Last Updated : 25 Apr, 2015 04:48 PM

 

Published : 25 Apr 2015 04:48 PM
Last Updated : 25 Apr 2015 04:48 PM

கல்வியில் இட ஒதுக்கீடு எங்கள் நிலையை மாற்றும்: லிவிங் ஸ்மைல் வித்யா

வரலாற்றுப் பக்கங்களை திருப்பிப் பாருங்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முன்னேற்றமும், உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வும் கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு காரணமாகவே சாத்தியமானதற்கான சான்றுகள் கிடைக்கும்.

திருநங்கைகளுக்கு தேசிய ஆணையமும், மாநில அளவில் ஆணையமும் அமைக்க வகை செய்யும் 'திருநங்கைகள் உரிமை மசோதா 2014' மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றால் தங்களுக்கு கிடைக்கும் சமுதாய அந்தஸ்து குறித்தும் சட்டத்தை நிறைவேற்றும் போது அரசு கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் லிவிங் ஸ்மைல் வித்யா தி இந்து-வுக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

'திருநங்கைகள் உரிமை மசோதா 2014' மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக குரல் கொடுத்த திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

திருநங்கைகளாக நாங்கள் எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள எதிர்பார்ப்பது இலவசங்களை அல்ல. கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டையே. வரலாற்றுப் பக்கங்களை திருப்பிப் பாருங்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முன்னேற்றமும், உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வும் கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு காரணமாகவே சாத்தியமானதற்கான சான்றுகள் கிடைக்கும்.

தற்போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றால் நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கும். அதன் மூலம் சமூகத்தில் நாங்கள் கண்ணியமாக வாழ வழி பிறக்கும்.

அதேவேளையில் இந்த மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுக்கும்போது அரசு 2 கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். ஒன்று, திருநங்கைகள் உரிமை மசோதாவில் திருநம்பிகள் உரிமையையும் பேணும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். திருநம்பிகளும் எங்களைப் போலவே பாலின மாற்றுத்திறனாளிகள். அவர்களுக்கென்று தனியாக போராடுவதைவிட எங்களுக்கான உரிமைகளைப் பெறும்போதே அவர்களுடைய உரிமையையும் நிலைநாட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டாவது கோரிக்கை, எங்களை மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிட்டுச் சொல்வதை நாங்கள் விரும்பவில்லை. எங்களை பெண்கள் என்றே அழையுங்கள். உடல் சவால் உடைய மாற்றுத்திறனாளிகள் போல் நாங்களும் 'பாலின மாற்றுத் திறனாளிகள்'. ஒரு தலித் ஜாதிச்சான்றிதழில் மட்டுமே தலித் என்று அடையாளப்படுத்தப்படுகிறார். அவரது குடும்ப அட்டையிலோ, இல்லை பாஸ்போர்டிலோ அவ்வாறு தெரிவிக்கப்படுவதில்லை. அதேபோல், எங்களுக்கும் பாலின மாற்றுத்திறனாளி என மருத்துவச் சான்றிதழ் வழங்குங்கள். அதன் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குங்கள். அதைவிடுத்து எல்லா இடங்களிலும் எங்களை மூன்றாம் பாலினம் என அடையாளப் படுத்தாதீர்கள். நாங்களும் பெண்களே. நாங்கள் பெண்மையை உணரும் போது இந்த நிலைக்கு மாறுகிறோம். பெண்ணாக மாற வேண்டும் என்பதற்காகவே அறுவை சிகிச்சை செய்து கொள்கிறோம். எங்கள் வேதனையைத் துடைக்க எங்களை பெண்கள் என்று அடையாளப்படுத்துவதே சரியாக இருக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.

வித்யாவின் கோரிக்கை அவர்போல் உள்ள பாலின மாற்றுத் திறனாளிகள் பலரது சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இதைச் செய்யும்போது திருநங்கைகள் பிறரை ஆசீர்வாதம் செய்வார்கள், பிச்சை எடுப்பார்கள், பாலியல் தொழில் செய்வார்கள் என்ற நிலை மாறும். திருநங்கைகளை சமமாக நடத்த வேண்டும் என்ற மனப்பான்மை ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x