Published : 13 Apr 2015 08:32 AM
Last Updated : 13 Apr 2015 08:32 AM
பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் பொற்கோயிலுக்கு அருகில் உள்ள ஜாலியன்வாலா பாக் திடல். பிரிட்டிஷ் அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல், ஆயிரக் கணக்கானோர் அங்கு கூடியிருந்தார்கள். (பலருக்கு ஊரடங்கு உத்தரவு பற்றி தெரியாது என்றும் கூறப்படு கிறது) அன்று சீக்கியர்களின் புனித நாளான பைசாகி தினம் என்பதால் சீக்கிய பக்தர்கள் அதிக அளவில் இருந்தார்கள். 1699-ல் இந்த தினத்தில்தான் ஏற்றத்தாழ் வற்ற தூய்மையான கால்சாவை உருவாக்கி னார் 10-வது சீக்கிய குரு கோவிந்த் சிங். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று அந்தப் பூங்காவில் மக்கள் கூட்டம் அமைதியாக அமர்ந்திருந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புரட்சியை அடக்குவதற் காக என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட ரவுலட் சட்டம், மக்களின் உரிமையை முற்றிலும் பறிப்பதாக அமைந்தது. இச் சட்டத் துக்கு எதிராக அமைதியான முறையில் மக்கள் போராட்டம் நடத்திவந்த சமயம் அது.
அப்போது 50 கூர்க்கா படையினருடன் அந்த இடத்துக்கு வந்துசேர்ந்தார் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு டயர். மக்களுக்கு எந்த வித எச்சரிக்கையையும் விடுக்காமல், திடீரென்று அவர்களைச் சுட்டுத்தள்ளுமாறு உத்தரவிட்டார் டயர். தொடர்ந்து 10 நிமிடங் களுக்கு இடைவிடாமல் துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பாய்ந்துகொண்டே இருந்தன. தலை, முகம், மார்பு, வயிறு என்று அப்பாவி மக்களின் சகல பாகங்களையும் துளைத்தன துப்பாக்கிக் குண்டுகள். நான்கு புறங்களும் உயர்ந்த கல்சுவர்களைக் கொண்ட அந்தத் திடலில், வந்துசெல்ல ஒரே ஒரு வழிதான் இருந்தது.
தப்பிக்க முயன்றவர்கள் வேறு வழியின்றி திடலிலிருந்த கிணற்றுக்குள் குதித்தனர். இந்தப் படுகொலைச் சம்பவத்தில் 379 பேர் உயிரிழந்ததாகவும், 1,100 பேர் காயமடைந்த தாகவும் பிரிட்டிஷ் அரசு தெரிவித்தது. ஆனால் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்ட விசாரணையில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டும் என்று தெரியவந்தது. கிணற்றில் குதித்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தார்கள்.
இரக்கமே இல்லாமல் இந்தியர்களைச் சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட ஜெனரல் டயர், பிரிட்டிஷ்காரராக இருந்தாலும் இந்தியா விலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதுதான் கொடுமை. இந்தச் சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையின்போது, அவர் சொன்ன வார்த்தைகள் அவர் எத்தனை கொடூர மானவர் என்பதை உணர்த்தும். “அங்கு சென்றதும், கூடியிருந்த மக்களைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்று 30 வினாடிகளில் முடிவுசெய்தேன். அவர் களைச் சுட வேண்டும் என்று நானே சுயமாக முடிவெடுத்தேன். அப்படிச் செய்யவில்லை என்றால் கடமையி லிருந்து தவறியவனாவேன் என்று நினைத் தேன்” என்றார்.
இந்தச் சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியில் உறையவைத்தது. அதுவரை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடந்துவந்த போராட்டங்கள் மேலும் அதிகரித்தன. பிரிட்டிஷ் அரசு தனக்கு வழங்கிய ‘நைட்’ பட்டத்தைத் திருப்பிக் கொடுத்தார் ரவீந்திர நாத் தாகூர். பிரிட்டிஷ் அரசு வழங்கிய ‘கைசர் இ ஹிந்து’ பதக்கத்தைத் திருப்பிக் கொடுத்தார் காந்தி. ஆங்கிலேய பாணி ஆடைகள், மரச்சாமான்களைத் தீயிலிட்டுக் கொளுத்திய மோதிலால் நேரு, அன்றிலிருந்து இந்திய உடைகளை மட்டுமே அணியத் தொடங்கினார். பிரிட்டிஷ் அரசைப் பெரிய அளவில் எதிர்க்காதவர்களும் இந்தச் சம்பவத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடூரத் தன்மையை உணர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்குபெறத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாகத்தான், 1920-ல் ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தி தொடங்கினார். அதுமட்டுமல்ல, பகத் சிங் என்ற புரட்சியாளர் உருவாவதற்கு விதையைப் போட்டதும் இந்தக் கொடூரச் சம்பவம்தான். ஆக, இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பல வகையிலும் திருப்பு முனையாக அமைந்தது இந்தப் படுகொலைச் சம்பவம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT