Published : 24 Apr 2015 01:14 PM
Last Updated : 24 Apr 2015 01:14 PM
சக உறவுகளையே கண்டுகொள்ள நேரமின்றி ஆட்கள் ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கிறார்கள். சக மனிதர்கள் மட்டுமல்ல சக உயிர்களும் நம்மைப் போன்றவைதான் என எத்தனை பேர் இங்கு நினைத்துப் பார்க்கிறார்கள். | வீடியோ இணைப்பு - கீழே |
தங்கள் நேரத்தையும் பொருளையும் அவற்றுக்காக செலவிடுவதை சிறந்த செயலாகக் கருதி அதில் இன்பம் காணும் மனம் எத்தனைபேருக்கு இருக்கிறது?
ஆனாலும் சக உயிர்களை நேசிக்கும் அசோக் நகர் சேகர் தம்பதியினர் போன்ற அரிய ஜீவன்களும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தனது தலை மேலேயே தினமும் ஒரு பறவை வந்து உட்காருகிறது. அதற்கு திராட்சை முதலான பழங்களை தானியங்களைத் தந்து தனது விருந்தினரைப் போல உபசரிக்கிறார் இந்தப் பழக்கடை சேகர்.
அவரது மனைவியோ ஓம்பொடி, காராசேவு போன்ற பலகாரங்களை கடையில் வாங்கிவந்து தினம்தினம் வைக்கிறார். அதில் மகிழ்ச்சியடைவதோடு அவற்றை தங்கள் குழந்தைகள் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கிறார். சேகரும் அவரது மனைவியும் காகங்கள் தங்களைத் தேடி தினம் தினம் வருவதை பெரிய பாக்கியமாகக் கருதுகிறார்கள். தங்களுக்குக் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான தொகையை பறவைகளுக்காக இவர் செலவிடுவதைப் பார்க்கும்போது பெரிய வருமானம் இல்லையென்றாலும் பெரிய மனம் இருக்கிறதே இவர்களுக்கு என நம் புருவங்கள் உயர்கின்றன.
இவர்களிடம் காகங்கள் முதலில் நெருக்கம் காட்டினவா? அல்லது காகங்களிடம் இவர்கள் முதலில் நெருக்கத்தைக் காட்டினரா என்கிற ஆராய்ச்சியில் நாம் இறங்க வேண்டியதில்லை. ஏதோ ஒரு தொடக்கப் புள்ளி இருந்திருக்கலாம். இவர்களுக்கும் காகங்களுக்குமான நட்புறவைக் கண்டு, பத்தோடு பதினொன்றாக கடந்துபோய்விடாமல் அதை படம்பிடித்திருக்கின்றனர் ஜாக்கி சினிமாஸ்.
சுற்றுச்சூழலையும் மாந்தநேயத்தையும் நினைத்துப்பார்க்க இந்த வீடியோ பகிர்வு மேலும் தூண்டுகிறது. இத்தகைய பசுமை துளிர்க்கும் நற்செயலோடு நம்மைப் பிணைத்த ஜாக்கி சேகருக்கு ஒரு ஹாண்ட்ஷேக்.
இந்த வீடியோ பகிர்வை க்ளிக்கிட்டு அதற்குள் நுழைவோம் வாருங்கள் இணைய தலைமுறையினரே...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT