Published : 17 Apr 2015 10:53 AM
Last Updated : 17 Apr 2015 10:53 AM
இன்று அமெரிக்காவும் கியூபாவும் தங்கள் பகையை மறந்து ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுத்திருக்கின்றன. ஆனால், கடந்த காலங்களில் கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகள் வரலாற்றில் அழிக்க முடியாதவை. பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கியூபா அரசைக் கவிழ்க்க, 1961 ஏப்ரல் 17-ல் அமெரிக்கா முயன்றது.
கியூபாவில் 1959-ல் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த பிடல் காஸ்ட்ரோவை அமெரிக்க ஆட்சியாளர்கள் வெறுப்புடன் கவனித்துக்கொண்டிருந்தனர். கியூபாவில் செயல்பட்டுவந்த அமெரிக்க வணிக நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதில் காஸ்ட்ரோ காட்டிய முனைப்பு, அமெரிக்காவுக்கு எதிரான அவரது முழக்கங்கள், சோவியத் ஒன்றியத்துடனான கியூபாவின் நட்பு ஆகியவை அந்நாட்டுக்கு எதிரான அமெரிக்க எண்ணத்தை நாளுக்கு நாள் வளர்த்துக்கொண்டே இருந்தன.
பல்வேறு காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கியூபர்களை வைத்தே காஸ்ட்ரோ அரசைக் கவிழ்க்க அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஐசனோவர் திட்டமிட்டார். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த சிஐஏ-வுக்கு உத்தரவிட்டார். அவருக்குப் பின் அமெரிக்க அதிபரான ஜான் எஃப். கென்னடியும் இந்தத் திட்டத்தைத் தொடர முடிவுசெய்தார். சொந்த நாட்டுக்கே துரோகம் செய்ய முன்வந்த கியூபர்களுக்குப் பயிற்சியளித்து, கியூபாவுக்கு எதிரான வேலைகளில் மும்முரமாக இறங்கியது சிஐஏ. திட்டத்தைச் செயல்படுத்தும் நாளும் வந்தது.
1961 ஏப்ரல் 17-ல் சிஐஏ-வால் ஏவப்பட்ட 1,200 கியூபர்கள், அந்நாட்டின் பிக்ஸ் வளைகுடா வழியாக, அமெரிக்க ஆயுதங்களுடன் அமெரிக்கப் படகுகளில் வந்திறங்கினார்கள். ஆனால், காத்திருந்ததுபோல் கியூபா ராணுவத்தினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஆயுதங்களை ஏற்றிவந்த படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். எஞ்சியவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.
தனது திட்டம் படுதோல்வி அடைந்ததால் அமெரிக்காவுக்குப் பெருத்த அவமானம் ஏற்பட்டது. இத்தனைக்கும் இந்த மாதிரியான முயற்சியெல்லாம் கியூபாவிடம் செல்லாது என்று ராணுவ நிபுணர்கள் சிலர் சொன்னதை கென்னடி காதில் போட்டுக்கொள்ளவில்லை. இந்தச் சம்பவம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அத்துமீறல் என்று காஸ்ட்ரோ கடுமையாக விமர்சித்தார். கடைசியில் சிஐஏ-வும் அரசும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டிக்கொண்டதுதான் மிச்சம்.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, வெளியுறவுத் தொடர்பான விஷயங்களில் ராணுவம் மற்றும் உளவுத் துறை அதிகாரிகளின் ஆலோசனையையும் தாண்டி, தனது சகோதரரும் அட்டர்னி ஜெனரலுமான ராபர்ட் எஃப். பாபி கென்னடி சொல்வதையே நம்பத் தொடங்கினார் அதிபர் கென்னடி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT