Published : 02 Apr 2015 09:06 AM
Last Updated : 02 Apr 2015 09:06 AM
அம்மண ராஜா கதை தெரியும்தானே! சுயமோகம் கொண்ட ராஜா ஒருவருக்குப் புதுவிதமான ஆடை என்ற பெயரில் ஆசைகாட்டி, அவருக்கு உடை அணிவிப்பதுபோல் பாவனை செய்வார்கள் இரு தையற்கலைஞர்கள். ‘புதுமையான இந்த உடை, முட்டாள்களின் கண்களுக்குத் தெரியாது’ என்று ஒரு பொய்யைப் பரப்பிவிடுவார்கள். ராஜா உடையே அணியவில்லை என்று சொன்னால், தங்களை முட்டாள்கள் என்று சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சும் குடிமக்கள், ராஜா ஊர்வலமாகச் செல்லும்போது அவரது ‘உடை’யைப் புகழ்ந்து தள்ளுவார்கள். களங்கமற்ற குழந்தை ஒன்று மட்டும் ராஜா உடையில்லாமல் இருப் பதாகச் சத்தமிடும். அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை ராஜா உணர்வார். இந்தக் கதையை எழுதியவர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்.
டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் 1805-ல் இதே நாளில் பிறந்த ஆண்டர்சன், ‘தி லிட்டில் மெர்மெய்டு’, ‘தி ஸ்னோ குயின்’, ‘தி அக்ளி டக்ளிங்’, ‘தி நைட்டிங்கேல்’ உட்பட ஏராளமான கதைகளை எழுதியவர். குழந்தைகளுக்கான கற்பனை உலகைப் படைத்த சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1935-ல் டென்மார்க் அரசு இவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது. 2005-ல் அவரது 200-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, அந்த ஆண்டையே ஆண்டர்சன் ஆண்டாக அறிவித்துக் கவுரவித்தது டென்மார்க் அரசு.
இவரது பிறந்த நாளான ஏப்ரல் 2-ஐ, சர்வதேசக் குழந்தைகள் புத்தக நாளாக, 1967-ல் அறிவித்தது சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘சிறார்களுக்கான புத்தகங்களுக்கான சர்வதேச வாரியம்’ என்னும் அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச அளவில் இயங்கிவரும் இந்த அமைப்பின் வெவ்வேறு நாடுகளில் உள்ள பிரிவுகள், இந்த நாளைக் கொண்டாடுவதற்கான செலவுகளை ஏற்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான கதைக்களத்தைத் தேர்வுசெய்யும் இந்த அமைப்பு, அந்த ஆண்டில் கொண்டாட்டத்துக்குப் பொறுப் பேற்கும் நாடுகளிலிருந்து சிறந்த எழுத்தாளர் ஒருவரைப் பங்கேற்கச் செய்கிறது. அத்துடன் அந்நாட்டைச் சேர்ந்த சிறந்த ஓவியர் குழந்தைகள் புத்தக நாளுக்கான போஸ்டரை வடிவமைக்க அழைக்கப்படுகிறார்.
இந்த நாளில் குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம், இந்த ஆண்டுக்கான குழந்தைகள் புத்தக நாளை நடத்துகிறது. ‘பல கலாச்சாரங்கள்; ஒரு கதை’ என்ற பொருளில் இந்நாள் இந்த ஆண்டில் கொண்டாடப்படுகிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT