Published : 22 Apr 2015 11:35 AM
Last Updated : 22 Apr 2015 11:35 AM

ஒரு நிமிடக் கதை: வசதி

எனக்கு மிகவும் நெருங்கிய குடும்ப நண்பர் பாபுவின் குழந்தைக்கு காதணி விழா. நான் என் மனைவி சித்ராவையும், ஃப்ரான்ஸில் இருந்து வந்திருக்கும் என் தங்கை பத்மாவையும் அந்த விழாவுக்கு அனுப்பி வைத்தேன். வேலை பளு காரணமாக நான் செல்ல முடியவில்லை.

விழா முடிந்து திரும்பி வந்த என் மனைவி தன் முகத்தை தூக்கி மூன்றாவது மாடியில் வைத்திருந்தாள். “என்னாச்சு, ஏன் இப்படி ‘உம்’முன்னு இருக்கே?” என்று என் தங்கைக்கு தெரியாமல் அவளிடம் கேட்டேன்.

“எல்லாத்துக்கும் காரணம் என்கூட நீங்க உங்க தங்கச்சியை அனுப்பி வைச்சதுதான்!” என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ஏய்... அவ வெளிநாட்ல இருந்து ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கா. அவளுக்கு ஒரு ரிலாக்ஸா இருக்கட் டுமேன்னு உங்கூட அனுப்பி வைச்சேன். அது ஒரு குத்தமா?” என்றேன்.

அவள் சொன்னாள்... “நான் உங்க மேலயோ, உங்க தங்கச்சி மேலயோ குத்தம் சொல்லலைங்க. ஆனா, உங்க ஃபிரெண்டோட மனைவி இருக்காங்களே... நாங்க போனதும், உங்க தங்கச்சியைப் பார்த்து ‘இது யாரு?’ன்னு கேட்டாங்க. நான் ‘இவங்க என் நாத்தனார், ஃபிரான்ஸ்ல இருந்து வந்திருக்காங்க’ன்னு சொன்னதும், அதுக்கு மேல அவங்க என்னைக் கண்டுக்கவே இல்லை. ஃபங்ஷன் முடிஞ்சு வர வரைக்கும் உங்க தங்கச்சியை மட்டும் அப்படி விழுந்து, விழுந்து கவனிச்சவங்க என்னை சாப்பிட்டியான்னு கூட ஒரு வார்த்தை கேட்கவே இல்லைங்க” என்றாள்.

அதைக்கேட்டு நான் மிகவும் வருந்தினேன். என் நண்பரின் குடும்பம் பணம் உள்ளவர்களைப் பார்த்துதான் பல் இளிப்பார்களா?... இவ்வளவு காலமாக இது அறியாமல் நான் இருந்திருக்கிறேனே!

என் மனைவி உறங்கியதும் அவளுக்கு தெரியாமல் நான் என் நண்பன் பாபுவுக்கு போன் செய்தேன். அவன் போனை ஆன் செய்ததும் என் ஆவேசத்தைக் கொட்டித் தீர்த்தேன்.

அனைத்தையும் நிதானமாக கேட்டுக்கொண்டிருந்த பாபு பின் பேச ஆரம்பித்தான்...

“நண்பா, நீ என்னை புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானா... சித்ரா யார்?... நாங்க யார்?... நாமெல்லாம் ஒரே குடும்பம். உன் தங்கை பத்மா யார்?... வெளிநாட்டுல இருந்து வந்திருக்கிற என் உயிர் நண்பனின் தங்கை. அவளுக்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம்?... நம்ம உறவு பத்தி அவளுக்கு என்ன தெரியும்?... அதனாலதான் உனக்கும், உன் குடும்பத்துக்கும் தர வேண்டிய ஒட்டுமொத்த மரியாதையை நாங்க உன் தங்கச்சிக்கு கொடுத்தோம். சித்ரா என் கூட பிறந்த தங்கச்சி மாதிரி. ஆனா, பத்மா அப்படி இல்லையே…”

பாபுவின் உண்மையான மனநிலை புரிய… சித்ரா பேச்சைக்கேட்டு அவசரப்பட்டு விட்டோமோ என மனது உறுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x