Published : 23 Apr 2015 12:27 PM
Last Updated : 23 Apr 2015 12:27 PM
அஜித்தைப் பற்றிய பெர்சனல் விஷயங்கள் என்றவுடன், "அஜித் சாருக்கு. இதெல்லாம் பிடிக்காதே. நாங்கள் பேச முடியாதே" என்றார்கள், தற்போது அவருடன் நெருக்கம் காட்டுபவர்கள். சரி, வேறு எப்படி எல்லாம் அஜித்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் என்றவுடன், அவரை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள், உடன் நடித்தவர்கள், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என பலரையும் சந்தித்து சேகரித்த தகவல்கள்தான் ஸ்டார் டைரி தொடரில் இனி...
திரைப்படத்தில் தோன்றும் அஜித் பற்றி நமக்குத் தெரியும். படப்படிப்பில் அவரது அணுகுமுறை எப்படி இருக்கும்? அவருடன் படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்கள் சொன்ன சுவாரசிய தகவல்களுடன் தொடங்குவோம்.
படப்பிடிப்பில் அஜித் எப்படி?
பெரும்பாலான பெரிய நடிகர்கள், நடிகைகள் என யாராக இருந்தாலும், அவர்கள் படப்பிடிப்புக்கு வந்தவுடன் காரில் இருந்து இறங்கி நேராக கேரவேன் சென்றுவிடுவார்கள். ஆனால், அஜித் அதில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டவர். காரில் இருந்து இறங்கி நேரடியாக படப்பிடிப்பு நடைபெறும் தளத்துக்கு செல்வார். அங்கிருக்கும் இயக்குநர்கள், லைட்மேன்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைவருக்குமே தனித்தனியாக சென்று "Good Morning. Have a Good Day" என்று கூறுவார்.
அதன்பிறகு இயக்குநரிடம் இன்றைக்கு முதல் ஷாட் என்ன என்பதை எல்லாம் விசாரித்துவிட்டுதான் கேரவேனுக்கு செல்வார். படப்பிடிப்பு முடிந்தவுடன் அதே போல அனைவரிடம் சென்று கைக்கொடுத்துவிட்டு தான் படப்பிடிப்பில் இருந்து விடைபெறுவார்.
எப்போதுமே நாம் ஒரு பெரிய நடிகரின் படப்பிடிப்பில் பணியாற்றுகிறோம் என்று உடன் பணிபுரிபவர்கள் நினைக்கக் கூடாது. அவ்வாறு நினைத்தால் எப்போதுமே ரொம்ப டென்ஷனாக இருப்பார்கள். அப்படி இருக்கும் சூழலால் பணிபுரிவது கஷ்டமாக இருக்கும். அப்படி இருக்கக் கூடாது என்பது தான் அஜித்தின் இந்த அணுகுமுறைக்குக் காரணம். தனது படப்பிடிப்பில் தன்னை ஒரு பெரிய நடிகர் என்று யாருமே நினைக்கக் கூடாது என்பதில் அவர் மிகத் தெளிவாக இருப்பார்.
தனது படப்பிடிப்புக்கு எப்போதுமே ரசிகர்களால் தொந்தரவு வரக்கூடாது என்பதில் இப்போது அஜித் மிகவும் தெளிவாக இருக்கிறார். அதற்கான காரணம், 'ஆரம்பம்' படப்பிடிப்பு நிகழ்வில் கற்ற பாடம்.
அஜித் கற்ற பாடம்!
'ஆரம்பம்' படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் இருந்து வெளியே ஓர் இடத்தில் நடைபெற்றது. அந்த இடம் எப்படியோ ரசிகர்களுக்கு தெரிந்து, மிகப்பெரிய கூட்டம் கூடிவிட்டது. அஜித்துக்கு இந்த விஷயம் தெரிய, அவர்கள் முன்பு சென்று கையசைத்தால் அவர்கள் களைந்து சென்றுவிடுவார்கள் என்று நினைத்தார். வீடியோ பதிவைப் பார்க்க...
ரசிகர்களுக்கு கைக்காட்ட அஜித் வந்த வீடியோ பதிவு
ஆனால், அஜித்தை பார்த்தவுடன் ரசிகர்கள் குரல் எழுப்பவே, 'அமைதி அமைதி' என்று செய்கை காட்டினார். ரசிகர்கள் கையில் இருந்த பாலை அப்படியே அவருடைய கேராவேன் வண்டியின் மீது ஊற்றிவிட்டார்கள். இந்த விஷயம் அஜித்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
பின்னர், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு இன்னோவா காரில் ஏறி கிளம்பினார். ரசிகர்கள் அஜித்தை அருகில் பார்க்க வேண்டும் என்று அக்காருக்கு பின்னால் ஒரு கும்பலாக கிளம்பினார்கள். ஒரு ரசிகர் மிகவும் வேகமாக காருக்கு அருகில் வர, காரை நிறுத்திவிட்டார்.
அது தொடர்பான வீடியோ பதிவு:
காரில் இருந்து இறங்கினால் கூட்டம் கூடிவிடும் என்று நினைத்து கன்ணாடியை மட்டும் இறக்கி, ரசிகரைப் பார்த்தவுடன் கார் கிளம்பியது. ஒரு கட்டத்தில் வளைவில் திரும்பிய காரை ரசிகர்களால் பின் தொடர முடியவில்லை.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு, எங்கு படப்பிடிப்பு நடந்தாலும், ரசிகர்களால் எந்த ஒரு தொந்தரவும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். 'வீரம்' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, அஜித் எப்போது வருவார், எப்போது செல்வார் என யாருக்குமே தெரியாது. 'என்னை அறிந்தால்' படப்பிடிப்பு சென்னையில் உள்ள முக்கியமான சாலைகளில் நடைபெற்றாலும் எப்போது நடந்தது என்பது படக்குழுவுக்கு மட்டுமே தெரியும். அண்ணா சாலையில் உள்ள காட்சிகள் எல்லாம் நள்ளிரவில்தான் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். அதுவும், எங்கே படப்பிடிப்பு என்பது படக்குழுவினருக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு தான் தெரிவித்திருக்கிறார்கள்.
அஜித் பின்பற்றும் திருக்குறள்
'ராமன் அப்துல்லா' படப்பிடிப்பில் நடந்த பிரச்சினையால் தமிழ்த் திரையுலகம் மற்றும் பெப்சி சங்கத்தினர் என இரு தரப்பாக பெரிய பிரச்சினை உருவான நேரம். அந்தச் சமயத்தில், திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பான பெப்சிக்கு ஆதரவாக முதல் ஆளாக அறிக்கைக் கொடுத்தவர் அஜித். அந்த அறிக்கையே அவருக்கு பிரச்சினையாக உருவெடுத்தது.
அந்த நேரத்தில் அஜித்தை வைத்து ஒரு படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் முன்வந்தார். பெப்சி பிரச்சினையால் அஜித்திடம் "படம் பண்ண வேண்டாம். கொடுத்த அட்வான்ஸ் தொகையை திரும்ப கொடுத்துவிடுங்கள்" என்று கேட்க, "தாராளமாக" என்று இவரும் கொடுத்து விட்டார்.
"இனிமேல் எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை வைத்து படம் பண்ண மாட்டேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்" என்று அஜித்திடம் கூறிவிட்டு தயாரிப்பாளர் கோபத்துடன் கிளம்பிவிட்டார்.
காலங்கள் உருண்டோடின. அதே தயாரிப்பாளர் பெரும் நஷ்டத்தில் இருந்தபோது, தன்னுடைய தயாரிப்பில் நடித்த பெரிய நடிகர்களிடம் தேதிகள் கேட்டார். யாருமே தேதிகள் கொடுக்கவில்லை. அந்தச் சமயத்தில் அதே தயாரிப்பாளரை அழைத்து, "நான் தேதிகள் தருகிறேன். படம் பண்ணுகிறீர்களா?" என்று கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் அஜித்.
"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"
இந்தத் திருக்குறளை தன்னை அறியாமல் அஜித் பின்பற்றி வருவதற்கு இதுவே ஓர் உதாரணம்.
அந்தத் தயாரிப்பாளரின் பெயர் ஏ.எம்.ரத்னம். கஷ்டத்தில் இருந்த தயாரிப்பாளருக்கு அவர் செய்த படத்தின் பெயர் 'ஆரம்பம்'. அதனைத் தொடர்ந்து 'என்னை அறிந்தால்'... தற்போது மீண்டும் தனது இன்னொரு படத் தயாரிப்பு வாய்ப்பையும் கொடுத்திருக்கிறார் அஜித்.
'நிஜ' அஜித்தை அறிந்தவர்!
"தல அப்படினு யாரையும் எனக்கு தெரியாது", "அஜித்தை வைத்து படம் இயக்கமாட்டேன்" என்று ஒரு காலத்தில் கூறியவர் கெளதம் வாசுதேவ் மேனன். ஆனால், அவருக்கு ஒரு கஷ்டம் என்று கேள்விபட்டபோது உடனடியாக "நாம படம் பண்றோம்" என்று கூறி உருவான படத்தின் தலைப்பு 'என்னை அறிந்தால்'.
'என்னை அறிந்தால்' படம் வெளியான அன்று இயக்குநர் கெளதம் மேனனுக்கு போன் பண்ணி மற்ற நடிகர்கள் சிலர் போல படம் எப்படி போகிறது? எந்த ஊர்களில் இருந்து ரிப்போர்ட் வந்தது என்றெல்லாம் கேட்கவில்லை. அஜித் கேட்டதோ "கெளதம்... பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிட்டதா? சந்தோஷமாக இருக்கிறீர்களா? படம் வெற்றி, தோல்வி எல்லாம் விடுங்கள்" என்றுதான்.
படம் முடிந்து வெளியாகிவிட்டது. அதற்குப் பிறகு தன்னை யாரென்றே தெரியாது என்று சொன்ன இயக்குநரிடம் அஜித் ஏன் பேச வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். தன்னை முழுமையாய் அறியாதவரையும் நண்பராக்கி சந்தோஷப்படுத்த வேண்டும் என்பது அஜித்தின் குணம் அல்ல... அவரது இயல்பு.
கா.இசக்கிமுத்து - தொடர்புக்கு esakkimuthu.k@thehindutamil.co.in
முந்தைய அத்தியாயம்:>ஸ்டார் டைரி 5 - கமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT