Published : 11 Apr 2015 04:56 PM
Last Updated : 11 Apr 2015 04:56 PM
இன்று பல்லாயிரக்கணக்கானவர்களை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன திருப்பூர் பனியன் கம்பெனிகள். இந்நிறுவனங்கள் இன்று பெருமளவில் உருவாகக் காரணமாக இருந்தவர்களின் வரலாற்றைப் பற்றி 'முகமற்றவர்களின் அரசியல்' என்ற புத்தகத்தில் கே.எம்.சரீப் எழுதியுள்ளார்.
இப்புத்தகத்தில் 22 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு பிரச்சினையை அல்லது ஒரு புதிய செய்தியை முன்வைக்கிறது.
கடற்கரையோர முஸ்லீம்கள் பற்றி
'நீண்ட கரையின் மிக நீண்ட கதை' என்ற கட்டுரையில் கடலோர முஸ்லிம் கிராமங்களைப் பற்றிய நாம் அறியாத பல செய்திகள் உள்ளன. இங்குள்ள மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன்னர் சமண சமயத்தை தழுவியவர்களாகவே இருந்தனர். தூய தமிழ் சொற்களான தொழுகை, நோன்பு, பள்ளிவாசல், பட்டணம், ஆணம், அத்தா போன்றவை சமணர்களின் மொழி வழக்கில் இருந்தவையே என்று ஒரு கட்டுரையில் ஒரு புதிய செய்தியை நமக்குத் தருகிறார். இன்னொரு கட்டுரையில், தமிழ் பேசும் இஸ்லாமிய சமூகத்தில் ஆண்களைவிட பெண்களே தற்போது அதிகம் கல்வி கற்போராக உள்ளனராம். மேல்நிலைக்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, உயர்கல்வி என இச்சமூகத்தில் பெண்களே அதிகம் படிக்கிறார்கள் என ஒரு நல்ல புள்ளிவிவரத்தையும் தருகிறார்.
காவிரிப் பிரச்சனை குறித்து
இதில் காவிரி பிரச்சினையைப் பற்றியும் ஒரு செறிவான கட்டுரை உண்டு. நீராதாரப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வாக அவர் சொல்வது நதிநீர் இணைப்பை மட்டுந்தான். நதிகள் தேசியமயமாக்கப்பட்டால ஒழிய எந்த தீர்வும் இங்கே ஏற்படப் போவதில்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாவண்ணம் எல்லா நதிகளையும் ஒன்றிணைக்காவிட்டால் வேறு வழி எதுவும் ஏற்படப்போவதில்லை என்கிறார்.
தமிழ் சினிமா வரலாறு
இந்நூலில் ஆறு பக்கமே உள்ள ஒரு கட்டுரை தமிழ் சினிமா வரலாற்றைப் பற்றியது. ஆனால் மிகவும் அடர்த்தியானது. கீசக வதம் தொடங்கி புராண சினிமாவாக இருந்தது தமிழ் திரையுலகம். கல்கியின் 'தியாக பூமி'யிலிருந்து தொடங்கி நிறைய தமிழ்ப்படங்கள் பிரிட்டிஷ்க்கு எதிராக காங்கிரஸின் விடுதலைப் பிரச்சார படங்களாக வந்து வெற்றிநடை போட்டன. மக்களின் மனதின் சுதந்திரத் தீயை சுடர்விட்டு பிரகாசிக்க வைத்தன.
பின்னரே வேலைக்காரி, பராசக்தி உள்ளிட்ட திராவிட இயக்கப் படங்கள் அடியெடுத்துவைத்தன. அடியெடுத்து வைத்ததோடு தமிழ் திரையுலகப் போக்கையே அதிரவைத்தன. தமிழக மக்கள் தங்களுக்கான முதல்வரை கோடம்பாக்கத்திலிருந்தே தேர்ந்தெடுத்ததன் வாயிலாக அதன் செல்வாக்கு மேலும் அதிகரித்தது. சரிவையும் ஏற்படுத்தின. சமீபத்தில் கடைசியாக கருணாநிதி குடும்பத்தினரின் அத்தனை நிதிகளும் இன்று கோடம்பாக்கத்தில் களம்இறங்கியுள்ளதையும் விமர்சிக்கிறார்.
காவிரிப் பிரிச்சினை, முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றிய பல கட்டுரைகளும் இதில் உள்ளன. இதில் உள்ள 'வரலாற்றை உருவாக்கியவர்கள்' கட்டுரை மிகமிக முக்கியமானது. பல்லாயிரக்கணக்கானவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் திருப்பூர் பனியன் கம்பெனிகள் உருவாகக் காரணமாக இருந்தவர்களை அறிய உதவுகிறது.
நான்கே நான்குப் பக்கங்களே உள்ள இக்கட்டுரையிலிருந்து சிற்சில பகுதிகள்...
குடும்பத்தினரின் எதிர்ப்புகளையும் மீறி தன்னுடைய சகோதரர் சத்தார் சாகிப்பையும் பங்குதாரராக இணைத்துக்கொண்டு பேபி நிட்டிங் கம்பெனி என்ற பெயரில் தென்னிந்தியாவின் முதல் பனியன் தொழிற்சாலையை உருவாக்கினார் எம்.ஜி.குலாம் காதர் சாகிப்.
1935இல் அவர் கொண்டுவந்து சேர்த்த இயந்திரம் தலைசுத்தி மிஷின் என்றழைக்கப்பட்டது. பெரிய மாட்டு வண்டி சக்கரம்போல் இருந்த சக்கரத்தை இருவர் சேர்ந்து சுழற்ற வேண்டும். இதை மின்சாரத்தால் இயங்க வைக்க முடியாது. கையால் சுற்றித்தான் இயங்க வைக்க முடியும். மனித உழைப்பின்றி வேறு வழியில்லை.
பனியன் சகோதரர்கள்
இரவில் பெட்ரோமாக்ஸ் லைட்டோடு இயந்திரத்தோடு இயந்திரமாய் மாறிப்போவார் குலாம் காதர் சாகிப். இயந்திரம் பழுதாகிப் போனது. பழுது பார்க்க கொல்கத்தா செல்ல வேண்டும். தாங்களே மெஷின் மேனாக ஆனார்கள் பனியன் சகோதரர்கள். இடையில் பின்னலாடை செய்யப் பயன்படும் ஊசிகள் உடைந்து போயின. அதேபோல ஊசியை கோவை வின்சென்ட் சாலையில் உள்ள மாரியப்பன் லேட் பட்டறை உதவியோடு புதிய ஊசிகளைத் தயார் செய்தனர். அன்றைய தென்னிந்தியாவில் மேல் சட்டை போடுபவர்களும் டிராயர் அணிபவர்களும் மிகக்குறைவு.
இந்தியா முழுவதும்
துரைமார்களும் பெருந்தனவந்தர்கள் மட்டுமே அவ்வகை ஆடைகளை அணிந்தனர். 'அங்கராக்' எனப்படும் மேலாடையும் 'கோவணம்' என்ற கீழாடையும்தான் தேசிய உடைகளாக இருந்தன. பேபி நிட்டிங் தயாரித்த பனியன்கள் திருப்பூரைச் சுற்றியுள்ள சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் பனியன்களை அனுப்ப ஆரம்பித்தது இக்கம்பெனி.
அன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் ஒரே வாகனப்பதிவு கிடையாது. ஒரு ஊரில் பதிவு செய்தால் அந்த வாகனத்தை வேறு ஊரில் இயக்க முடியாது. இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி வாகனங்களில் இந்தியா முழுவதும் பேபி நிட்டிங் கம்பெனியின் பனியன்கள் அறிமுகமாயின.
15 ஆயிரம்கோடி அன்னியச் செலாவணி
சாதாரண இரண்டு இஸ்லாமியர்களால் தொடங்கப்பட்ட இந்த பனியன் தொழில் இன்றைக்கு இந்தயாவிற்கு 15 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணியை ஈட்டித்தருகிறது. குலாம் காதர் சாகிப், சத்தார சாகிப் ஆகியோரின் தொலைநோக்குப் பார்வை இன்றைக்கு திருப்பூரைப் பனியன் நகரமாக மாற்றி இருக்கிறது. எண்ணிலடங்கா தொழிலதிபர்களை உருவாக்கியுள்ளது.
இன்றைக்கு பேபி நிட்டிங் கம்பெனி இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் திருப்பூர் என்கிற புதிய வரலாறு உருவாக அந்நிறுவனமும் அதை உருவாக்கிய எம்.ஜி.குலாம் காதர் சாகிப்பும், எம்.ஜி.சத்தார் சாகிப்பும் காரணமாக இருந்தனர்.
நூல் ஆசிரியர்: கே.எம்.சரீப், பக்: 135, விலை: ரூ.110.
நூல் வெளியீடு: உயிர்மை பதிப்பகம்,
11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018.
தொலைபேசி: 9144 - 24993448.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT