Last Updated : 15 Apr, 2015 08:27 AM

 

Published : 15 Apr 2015 08:27 AM
Last Updated : 15 Apr 2015 08:27 AM

இன்று அன்று | 2014 ஏப்ரல் 14,15: கனவுகளைச் சிதைத்த போகோ ஹராம்!

இன்றுடன் ஓராண்டாகிவிட்டது, நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் சிபோக்கில் 270+ மாணவிகளின் தலைவிதி முற்றிலுமாகச் சிதைக்கப்பட்ட சம்பவம் நடந்து.

2014 ஏப்ரல் 14-ம் தேதி நள்ளிரவில் அப்பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள், தாங்கள் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு பள்ளியை விட்டு வெளியே வருமாறு அச்சிறுமிகளை அழைத்தனர். என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் ஏற்றப்பட்ட அச்சிறுமிகள், சாம்பிஸா வனப் பகுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது. அதன் பிறகு அச்சிறுமிகள் எங்கு வைக்கப்பட்டிருக் கிறார்கள், அவர்கள் கதி என்னவாயிற்று என்று அவர்களின் பெற்றோர்களும் உலக மக்களும் பதைபதைப்புடன் காத்திருக்கிறார்கள்.

அந்தச் சம்பவத்தில் எத்தனை மாணவிகள் கடத்தப்பட்டார்கள் என்பதில் தொடக்கத்தில் குழப்பம் நிலவியது. முதலில் 85 பேர்தான் கடத்தப் பட்டார்கள் என்று செய்தி வந்தது. ஆனால், 234 பேரைக் காணவில்லை என்று பெற்றோர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. அதேபோல், பயங்கரவாதி களிடமிருந்து தப்பிவந்த மாணவிகளின் எண்ணிக்கையிலும் குழப்பம் இருந்தது. 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்தப்பட்டதாகவும் அவர் களில் 53 பேர் தப்பிவந்ததாகவும் சில தகவல்கள் கூறின. இதற்கிடையே, கடத்தல் சம்பவம் நடந்து சில நாட்களில் போகோ ஹராம் வெளியிட்ட காணொளியில், கடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தோன்றினர். அவர்கள் முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டதாகவும், தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்துகொண்டதாகவும் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கூறியபோது உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. இது போல் கடத்திச் செல்லப்படும் பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகவும், பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுவ தாகவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

கடத்தல் சம்பவம் நடந்து இத்தனை நாட்களில் அச்சிறுமிகளை மீட்க நைஜீரிய அரசு தவறிவிட்டது, அந்நாட்டு மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதம் நைஜீரியாவில் நடந்த தேர்தலில் அதிபர் ஜொனாதன் குட்லக், எதிர்க் கட்சித் தலைவரும் முன்னாள் ராணுவ ஆட்சியாளருமான முகமது புஹாரியிடம் தோல்வியடைந்துவிட்டார். கென்யாவின் காரிஸா பல்கலைக்கழத்தில் 148 மாணவர்களை அல் ஷபாப் பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போதும் உடனடியாக ராணுவ நடவடிக்கை எடுக்காத உஹுரு கென்யாட்டா மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்திருப்பது குறிப்பிடத் தக்கது. மே மாத இறுதியில் அதிபராகப் பதவியேற்கவிருக்கும் முகமது புஹாரி, போகோ ஹராம் பயங்கரவாதிகளை ஒடுக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாக உறுதியளித்திருக்கிறார்.

போகோ ஹராம் பயங்கரவாதிகளுக்கும் நைஜீரிய ராணுவத்துக்கும் இடையிலான போரில், கடந்த ஆண்டு மட்டும் 8,00,000 குழந்தைகள் வீடிழந்திருப்பதாக யுனிசெப் நிறுவனம் தெரிவிக்கிறது. 2009 முதல் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவரும் போகோ ஹராம் 15,000 பேரைப் பலிவாங்கியிருக்கிறது. கடத்தல் சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதம் முன்னதாகக் கூட யோபே மாகாணத்தின் புனி யாதி நகரின் கல்லூரியில் 59 மாணவர்களைக் கொன்றுகுவித்தது போகோ ஹராம்.

மாணவிகளை மீட்பதில் உதவுவதாக அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தெரிவித் தாலும் இன்றுவரை அவர்கள் மீட்கப்படவில்லை. அம்மாணவிகளை வெவ்வேறு இடங்களில் பார்த்ததாகப் பொதுமக்கள் கூறுகிறார்கள். நைஜீரியா தலைநகர் அபுஜா முதல் அமெரிக்காவின் நியூயார்க் நகர் வரை, மாணவிகளை மீட்கக் கோரி போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்படுகின்றன. ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, உலக அமைதிக்காக நோபல் பரிசு வாங்கிய மலாலா வரை இதுகுறித்து தொடர்ந்து பேசிவருகிறார்கள். பயங்கரவாதிகளின் கொடூரத்தை நேரடியாக அனுபவித்த மலாலா, கடத்தப்பட்ட மாணவிகளுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். எதிர்காலக் கனவுகளை இழந்து எங்கோ ஒரு மூலையில் அடைந்துகிடக்கும் சிபோக் நகர மாணவிகளை மலாலாவின் கடிதம் சென்றடையுமா, சுதந்திரக் காற்றை அந்த மாணவிகள் சுவாசிப்பார்களா என்று உலகமே காத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x