Published : 29 Apr 2015 01:22 PM
Last Updated : 29 Apr 2015 01:22 PM
"என் வாழ்க்கையில் இனிமேல் நேற்று என்பது இல்லை. 'கண் திறந்தால் ஜனனம், கண் மூடினால் மரணம்'னு உமர்முக்தார் சொன்னது தான் கரெக்ட்."
இது வெறும் வசனம் மட்டும் அல்ல... அஜித் தனது வாழ்க்கையில் பின்பற்றும் மந்திரச்சொல்லும்கூட. ஒவ்வொரு நாளும் தன்னுடன் இருக்கும் நண்பர்களையும், சந்திக்கும் புதிய மனிதர்களையும், தன்னுடன் பணிபுரிபவர்களையும் ஆச்சர்யப்படுத்தி அழகுப் பார்ப்பது அஜித்துக்கு கை வந்த கலை.
*
ஆரம்ப காலத்தில் அஜித்துக்கு வீட்டில் சமைத்துக் கொடுப்பதற்கு ஒரு வயதான பெண் இருந்தார். எப்போதுமே அவர் சமைப்பதை ருசித்து சாப்பிடுவது அஜித்தின் வழக்கம். ஒரு நாள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார் அஜித். காலையில் சமைப்பதற்கு அந்த பெண் வந்து நேரடியாக சமையலைறைக்கு சமைக்கச் சென்றார். உடனே அஜித், "நீங்கள் இன்று சமைக்க வேண்டாம். நான் சமைக்கிறேன், நீங்கள் சாப்பிட இருக்கிறீர்கள்" என்று கூறிவிட்டார். அன்று அவரே சமைத்து, தான் அமர்ந்து சாப்பிடும் டைனிங் டேபிளில் அந்தப் பெண்மணியை உட்கார வைத்து பரிமாறி சாப்பிட வைத்திருக்கிறார். அஜித்தின் இந்த விருந்தோம்பலை கொஞ்சமும் எதிர்பார்த்திராத அந்தப் பெண் அப்படியே நெகிழ்ந்துவிட்டார்.
*
அஜித்தின் வீட்டில் கார் நிறுத்தும் இடத்தில், கீழே பதிந்திருக்கும் கற்களை மாற்ற ஆட்களை வரச் சொல்லியிருக்கிறார்கள். அங்கு பணியாற்ற வந்தவர் கற்களை எல்லாம் எடுத்துவிட்டு புதிய கற்களை பதிக்கும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார் அஜித். முதல் வரிசையில் கற்களை எல்லாம் பதித்தவுடன், "நீங்கள் உட்காருங்கள்.. நான் பதிக்கிறேன்" என்று கூறிவிட்டு, மீதமிருந்த இடத்தில் அஜித்தே கற்களை பதித்து விட்டார். வேலை முடிந்து போகும்போது பேசியபடி முழு சம்பளத்தையும் கொடுத்து அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் அஜித்.
*
அஜித்துக்கு எப்போதுமே இரவு நேரங்களில் காரை எடுத்துக் கொண்டு சென்னையைச் சுற்றுவது பிடிக்கும். ஒரு முறை அவருடைய டிரைவரை அழைத்துக் கொண்டு இரவு 11 மணிக்கு திருவான்மியூரில் இருந்து தி.நகருக்கு வந்திருக்கிறார்.
தி.நகரில் உள்ள கண்ணதாசன் சிலைக்கு முன்பு கார் நின்றுவிட்டது. என்ன பிரச்சினை என்று பார்த்தபோது காரில் பெட்ரோல் இல்லை. அப்போது டிரைவர் அஜித்திடம் "சார்.. நீங்கள் ஸ்டீரிங் பிடித்துக் கொள்ளுங்கள். நான் தள்ளுகிறேன். பென்ஸ் பார்க் ஹோட்டல் அருகில் பெட்ரோல் பங்க் இருக்கிறது. அங்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு கிளம்பலாம்" என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அஜித், "ஏன் நீங்கள் தள்ளினால் மட்டும் தான் கார் நகருமா.. நான் தள்ளினால் நகராதா?" என்று கூறிவிட்டு காரைவிட்டு இறங்கிவிட்டார். இரவு என்பதால் அங்கிருந்தவர்களுக்கு அஜித் என்று தெரியவில்லை. அங்கிருந்து பென்ஸ் பார்க் வரை காரை தள்ளிக் கொண்டே சென்று பெட்ரோல் போட்டுக்கொண்டு கிளம்பி இருக்கிறார்கள்.
*
தன்னிடம் டிரைவராக பணியாற்றியவருக்கு வீடு ஒன்றை வங்கியில் மாதத் தவணை முறையில் முன்பணம் கட்டி வாங்கி கொடுத்தார் அஜித். சில நாட்களில் அந்த டிரைவர் வேலையை விட்டுச் செல்ல வேண்டியதாகிவிட்டது. ஆனால், வீடு மட்டும் டிரைவரின் பெயரிலியே இருந்தது. மாத தவணையை அவரால் கட்ட முடியாமால், சில மாதங்களில் வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பினார்கள். வீடு ஜப்தி செய்வது வரை வந்துவிட்டது.
முன்னாள் டிரைவர் மிகுந்த கவலையில் இருக்கும் தகவல் அஜித்திடம் தெரிவிக்கப்பட, நேராக வங்கிக்கு போன் செய்து மீதித் தொகை எவ்வளவு இருக்கிறது என்று விசாரித்து, அனைத்து பணத்தையும் கட்டிவிட்டார். அந்த வீட்டை உடனடியாக முன்னாள் டிரைவரின் பெயருக்கே முழுமையாக மாற்றியும் கொடுத்துவிட்டார். அந்த டிரைவரின் மகிழ்ச்சியை விவரிக்கத் தேவையில்லை.
*
சமீபத்தில் 'என்னை அறிந்தால்' படப்பிடிப்பு சிக்கிமில் நடைபெற்றது. அஜித், விவேக் இருவரும் ஒன்றாக படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, அந்தக் காரின் டிரைவருக்கு ஒரு போன் கால் வந்திருக்கிறது. காரை நிறுத்திவிட்டு பேசியிருக்கிறார். பழைய போன் என்பதால் அவர் அந்த செல்போனைத் தட்டி, ரப்பர் பேண்ட் எல்லாம் போட்டு பேசி இருக்கிறார். ஆனால் சிக்னல் சரியாகக் கிடைக்காததால் சரியாக பேச முடியவில்லை.
கார் கிளம்பி சென்று கொண்டிருக்கும் போது, அஜித் ஓர் இடத்தில் காரை ஒரமாக நிறுத்துமாறு சொல்லி, மொபைல் போன் கடைக்கு சென்று புதிய மாடல் போன் ஒன்றை வாங்கி வந்து, டிரைவரிடம் "உங்களுடைய போனை கொடுங்கள்" என்று கேட்டுவாங்கி, சிம் கார்டை கழட்டி புதிய போனில் போட்டு, "இப்போது பேசுங்கள் நன்றாக கேட்கும்" என்று டிரைவரிடம் கொடுத்திருக்கிறார் அஜித்.
*
இப்படி தன்னைச் சுற்றியிருப்பவர்களை சர்ப்பிரைஸ் தருவதுதான் அஜித்தின் சின்ன சின்ன ஆசைகளின் முக்கியமானவை. தேவையானவர்களுக்கு அஜித் செய்திருக்கும் உதவிகளை எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால், அவர் உதவிகளை செய்துவிட்டு கூறுவது "எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என்னுடைய பெயர் வெளியே தெரியக் கூடாது" என்பது தான்.
*
அஜித் அளித்த பேட்டி ஒன்றில் கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது...
"என்னால் தொடர்ந்து வருஷத்துக்கு 200 நாள் கால்ஷீட் கொடுத்து கோடி கோடியாக சம்பாதிக்க முடியும். ஆனால், எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த அஜித் மனசுக்குப் பிடிச்சதை மட்டும்தான் செய்வான். மனுஷனுக்குச் மகிழ்ச்சிதான் சார் முக்கியம்!''
மகிழ்ச்சி... அதானே எல்லாம்!
கா.இசக்கிமுத்து - தொடர்புக்கு esakkimuthu.k@thehindutamil.co.in
முந்தைய அத்தியாயம்: >ஸ்டார் டைரி 1 - அஜித் | 'தல' பின்பற்றும் திருக்குறள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT