Published : 26 May 2014 03:36 PM
Last Updated : 26 May 2014 03:36 PM
பழங்குடி மக்களைத் துன்புறுத்தியதற்காக ஆஸ்திரேலிய அரசு முதன் முதலாக மன்னிப்பு கோரும் இயக்கத்தை நடத்திய நாள் இன்று. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதில் பங்கேற்றனர்.
ஆஸ்திரேலிய பழங்குடிகள் வாழ்ந்த இடத்தை முதலில் டச்சு நாட்டினர் 1606-ல் ஆக்கிரமித்தனர். பிறகு 1770-ல் இங்கிலாந்து கால் பதித்தது. அவர்கள் பழங்குடிகளைப் பலவகையிலும் துன்புறுத்தினர். அதன் உச்சமாக, 1869 முதல் 1969 வரை கிட்டத்தட்ட ஒரு லட்சம் சிறுவர்கள் காவல்துறையினராலும், கிறிஸ்துவ சேவையாளர்களாலும் பழங்குடிகளின் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களிலும், சமூக நல அமைப்புக்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர். தாய்மொழி பேசினால் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் திருடப்பட்ட தலைமுறையினர் என அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில், "அவர்களை வீட்டுக்குக் கொண்டுவாருங்கள்" என்ற இயக்கம் மே 11, 1995-ல் தொடங்கப்பட்டது. இவர்கள் 535 பழங்குடியினரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். சுமார் 600-ற்கும் மேற்பட்ட ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடித்தனர். அந்த அறிக்கை 700 பக்கங்களில் மே 26, 1997-ல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாள் இன்று. இந்த ஆவணத்தில் பழங்குடிகளுக்கு நட்டஈடு, மறுவாழ்வு, மன்னிப்பு கோரல், எனும் முக்கிய மூன்று பரிந்துரைகள் இருந்தன.
பிப்ரவரி 13, 2008-ல் பழங்குடியின மக்களுக்கு துன்பங்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தக்கூடியவாறு அமைந்துள்ள அரசின் கொள்கைகள் மற்றும் சட்டங்களுக்காக அனைத்துப் பழங்குடியின மக்களிடமும் பிரதமர் கெவின் ரூட் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் 6 லட்சத்து 70 ஆயிரம் பழங்குடிகள் உள்ளனர். உலகில் தற்போது சுமார் 37 கோடி பழங்குடிகள் உள்ளனர். ஆப்ரிக்காவில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பழங்குடிகள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்திய மக்களில் எட்டு சதவீதம் பேர் பழங்குடிகளாக உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT