Published : 14 May 2014 10:32 AM
Last Updated : 14 May 2014 10:32 AM
முதுமையில் ஏற்படும் தொற்றுநோய்களைத் தடுக்கும் தடுப்பூசிகள் குறித்து முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராஜன் ஆலோசனை வழங்குகிறார்.
முதுமையில் தொற்றுநோய்களும் தொற்று அல்லாத நோய்களும் வருகின்றன. ப்ளூ காய்ச்சல், சளி, காசநோய், சிறுநீர்ப் பாதையில் கிருமிகள் தொல்லை, வயிற்றுப்போக்கு, அம்மை, அக்கி, வயிறு மற்றும் குடலில் பிரச்சினை போன்றவை தொற்றுநோய்கள். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயத் தாக்குதல், உடல் பருமன், மூட்டு வலி போன்றவை தொற்று அல்லாத நோய்கள்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொற்றுநோய்களே அதிகம் இருந்தது. தற்போது தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்கள் இரண்டும் சரிசமமாக இருக்கிறது.
முதியவர்கள் அடிக்கடி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வதற்கும், சிகிச்சை பலனின்றி இறப்பதற்கும் தொற்றுநோய்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. முதுமையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தொற்றுநோய்கள் வருகின்றன. நீரிழிவு நோய், தைராய்டு சமமின்மை நோய்களாலும், அதிக மாத்திரைகள் சாப்பிடுவதாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் உடலில் ஹார்மோன் குறைகிறது. இதனால், பிறப்பு உறுப்பில் வறட்சி ஏற்பட்டு அங்கு தொற்றுநோய் வருகிறது.
தொற்றுநோய்களைத் தடுக்க தண்ணீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்குச் செல்லக் கூடாது. ஹோட்டல் உணவுகள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். தினமும் இருமுறை குளித்து தூய்மையான உடை அணிய வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, பாதாம், பிஸ்தா போன்றவற்றை உணவுடன் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை அதிகம் குடித்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும். பிறப்பு உறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
தொற்றுநோய்களைத் தடுக்க முதியோருக்கும் தடுப்பூசிகள் வந்துவிட்டன. முதியவர்கள் பெரும்பாலும் ப்ளூ காய்ச்சல், நிமோனியா, டெட்டனஸ், டைபாய்டு, ஹெபடைடிஸ்-பி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ப்ளூ காய்ச்சலைத் தடுக்க ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். நிமோனியா காய்ச்சல் பாக்டீரியாவால் வருகிறது. இது சளி, இருமல் மூலம் பரவுகிறது. கவனிக்காமல் விட்டால், மூளையைக்கூட பாதிக்கும். முதியவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரே ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டால் இதைத் தடுக்கலாம். 10 சதவீதம் பேருக்கு மட்டும் 2-வது முறையும் தடுப்பூசி போடவேண்டியிருக்கும். இந்த தடுப்பூசிகள் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. தைரியமாக போட்டுக்கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT