Published : 11 Apr 2015 11:22 AM
Last Updated : 11 Apr 2015 11:22 AM
என்னைப் பார்த்து ஜெயகாந்தன், ‘‘அவன் ரொம்ப ஸ்பிரிட்சுவல்…’’ என்று சொல்லிவிட்டார் இல்லையா? அந்த ஒரு சொற்றொடர் என்னைப் பாதித்துவிட்டதை நான் மறுப்பதற்கில்லை. சரியாக அந்த நேரம் பார்த்து நான் திவ்ய பிரபந்தம் போன்றவற்றில் தோய ஆரம்பித்தேன்.
பாரதியார் கூட, ‘‘என் கண்ணை மறந்து உன்னிரு கண்களையே என்ன கத்தில் இசைத்துக்கொண்டு…’’ என்றெல் லாம் பாடியிருக்கிறாரே! ஒரு பாட லைக் கேட்டவுடன் அதை ரசித்து மட்டும் விட்டுவிடுபவர்கள் உண்டு. அந்தப் பாடலுக்கே வெகுவாக ஆட் பட்டு வாழ்நாளெல்லாம் அதை வழித் துணையாக்கிக் கொள்பவர்களும் உண்டு. என் பக்தி பெரும்பாலும் இத் தகைய பாடல்களிலேயே சஞ்சரித் துக்கொண்டிருந்தது.
‘கவிதை காட்டும் கடவுள்’ என்கிற தலைப்பில் நான் சில கூட்டங்களில் பேசவும் செய்தேன்.
ஜெயகாந்தன் கோயில்களுக்குச் சென்றபோதெல்லாம் அவர் நடந்து கொண்ட முறை வித்தியாசமானது. கூட்டம் குறைவாக இருந்தால் அவர் மூலஸ்தானம் வரை சென்று பார்க்க விரும்புவார். கூட்டம் அதிகமெனில், அவர் மூலஸ்தானத்தை நாடவே மாட்டார்.
‘‘நீங்க போய் கும்பிட்டு வாங்கப்பா…’’ என்று சொல்லி, வெளியே ஏதோ ஒரு படிக்கட்டின் மீது உட்கார்ந்துகொள்வார்.
ஜெயகாந்தனின் மூத்த புதல்வி அம்மு வாழ்க்கைப்பட்ட, நெல்லை மாவட்டம் காயாமொழிக்கு அருகில் உள்ள, ‘செங்குழி’ என்கிற இடத் துக்கு நாங்கள் முதல்முறையாக போயிருந்தோம். வானில், வேறெங்கும் பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமான பறவைகள் ஒரு பெரும் வரிசையில் பறந்து சென்றது அங்கு எங்கள் மாலை அனுபவத்தின் பிரதானமான காட்சியாக அமைந்தது. அவை, கடல் பகுதியிலிருந்து திரும்புபவை என்பதில் அந்தக் காட்சிக்கான வர்ணம் பூசப்பட்டிருந்தது.
செங்குழியில் இருந்து, திருச்செந்தூர் சென்று வழிபட ஏற்பாடு செய்து எங்களை ஒரு தனி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். புதுமைப்பித்தனும் பிற பொருநை நதிக்கரை எழுத்தாளர்களும் வர்ணித்த காட்சிகளை எல்லாம் வழி யில் கண்டுகொண்டே போனோம். மரக் கிளைகளிலிருந்து ஆற்று நீரில் குதித்த சிறுவர்களை நான் இதற்கு முன்பும் பலமுறை பார்த்ததுபோல் இருந்தது.
திருச்செந்தூரில் நீண்ட க்யூ. எல்லோரும் சட்டையைக் கழற்றிவிட்டுப் போக வேண்டும் என்றார்கள். ஜே.கே, ‘‘நீங்க போய் கும்பிட்டுவிட்டு வாங்கப்பா..!’’ என்று சொல்லிவிட்டார். நாங்களும் யாரும் போகவில்லை. கோயிலைச் சுற்றி வரும்போது, வள்ளிக் குகை என்று ஒன்று எதிர்ப்பட்டது. ஒவ்வொருவராக உள்ளே செல்ல வேண்டும். நாங்கள் எல்லொரும் போக முடியாது என்பதால் ஜே.கே மட்டும் அதன் உள்ளே சென்று பார்த்து வந்தார்.
ஒவ்வொரு பழம்பெரும் கோயில் களின் பெருமையும் ஜெயகாந்தனுக்குத் தெரியும். அதேவேளையில் அவற்றின் தற்கால நிலையையும் அவர் தெரிந்து வைத்திருந்தார்.
அவர் நின்று ரசித்து மனமார வணங்குகிற தெய்வங்கள் எல்லாம் எங்கோ ஒரு மண் குடிசைக்கு அருகில் இருந்த மரத்தடியில் நட்ட கற்களாய் நின்றிருந்தனர். நாதன் உள் இருக்கும் ரகசியம் தெரிந்து அவர் தொழுதார்.
சரி, இந்தக் கோயில்களில்தான் இப்படி! கொல்கத்தா போயிருந்த போது, ராமகிருஷ்ணர் பூஜை செய்த தட்க்ஷிணேஸ்வரம் கோயிலுக்குப் போயிருந்தோம். ஆசை ஆசையாக நாங்கள் பவதாரிணியின் திருக்கோலத் தைக் காண்பதற்கு ஒரு நீண்ட வரிசையில் போய் நின்றுவிட்டோம்.
‘‘நீங்க போயிட்டு வாங்கப்பா…’’ என்று சொல்லி, ஜே.கே கோயிலுக்கு எதிரே இருந்த படிக்கட்டில் போய் உட்கார்ந்துகொண்டார்.
நாங்கள் கண்டது ஓர் அழகிய தரிசனம். பூசாரி குறுக்கே நின்று காளியை மறைக்கவில்லை. தரிசனப் பிரேமில், பூசாரியின் வலது தோள்பட்டையும், பல தீபங்கள் எரியும் ஒரு கொத்துக் குத்துவிளக்கை ஏந்தி மேலும் கீழுமாக ஆராதிக்கும் வலது கரமும் மட்டும் தெரிய, மீதி இடம்பூராவும் காளியே காட்சிகொண்டு நின்றாள். கியூ மிகவும் நீண்டதாயிருந்தது. எங்கள் கையில் வைத்திருந்த பிரார்த்தனைத் தட்டுக்களைச் சமர்ப்பிப்பதற்கு நெடு நேரம் ஆகும்போல் தெரிந்தது. வெளியே ஜெயகாந்தனோ காத்துக் கொண்டிருந்தார்.
எனவே நாங்கள் கொஞ்ச நேரம் கழித்து, எங்களுக்கு முன்னே நின்றவர்களிடம் தட்டுக்களைக் கொடுத்து, அவர்களின் தட்டுக்களோடு சேர்த்து எங்களுடையவற்றையும் சமர்ப்பித்துவிடும்படி கேட்டுக்கொண் டோம். எங்கள் கோரிக்கை விநோத மாக இருந்தாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். நாங் கள் அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு ஜெயகாந்தனிடம் வந்து சேர்ந் தோம். எங்கள் போக்கில் ஏதும் குறையிருந்தாலும் பவதாரிணி அதை மன்னிப்பாள் என்கிற தைரியம் இருந்தது.
இவற்றையெல்லாம்
ஒரு மாபெரும் மரபுப் பிறழ்ச்சி என்றோ, புரட்சி என்றோ யாரும் பார்க்கத் தேவையில்லை. மரபு மாறாத நமது கவிமணி அவர்களே,
‘கோயில் முழுதும் கண்டேன் உயர்
கோபுரம் ஏறிக் கண்டேன்.
தேவாதி தேவனை எங்குத்
தேடினும் கண்டிலனே!’
- என்று பாடியுள்ளார்.
ஜெயகாந்தனுக்கும் ஒரு தரிசன வேட்கை இருந்தது. அது பல்வேறு சமயங்களில் பாடல்களாகப் பிறந்தது.
‘ஆசார வாசலுக்கு
ஆசையினால் வந்துவிட்டேன்
பூசாரி தடுக்கின்றான்
போக மனம் வரவில்லையே
நேசத்தால் வந்துவிட்டேன்
நியமங்கள் தெரியவில்லை!’
- என்று அந்தத் தரிசன வேட்கைகள் பாடல்களாக வடிந்தன.
காரல் மார்க்ஸை ஜெயகாந்தன் சிறந்த ஆன்மிகவாதியாகவே பார்த்தார். மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும் மகரிஷிகள் என்றே அவர் புகழ்வார்.
‘‘எவனொருவன் தனது வாழ்க்கைக்கு அப்பால் ஒரு லட்சியத்தைக் குறிவைத்து, மனித நேய அடிப்படையில் மனித குல வாழ்க்கையைப் பற்றிப் பொறுப்போடு சிந்தித்துச் செயலாற்றித் தனது சுயவாழ்க்கையைப் பணயம் வைத்து, லெளகீக லாபங்களை எல்லாம் மறுத்து, அதன் பொருட்டு விளைகின்ற துன்பங்களைக் கூட எதிர்பார்த்து, அதனை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்கிறானோ அவனே ஆன்மிகவாதி. இந்த இலக்கணம் மார்க்ஸுக்கு மிகுதியும் முழுக்கவும் பொருந்துகிறது!’’ என்று ஜெயகாந்தன் எழுதினார்.
- தொடர்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT