் இயக்கங்களும் ஒன்று சேர்ந்தன. இதற்கான நியாயத்தைப் பெற்று உரியவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர சாட்சியங்களை முன்வைத்து வழக்கினை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றிருக்கின்றன. நியாயம் கேட்டு நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் குரலை எழுப்பினார்கள். உண்மை கண்டறியப்பட்டு உரியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

பிறந்து நாற்பதே நாளான பச்சிளம் குழந்தையோடு நடுத்தெருவில் நிறுத்தப்பட்டு குடும்பத் தலைவர்களை இழந்து பாதிக்கப்பட்டமக்கள் நீதிமன்றங்கள் நோக்கி அலைந்து கொண்டிருக்கும் காட்சியினைப் பார்க்க யாராலுமே சகித்துக்கொள்ள முடியாமலிருக்கிறது.

அதேபோல், அண்மைக்காலமாக எதுவுமறியாத அப்பாவித் தமிழர்கள் தமிழகத்திலேயே குடும்பம் குடும்பமாக நாள்தோறும் பலியாகிக் கொண்டிருப்பதை நாம் உணர்ந்திருக்கின்றோமா? சொந்த நாட்டிலேயே சொந்த மக்களை இலங்கை அரசு கொன்றழித்ததுபோல் தமிழ்நாட்டில் தமிழக மக்களையே மது எனும் அரக்கன் செய்யும் கொலைகளைப் பற்றிக் கணக்கில் கொள்ளப்படுகிறதா?

குடும்பத்தை கால் வயிற்றுக் கஞ்சியோடு தவிக்கவிட்டு, குழந்தைகளின் எதிர்காலத்தைக் கணக்கில் கொள்ளாமல், தானும் வேலைக்குப் போகாமல் அவர்கள் கூலி வேலை செய்து சம்பாதித்து வரும் பணத்தைப் பிடுங்கி வந்து அதிகாலையிலிருந்தே மதுக்கடை முன் காத்துக் கிடந்து அரசாங்கத்திடமே கொடுக்கும் கொடுமைகள் யார் மனதையும் அசைக்காதது ஏனென்றுதான் புரியவில்லை.

நாள் முழுக்க எதைப்பற்றியும் சிந்திக்காமல் தெரு நாய்கள் போல மதுக்கடைகளின் பெயர்ப்பலகையையே பார்த்து பார்த்து அங்கேயே சுற்றிச்சுற்றி வந்து அனைத்து உறுப்புகளும் செயலிழந்து, குடும்பத் தலைவனாக இருந்து மனைவியையும், பெற்ற மக்களையும் காப்பாற்ற வேண்டியவன் ஒவ்வொரு ஊரிலும் மடிந்துகொண்டிருக்கிறான். மண்ணுக்குள் போய்க்கொண்டிருப்பவனின் எண்ணிக்கைகளை இந்த கொலைப்பட்டியலில் சேருவதில்லை. இவர்களெல்லாம் மதுவினால் மட்டுமே இறந்தார்கள் என ஒரு நாளும் மருத்துவர்கள் ஆய்வறிக்கைச் செய்து அறிவிக்க மாட்டார்கள். அதுவரை அவைகளெல்லாம் இயற்கை மரணங்கள்தான்.

தொடர்ந்து ஆண்டு வந்த அரசாங்கங்களால் குடிநோயாளிகளாக ஆக்கப்பட்டு இன்று விதவைக் கோலத்தில் கைப்பிள்ளைகளோடு தெருவில் திரியும் குடும்பங்களின் எண்ணிக்கைப் பற்றிய கணக்குகளை யாராவது சொல்ல முடியுமா? குடும்பத் தலைவனை இழந்து பொருளாதாரத்தை இழந்து, குடும்ப பாதுகாப்பினை இழந்து, ஒட்டுமொத்தக் குடும்பத்தின் வாழ்க்கையே கேள்விக்குள்ளாக்கப்பட்டு அரசாங்கத்திடமே எல்லாவற்றுக்கும் கையேந்துகிற அவலம் ஒவ்வொரு நொடியும் பெருகிக்கொண்டிருப்பதை யாருமே உணரவில்லையா?

இந்த மதுவெனும் அரக்கனால் உயிர் மட்டுமா பலியாகிறது. இத்தனை ஆயிரம் கொலைகள், இத்தைனை ஆயிரம் கொள்ளைகள், இத்தனை ஆயிரம் விபத்துக்கள் என பட்டியலிடுகிறோம். எல்லாவற்றுமான ஊற்றுக்கண் இந்த மது அரக்கன்தான் என்பதை எப்பொழுது அனைவரும் ஏற்றுக்கொள்ளப்போகிறோம்.

குடிநோயாளியான கணவனைத் திருத்த முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் கொடுமையும், பெற்றவனே தன் மகளை நிகழ்த்தும் வன்புணர்ச்சிக் கொடுமையும் தமிழ்நாட்டைத்தவிர இந்தியாவில் வேறெங்காவது நிகழ்கிறதா?

படிப்படியாக நோயாளியாக்கப்பட்டு மரணத்தைத் தழுவும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தால் எத்தனையோ ஆயிரங்களைத் தாண்டும். நாளொன்றுக்கு பல ஆயிரம் என்றால் மாதத்துக்கு எத்தனை லட்சங்கள்? ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி மது விற்பனையாக இருந்தபோது குடிக்கத் தொடங்கியவர்கள்தான் இப்போது சாகத் தொடங்கியிருக்கிறார்கள். அதன்பின் இப்போது அது பத்து மடங்குகளுக்குமேல் உயர்ந்திருக்கிறது. ஆறு ஆண்டுகள் இந்த மதுவைக் குடித்தால் அத்தனையும் அடங்கி நடைபிணமாக மனிதன் ஆகிவிடுவான் என இது பற்றி ஆய்வு செய்தவர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள்.

அப்படியானால் இன்னும் ஆறேழு ஆண்டுகளுக்குப்பின் தமிழ்நாட்டில் மதுவினால் ஏற்படும் மனித உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை இப்பொழுது இருப்பதைவிட பத்து மடங்குகளுக்குமேல் இருக்கும். ஒட்டுமொத்தமாக ஈழப்போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை தமிழகம் அரை மாதத்திலேயே தொட்டுவிடுகிறது! வருங்காலங்களில் யாரையும் புதைப்பதற்குக்கூட இடமிருக்காது. அவர்களை அடக்கம் செய்வதற்காகவே புதிதாக ஒரு துறையை தொடங்கநேரிடலாம்!

ராஜபக்சே புதுடில்லிக்கு வருவதற்கே நரம்புகளை முருக்கேற்றி கொக்கரித்தவர்கள் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களுக்கு ஏற்படும் நிலையைக்கண்டு என்ன செய்து கெண்டிருக்கிறார்கள்? இனி என்ன செய்ய போகிறார்கள?

இப்படியெல்லாம் ஒரு நாள் நடக்கும் எனத்தெரிந்துதான் எனக்கிருந்த உரிமையினாலும், ஒரு தமிழ்க்குடிமகன் என்பதாலும் முன்னாள் முதலமைச்சர் ஒருவரிடம் “மதுவிலக்குச்சட்டத்தைக் கொண்டுவந்து இம்மக்களைக் காப்பாற்றுங்கள். நீங்கள் இதை ஒன்றைச் செய்தாலே போதும், பேருதவியாக இருக்கும் என கெஞ்சினேன்”. “எல்லை மாநிலங்களுக்கும், புதுச்சேரிக்கும் சென்று குடிக்கப் போய்விடுவார்கள். மக்களின் பணமெல்லாம் அண்டை மாநிலங்களுக்குப் போய்விடும். கள்ளச் சாராயம் பெருக்கெடுத்து அப்பாவி மக்கள் அதைக்குடித்து இறந்து போவார்கள்” என்று காரணம் சொல்லி அவர் சமாளித்தார்..

இன்றைக்கு கள்ளச்சாராயத்தை மக்கள் குடிக்கவில்லை. நண்பர்கள்,உறவினர்கள்,ஊர்க்காரர்கள் இறக்கின்ற செய்தி வந்துகொண்டே இருக்கின்றது. அதற்காக மட்டுமே அதிகமாக நான் என் ஊருக்குப்போகிறேன். அரசு விற்கும் மதுவினால் ஏற்படும் பலிகளின் எண்ணிக்கை கணக்கில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் சில காலங்களில் கடைகளின் எண்ணிக்கையில் புதுச்சேரியைத் தாண்டலாம்.

உடலுக்கு நன்மைதரும் கள்ளுக்கடைகள் அனுமதிக்கப்படுவதையே மது எனச்சொல்லி காந்தியடிகள் எதிர்த்தார். அவருக்கு ஆதரவாக பெரியார் தன் மனைவி நாகம்மையையே போராட்டத்துக்கு தலைமை தாங்கச் செய்து தன் தோட்டத்திலிருந்த ஐநூறு தென்னை மரங்களையும் வெட்டி சாய்த்தார்.

மக்களே தங்களை ஆளவேண்டியவர்களை தேர்ந்தெடுத்துக்கொள்வதுதான் மக்களாட்சி. மக்களுக்காகத்தான் அரசாங்கம் உருவாக்கப்படுகிறது. மக்களுக்கு பாதிப்பு என்பதை உணரும் போது அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுதான் அரசின் கடமை. அதை உணர்ந்து பக்கத்து மாநில கேரள அரசு படிப்படியாக மதுக்கடைகளை அகற்றி மக்களை காக்கும் பணியைத் தொடங்கி செயல்படுத்திவிட்டது. அதேபோல் தமிழகத்திலும் உடனே நடைமுறைப்படுத்தலாம்.

இருபது தமிழர்கள் ஆந்திர அரசின் வனத்துறையால் கொல்லப்பட்டதற்காக நாடாளுமன்றத்தில் தமிழக ஆளும் கட்சி நீதி கேட்கிறது. மது அழிவின் பலிக்காக மக்கள் யாரிடம் நீதி கேட்கப்போகிறார்கள்?

குடிமகன் எனும் சொல் இன்றைக்கு தமிழ் அகராதியில் கேலியாக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்காக செயல்படவேண்டிய சட்டமன்றம் இதுபோன்ற செயல்களுக்காக முடங்கிப்போகிறது.. மக்களும் முடங்கித்தான் போயிருக்கிறார்கள். தேர்தலை மட்டுமே எதிர்பார்த்துக்கொண்டு. பாவம், அவர்களிடம் இருப்பதெல்லாம் இந்த ஒரே ஒரு வாக்குச்சீட்டு மட்டும்தான்! வாழ்க மக்களாட்சி!!

- இன்னும் சொல்லத் தோணுது…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:
thankartamil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x