Published : 24 Apr 2015 10:20 AM
Last Updated : 24 Apr 2015 10:20 AM

ஜி.யு.போப் 10

ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழுக்கு அருந்தொண்டாற்றிய ஜார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் (1820) பிறந்தவர். தந்தை வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது. ஹாக்ஸ்டன் கல்லூரியில் பயின்ற பிறகு, சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார். கப்பலில் பயணம் செய்த 8 மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.

l தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை, ராமானுஜக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கற்றார்.

l தஞ்சை, உதகமண்டலம், பெங்களூருவில் சமயப் பணியோடு, கல்விப் பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.

l தான் போற்றிக் கொண்டாடும் மேலைநாட்டு மெய்ஞானிகளின் வாசகங்கள் திருவாசகத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். இந்தியாவில் பல பள்ளிகளைத் திறந்து லத்தீன், ஆங்கிலம், ஹீப்ரு, கணிதம், தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார்.

l இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு பேராசிரியராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். 1886-ல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் திருக்குறளை ‘Sacred Kural’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

l புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகியவற்றைப் பதிப்பித்தார். நாலடியார், திருவாசகத்தை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என்ற பெயரில் 3 பாகமாக எழுதினார்.

l தமிழ்ப் புலவர்கள், தமிழ்த் துறவிகள் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார். இவரது நூல்கள் பல பதிப்புகள் வெளிவந்தன. பழைய தமிழ் நூல்களைத் தேடித் தேடிப் படித்தார். பழைய ஏட்டுச் சுவடிகளை சேகரித்தார்.

l தமிழ் இலக்கணம் மூன்று பாகங்கள் மற்றும் தமிழ் செய்யுள்களை தொகுத்து ‘செய்யுள் கலம்பகம்’ என்ற பெயரில் வெளியிட்டார். ராயல் ஏஷியாடிக் சொசைட்டி இவருக்கு தங்கப் பதக்கம் அளித்து சிறப்பித்தது. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலையும் இளம் பெருவழுதி எழுதிய ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

l இவர் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டு அளப்பரியது. திருவாசகம் மீதான இவரது காதல் அபரிமிதமானது. தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதிவிட்டுதான் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. ஒருமுறை அவ்வாறு பாடல் எழுதியபோது, உள்ளம் உருகி கண்ணீர் பெருகி கடிதத்தின் மீது விழுந்தது என்பார்கள்.

l தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய ஜி.யு.போப் 88 வயதில் (1908) மறைந்தார். இங்கிலாந்தின் மத்திய ஆக்ஸ்போர்டு பகுதியில் உள்ள செயின்ட் செபல்கர் தோட்டத்தில் இவரது கல்லறை உள்ளது. ‘நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று தனது கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், அந்த ஆசை நிறைவேறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x