Published : 07 May 2014 11:30 AM
Last Updated : 07 May 2014 11:30 AM
ஓய்வூதியர்களின் இறப்புக்குப் பிறகு, மனைவி அல்லது கணவன் இருந்தால் அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து கூறுகிறார் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் கொ.சி. கருப்பன்.
அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, அவர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் சரிபாதி தொகையை மாத ஓய்வூதியமாக அரசு வழங்கிவருகிறது. அவ்வாறு ஓய்வூதியம் பெறுபவர்கள் இறந்துவிடும் சூழ்நிலையில், அவரைச் சார்ந்து இருக்கும் மனைவி அல்லது கணவருக்கு அரசு குடும்ப ஓய்வூதியம் வழங்குகிறது. சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
குடும்ப ஓய்வூதியம் பெற சில வழிமுறைகள் உள்ளன. அதன்படி ஓய்வூதியம் பெறுவோர் இறந்துவிட்டால், அவர் ஓய்வூதியம் பெற்று வந்த கருவூலத்துக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். பி.பி.ஓ.வில் (கொடுப்பாணை புத்தகம்) இருக்கும் பெயர், நாள், பி.பி.ஓ. எண் உள்ளிட்ட விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். அதன்பின்னர், கருவூலத்தில் படிவம் 14 (குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பம்) பெற்று அதை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அந்தப் படிவத்தில் அரசு மருத்துவர், தலைமை ஆசிரியர் போன்ற அரசு உயரதிகாரிகளிடம் சான்றொப்பம் (அட்டெஸ்ட்) பெற்று கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த படிவத்துடன் ஓய்வூதியரின் இறப்புச் சான்றிதழ், ‘வேறு எந்த அரசுப் பணியிலும் இல்லை’, ‘மீண்டும் திருமணம் செய்துகொள்ளவில்லை’ என்பதற்கான இணைப்பு 1, 2 ஆகிய படிவங்களை பூர்த்தி செய்து இணைத்து வழங்க வேண்டும். தவிர, குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் இந்தியன் வங்கி, பாரத் ஸ்டேட் வங்கி போன்ற தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கி, வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகலையும் இணைத்து ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட கருவூலம் மூலம் இத்தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட நபருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
குடும்ப ஓய்வூதியம் கிடைக்கப் பெற்றவுடன், குடும்பப் பாதுகாப்பு நிதி பெறுவதற்கான விண்ணப்பத்தை கருவூலத்தில் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த குடும்பப் பாதுகாப்பு நிதியானது, குடும்ப ஓய்வூதியர் இறந்த பிறகு, அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும். குடும்ப பாதுகாப்பு நிதியாக அரசு தற்போது ரூ.50 ஆயிரம் வழங்கி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT