Published : 06 Apr 2015 10:22 AM
Last Updated : 06 Apr 2015 10:22 AM
பிற்காலக் கம்பர் என்று போற்றப்பட்டவரும், தமிழ் அறிஞருமான ‘மகாவித்வான்’ மீனாட்சிசுந்தரம் பிள்ளை (Meenakshi Sundaram Pillai) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
திருச்சி அருகே உள்ள எண்ணெயூரில் (1815) பிறந் தவர். தமிழ்ப் புலவரான தந்தையிடமே தமிழ் கற்றார். அபார நினைவாற்றல் கொண்ட வர். பாடல்களைப் படித்த வேகத்தில் மனதில் பதிய வைத்துக்கொண்டுவிடுவார். சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்.
சென்னை சென்று சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களிடம் கல்வி பயின்று புலமை பெற்றார். காப்பியங்கள், அற நூல்கள், சித்தாந்த சாத்திரங்கள், பேருரைகள், சிற்றிலக்கியங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். அமரத்துவம் வாய்ந்த பல இலக்கியங்களைப் படைக்கத் தொடங்கினார்.
சிற்றிலக்கியக் காலம் என்று கூறப்பட்ட இவரது காலத்தில் திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து ஏராளமான தல புராணங்கள் பாடினார். இவரது புலமையை அறிந்து நாடிவந்த பலருக்கும் தமிழ் கற்பித்தார். இவரிடம் பயின்றவர்களில் ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சீர்காழியில் முன்சீப்பாக பணியாற்றிய மாயூரம் வேத நாயகம் பிள்ளையுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டி ‘குளத்துக்கோவை’ என்னும் நூலை இயற்றினார்.
மயிலாடுதுறையில் பலகாலம் தங்கி மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தார். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். சிவபக்தி, அடக்கம், விருந்தோம்பல், உயர்ந்த உள்ளம், கற்றாரைப் போற்றும் தன்மை ஆகிய நற்குணங்களைப் பெற்றிருந்தார்.
திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார். தன்னிடம் கல்வி பயில வருபவர்களை சொந்த பிள்ளைகள்போலக் கருதி உணவும், இடமும் அளித்து பாரபட்சமின்றி கல்வி புகட்டினார்.
19-ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றி யவர் இவர்தான். புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள், எண்ணற்ற தனிப் புராணங்களை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் ‘பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்று புகழப்பட்டார்.
பெரியபுராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். இவரது படைப்புகள் அனைத்துமே செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. சுமார் 2 லட்சம் பாடல்களை இவர் இயற்றியதாகக் கூறப்படுகிறது.
‘தாயைவிட என் மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான்’ என்று உ.வே.சா. இவரைக் குறிப்பிட்டுள்ளார். இவரது படைப்புகள் பலவற்றை ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு என்னும் பெயரால் உ.வே.சா. வெளியிட்டுள்ளார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் என்ற தலைப்பில் இவரது வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா. எழுதினார்.
தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 61 வயதில் (1876) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT