Published : 02 Apr 2015 12:46 PM
Last Updated : 02 Apr 2015 12:46 PM
பேச்சாலேயே வாய்ப்பந்தல் போடுகிறவர்களைப் பார்த்து 'அவர் 4 வீடு கட்டுவார்... எட்டு வீடு கட்டுவார்' என்பார்கள். ஆனால் வீடுகட்டி விளையாடும் ஆட்டம் நம் சமூகத்தில் உண்டு என்பதும் அது சிலம்பாட்டம் என்பதும் நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்.
அந்த சிலம்பாட்டத்தைப் பற்றி அதன் வரலாற்றையும் அதன் பயிற்சிமுறைகளைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது 'தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' என்ற புத்தகம்.
கம்பை எப்படி பிடித்து களத்தில் இறங்க வேண்டும் என்பதிலிருந்து தொடங்கி, அதன் வெவ்வேறு பயிற்சி முறைகளையும் தகுந்த ஓவியங்களோடும் புகைப்படத்தோடும் இந்நூல் தருகிறது.
சிலம்பத்தில் பாவ்லா என்ற சுவடு என்பது கம்பை வீசி எதிராளியை திணறடித்து வித்தையாகும். கம்பை சுழற்றுவதற்கும் அளவுகள் இருக்கின்றன. யானை துதிக்கை வீச்சு, நாகபாண வீச்சு, கருட பந்தண நிலை, கழுகுநிலை, கொக்குக்கால் நிலை, போன்ற படைவீச்சின் பல்வேறு நிலைகளில் ஒரே நேரத்தில் பலரின் தாக்குதல்களையும் முறியடிக்க முடியுமாம்.. படைவீச்சின் தொடர்ச்சியாகத்தான் முன்கால் தொடங்கும் மூன்றடி பாவலாவும் வீச்சுக்களுடன் 6 வீடு கட்டுதல், 8 வீடு கட்டுதல் போன்றவையும் வருகின்றன...
ஏதோ ஏனோதானோ என்று இல்லாமல் ஒரு புதிய வாசகனுக்கு அல்லது சிலம்ப மாணவனுக்கு சொல்லவேண்டிய அத்தனை அம்சங்களையும் புரியும்விதமான படங்களைப் போட்டு பார்த்துப் பார்த்து உருவாக்கியிருக்கிறார் நூல் ஆசிரியர் கலை நன்மணி அ.அருணாசலம்.
அவர் ஒரு சிலம்பாட்டக் கலை ஆசிரியருமாவார். எனவே நூலின் நம்பகத்தன்மை மிகமிகத் துல்லியமானது. வீணே அடிதடி, குத்துவெட்டு என்று போகாமல் நல்ல விஷயங்களுக்காக மக்களிடம் தேவைப்படுவது போர்க்குணம். ஆனால் அது மழுங்கிவிட்ட இக்காலத்தில் இந்நூல் மிகவும் விநோதமாகத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை.
சிலம்பத்தின் வரலாற்றைச் சொல்லும் நூலின் ஒரு பகுதி இங்கே பகிரப்படுகிறது:
சிலம்பம் என்று சொல்லும்போது நம் நினைவுக்கு வருவதெல்லாம் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரமே! வளைவான ஓர் அணியின் உள்ளிருந்த பரல்களின் ஒலியினால், அவ்வணி 'சிலம்பு' எனப் பெயர் பெற்றது. எனவே, சிலம்பு பற்றி எழுந்த காப்பியத்திற்கு இளங்கோவடிகள் 'சிலப்பதிகாரம்' எனப் பெயரிட்டார்.
'சிலம்பம்' என்ற சொல்லிலுள்ள 'சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு வேறு பல பொருள்களும் உண்டு. பலவிதமான ஓசைகளைக் குறிக்கும் பொதுச் சொல்லாக, அச்சொல் வழங்கப்படுகிறது.
பாண்டிய நாட்டின் பல இடங்களிலும் இலக்கியங்களிலும் இச்சொல் எந்தெந்த ஓசைகளுக்கெல்லாம் பயன்படுகிறது என்பதை, கீழ்க்காணும் எடுத்துக்காட்டுக்கள் மூலமாக நன்கு அறியலாம்.
'சிலம்பாறு' என்ற பெயரில் ஒரு சிற்றாறு மதுரைக்கு அருகில் அழகர் மலையில் உற்பத்தியாகி, திருமாலிருஞ்சோலை வழியாகப் பாய்ந்தோடுகிறது. 'சலசல' என்ற ஓசையுடன் வருவதால் இப்பெயர் பெற்றது. இன்றும் தென்மாவட்டங்களில் அதிகமாகப் பேசுபவர்களை, "சும்மா சலசல" என, 'சலம்பாதே' எனத் திட்டுவது பேச்சு வழக்கில் காணப்படுகிறது. 'சிலம்பாதே' என்ற சொல்லின் மருவலே 'சலம் 'பாதே' என்பது ஆகும்.
மேலும், ஆண்டாள் எழுதிய திருப்பாவையின் ஆறாவது பாடல்,
"புள்ளும் சிலம்பினகாண் புள் அரையான் கோயிலில்"
எனத் தொடங்குகிறது. இப்பாடலில் 'புள்' என்ற சொல் பறவையைக் குறிக்கிறது. 'புள்ளும் சிலம்பின' என்ற தொடர் பறவைகளின் ஒலியைக் குறிப்பதாகும்.
தமிழர்கள், சோக ஒலியை 'புலம்பல்' என்றும், தண்ணீர் அசையும் ஒலியை 'அலம்பல்' என்றும் வழங்கியது போல, சிலம்பிலுள்ள பரல்களின் ஒலி, மனிதர்களின் பேச்சொலி, பறவைகளின் கீச்சொலி, ஆறு பாய்வதால் எழும் ஓசை, ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஒலி போன்றவற்றைக் குறிக்க 'சிலம்பல்' என்ற சொல்லைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
எனவே கம்பு, வாள், ஈட்டி, சுருள் போன்ற ஆயுதங்கள் மோதும்போது ஏற்பட்ட 'கணீர்' என்ற ஓசையினாலும், கம்பு சுழற்றும்போது ஏற்படும் 'விர்' என்ற ஓசையினாலும், எதிரிகளைப் பயமுறுத்தியதாலும் இக்கலைக்குச் 'சிலம்பம்' எனப் பெயர் ஏற்பட்டது.
ஆண்கள் காலில் சிலம்பு அணிந்து ஆடியதால், 'சிலம்பம்' எனப் பெயர் வந்ததாக ஒரு கருத்து நிலவிவருகிறது. இக்கருத்து முற்றிலும் தவறு. ஆண்களுக்கான காலணி வீரக்கழல் ஆகும்.
சிலம்பு பெண்களுக்கான அணியாகும். சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் கண்ணகி இக்கூற்றைக் கூறுவதாக "வாழ்தல் வேண்டி" எனத் தொடங்கும் பாடல் குறிப்பிடுகிறது.
*
நூல்: தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும் | பக்.222, விலை: ரூ.150
ஆசிரியர்: கலை நன்மணி
வெளியீடு: அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 600 078. தொலைபேசி எண். 978902478, 9789072478 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT