Published : 10 Mar 2015 10:14 AM
Last Updated : 10 Mar 2015 10:14 AM

லில்லியன் வால்டு 10

அமெரிக்க நர்ஸ், மனிதநேய ஆர்வலர் லில்லியன் டி வால்டு (Lillian D. Wald) பிறந்த தினம் இன்று (மார்ச் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத் தில் பிறந்தவர் (1867). ஜெர்மனியின் யூதக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி. படிப்பில் சிறந்து விளங்கினார்.

 பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகள் கற்றார். 1891-ல் நியூயார்க் செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பட்டம் பெற்றார். மருத்துவப் படிப்பிலும் சேர்ந்தார். ஆதரவற்ற சிறுவர் மனநலக் காப்பகத்தில் சிறிது காலம் சேவை செய்தார். 1893-ல் மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியேறி, தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவ முடிவு செய்தார்.

 ஏழை மக்களுக்கு நர்ஸிங் வகுப்புகள் எடுத்தார். நர்ஸாக பணிபுரிந்தார். ஹென்றி ஸ்ட்ரீட் செட்டில்மென்ட் என்ற அமைப்பை உருவாக்கினார். இவரது சேவை களை அறிந்த யூதக் கொடையாளி ஒருவர், ஏழை ரஷ்ய யூதர்களுக்கு மேலும் சிறந்த சேவை செய்ய அனைத்து உதவிகளையும் ரகசியமாக வழங்கினார்.

 1906-ல் இந்த அமைப்பில் 27 செவிலியர்கள் பணிபுரிந்தனர். பகுதி நேரமாக வந்து சேவை செய்யும் செவிலியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. பின்னாளில் இது ‘விசிட்டிங் நர்ஸ் சர்வீஸ் ஆஃப் நியூயார்க்’ என்ற அமைப்பாக விரிவடைந்தது.

 அரசுப் பள்ளியில் செவிலியர் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற இவரது யோசனையின் விளைவாக ‘நியூயார்க் போர்டு ஆஃப் ஹெல்த்’ என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதுதான் உலகின் முதல் பொது செவிலியர் அமைப்பு. பொதுச் சுகாதார செவிலியருக் கான தேசிய அமைப்பின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். செவிலியருக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தைப் பரிந்துரை செய்தார்.

 கொலம்பியா பல்கலை.யில் நர்ஸிங் கல்லூரி தொடங்க உதவினார். தனது பணிகள் குறித்து ‘தி ஹவுஸ் ஆஃப் ஹென்றி ஸ்ட்ரீட்’, ‘விண்டோஸ் ஆன் ஹென்றி ஸ்ட்ரீட்’ என்ற 2 புத்தகங்களை எழுதினார்.

 பெண்களுக்கான தொழிற்சங்கம் தொடங்க உதவினார். அதன் நியூயார்க் நகர அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். பல நாடுகளுக்கும் சென்று மனிதநேயப் பணிகளில் நாட்டம் செலுத்தினார்.

 குழந்தைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, கல்வியை மேம்படுத்தும் தேசிய அமைப்பின் தலைவராக இருந்தார். கறுப்பின தேசிய முன்னேற்றக் கூட்டமைப் பின் நிறுவன உறுப்பினரானார்.

 சிறந்த அமெரிக்கக் குடிமக்களுக்கான ‘ஹால் ஆஃப் ஃபேம்’ அரங்கில் இவரது சிலை வைக்கப்பட்டது. 1922-ன் தலைசிறந்த 12 பெண்களில் ஒருவர் இவர் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் புகழாரம் சூட்டியுள் ளது. லிங்கன் பதக்கம் உட்பட பல பரிசுகள், விருதுகள் பெற்றுள்ளார்.

 ஏழை, எளியோர், பெண்களின் முன்னேற்றம், பெண் தொழிலாளர் உரிமைகள், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, குழந்தைக் கல்வி ஆகியவற்றுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த லில்லியன் வால்டு 73 வயதில் (1940) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x