Published : 05 Mar 2015 10:41 AM
Last Updated : 05 Mar 2015 10:41 AM
இஸ்ரேலிய அமெரிக்க உளவியலாளரும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவு பரிசை வென்றவருமான டேனியல் கானமென் (Daniel Kahneman) பிறந்த தினம் இன்று. (மார்ச் 5) இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
டேனியல் கானெமன் டெல் அவிவ் நகரில் பிறந்தவர் (1934). இவரது குழந்தைப் பருவம் பாரீஸ், பிரான்ஸ் ஆகிய நாடு களில் கழிந்தது. நாஜிக்கள் பிடியிலிருந்த பிரான்சில் இருந்தபோது ஏற்பட்ட அனு பவங்கள் இவரை உளவியலில் ஆர்வம் கொள்ள வைத்தன.
1954-ல் ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றார். இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் உளவியல் பிரிவில் பணிபுரிந்தார்.
1958-ல் பெர்கெலி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உளவியலில் பி.ஹெச்.டி. பட்டம் பெறுவதற்காக அமெரிக்கா சென்றார். 1961-ல் ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் உளவியலில் விரிவுரையாளராக தனது கல்விப் பணியைத் தொடங்கினார். பொருளாதார ரீதியான முடிவுகளால் ஏற்படும் உளவியல் ரீதியான தாக்கங்கள் (பிஹேவியரியல் எகனாமிக்ஸ் - Behavioral Economics) தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
இவற்றுக்கான கோட்பாடுகளை நிறுவினார். இதற்காக இவருக்கு 2002-ல் வெர்னான் எல். ஸ்மித்துடன் இணைந்து நோபல் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அமோஸ் டிவெர்ஸ்கி மற்றும் பிறருடன் இணைந்து கானமென், தீர்வு விதிகள் மற்றும் தவறான எண்ணங்கள் மூலம் எழும் பொதுவான மனித தவறுகளின் அறிவாற்றலின் அடிப்படையை நிறுவினார்.
நவீன பொருளாதாரக் கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்யவைத்த இவரது தீவிரமான சிந்தனைகள் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. 2011-ல் ஃபாரின் பாலிசி இதழில் உலக தலைசிறந்த சிந்தனையாளர்களின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றது.
அதே வருடத்தில் இவரது ஆராய்ச்சிகளின் சுருக்கமான தொகுப்புகளை உள்ளடக்கிய திங்க்கிங், ஃபாஸ்ட் அன்ட் ஸ்லோ புத்தகம் வெளிவந்து அமோக விற்பனையானது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வுட்ரோ வில்சன் ஸ்கூலில் உளவியல் மற்றும் பொது விவகாரங்கள் பேராசிரியராக பணிபுரிந்தார்.
மிஷிகன் பல்கலைக்கழகத்திலும், கேம்பிரிட்ஜில் அப்ளைய்டு சைக்காலஜி ரிசர்ச் யூனிட்டிலும் விசிட்டிங் சயின்டிஸ்டாக பணி புரிந்தார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் உளவியல் ஆசிரியராக பணிபுரிந்தார்.
இவர் தனியாகவும் டவெர்ஸ்கியுடன் இணைந்தும் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய முதல் கட்டுரை பிலீஃப் இன் தி லா ஆஃப் ஸ்மால் நம்பர்ஸ். 1978-ல் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் பணியை விட்டு விலகி கொலம்பியாவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் பிரிட்டனில் சேர்ந்தார்.
நோபல் பரிசு தவிர, 2007-ல் அமெரிக்க உளவியல் அமைப்பின் வாழ்நாள் பங்களிப்பாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பரிசுகளையும் வென்றுள்ளார். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.
தனது புத்தகங்களுக்காகவும் பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ளார். பேராசிரியராகவும் உளவியல் ஆராய்ச்சியாளராகவும் தன் பணிகளைத் தொடர்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT