Published : 23 Apr 2015 05:19 PM
Last Updated : 23 Apr 2015 05:19 PM
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது டப்ஸ்மேஷ் வீடியோக்கள். டப் ஸ்மேஷா, அது என்ன? என்று மொபைல் ஃபோன்களே கதி என கிடக்காதவர்கள் யோசிக்கலாம்.
பிரபலமான திரைப்பட வசனங்கள் அல்லது பாடல் வரிகளின் அசல் ஒலியை ஓடவிட்டு, அதற்கு பயனர்கள் வாயசைக்கும் வீடியோவை பதிவு செய்துகொள்ள, டப்ஸ்மேஷ் என்ற ஆண்ட்ராய்ட், ஆப்பிள் போன்களில் இயங்கும் ஒரு செயலி உதவுகிறது.
பதிவு செய்த வீடியோவை அப்படியே வைத்தால் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டின் ஆத்மா நம்மை மன்னிக்காது அல்லவா? எனவே வழக்கம் போல அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றி, லைக்குகளையும், ரீ ட்வீட்டுகளையும் பெற்று, இன்னும் பலரை உசுப்பேற்றி, அவர்களை அதைப் போலவே பதிவு செய்யவைத்து, அவர்களது வீடியோ சுமாராக இருந்தால் மனதளவில் நம்மை தேற்றிக் கொண்டு, சூப்பராக இருந்தால், வெகுண்டெழுந்து இன்னொரு வீடியோவை பதிவு செய்து, மீண்டும் பதிவேற்றி...
இப்படி இரண்டு நாட்களாக நம் தமிழ் இணையப் போராளிகள் பலர் கருப்பு, காவி சட்டைகளோடு டப்ஸ்மேஷ் வீடியோக்களை பதிவேற்றுவதில் பிஸியாக இருக்கிறார்கள்.
வழக்கம் போல அமெரிக்காவில் டப்ஸ்மேஷ் பிரபலமான சில மாதங்கள் கழித்தே இங்கு ஹிட்டடித்துள்ளது. ஆனாலும் அது ஒன்றும் குற்றமில்லை. இன்னும் சில நாட்களில் நம் மக்கள், டப் ஸ்மேஷ் ஜனத்தொகையிலும் மிஞ்சிவிடுவார்கள் போல. அப்படி ஆட்டிப் படைத்துவருகிறது இந்த மோகம்.
முதன்முதலில் இப்படியான வீடியோவை எனது ஃபேஸ்புக் பக்கத்தில், என்னை டேக் (Tag) செய்து நண்பர் ஒருவர் பதிவேற்றினார். அவர் அமெரிக்கவாசி என்பது கூடுதல் செய்தி. வீடியோவைப் பார்க்கும் போது எதுவும் விளங்கவில்லை. ஏன் இந்த வீடியோ, எதற்கு இவர் இந்த வசனத்தைப் பேசி பதிவேற்றியுள்ளார் என அவரிடமே கேட்டேன். அவர் "ஙே.... இதுகூடவா புரியவில்லை, கண்ட்ரீ ப்ரூட்" என மனதில் நினைத்திருப்பார் போல, பதில் சொல்லவில்லை.
அடுத்த நாளே மற்ற இணையப் போரளிகளின் உதவியால் எல்லாம் தானாகப் புரிந்தது. ஆனால், இந்த வீடியோக்கள் எதுவும் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. எதற்கும் நான் வாயைப் பிளக்கவில்லை. என் மனது மொத்தமும் வருத்தமே.
ஏனென்றால் சங்க கால ட்விட்டரான திருக்குறள், பழங்கால கிரிக்கெட்டான கில்லி, இவற்றைப் போல, இத்தகைய டப்ஸ்மேஷ் வீடியோவையும் தமிழன் என்றோ கண்டுபிடித்துவிட்டான் அல்லவா. இது கூடத் தெரியாமல் இணையத்தில் இந்தப் பாமரக் கூட்டம் எப்போதும் போல மேற்கத்தியனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே காரணத்தினாலேயே அதை ஆரத் தழுவி கொண்டாடுகிறதே என்ற வருத்தம் தான் எனக்கு.
நம் மண்ணின் மைந்தன், பச்சைத் தமிழன் ஒருவன், தமிழ் பாடலை வைத்து என்றோ செய்துவிட்ட டப்ஸ்மேஷ் வீடியோவை மறந்துவிட்டு, ஆங்கில மோகத்தில் அந்நியரின் செயலி என்ற காரணத்தினால் மட்டும் இதை பிரபலப்படுத்தி வைரல் ஆக்குவதில் என்ன நியாயம். உங்களுக்கும் மற்ற தமிழர்களைப் போல ஞாபகமறதி வியாதி இல்லையென்றால், இந்த நேரத்துக்கு நான் சொல்ல வருவது புரிந்திருக்கும்.
ஆம், 'உத்தம ராசா' என்ற, நம் மண் மணத்தை பறைசாற்றும் திரைப்படத்தில், செந்தில் என்ற அற்புதக் கலைஞன், நாயகனின் நிலமை அறிந்து, 'சோதனை மேல் சோதனை' என்ற பாடலுக்கு வாயசைத்து ஆறுதல் கூறுவார். உலகின் முதல் டப்ஸ்மேஷ் வீடியோவான அது, இன்றளவும் பல காமெடி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டாலும், அதை வெள்ளைக்காரன் ஒருவன் வந்து கூறிய பிறகுதான், கூட்டத்தில் கூடிப் பிதற்றும் இந்த ஆட்டு மந்தைக் கூட்டத்துக்கு உறைக்கிறது..
இந்தியாவின் உலகக் கோப்பைத் தோல்வியை மறந்ததை மன்னிக்கலாம், செம்மரக் கடத்தலில் 20 தமிழர்கள் இறந்துபோனது மறந்ததை மன்னிக்கலாம், ஆனால் உலகின் முதல் டப் ஸ்மேஷ் வீடியோவை கண்டுபிடித்தவன் தமிழன் என்ற வரலாற்று உண்மையை மறந்ததை மன்னிக்கலாமா?
தொடர்புடைய வீடியோ பதிவுகள்:
உலகத்தின் முதல் டப் ஸ்மேஷ் வீடியோ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT