Published : 27 Mar 2015 05:16 PM
Last Updated : 27 Mar 2015 05:16 PM
இதை எப்படிச் சொல்வது?
"ஏன்டா டேய்... அங்கப் போய் யாரையாவது உஷார் பண்ணியா?" - வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களிடம் நடக்கின்ற தொலைபேசி உரையாடல்களில் யதார்த்தமாக பிறக்கின்ற கேள்வி இது.
சூப்பர் மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். அவரிடம் எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு அமெரிக்க மூதாட்டி பேசத் தொடங்கினார்.
"உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?"
இல்லை" என்று அவன் கூற...
"ஓ.. யாரை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்க? ஏன் நீ அமெரிக்க பெண் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?" என்று கேட்டார்.
கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று வியந்த அவன் "இல்லை நான் இப்போ அதை பற்றி யோசிக்கல" என்றான்.
"உங்களுக்கு என்னதான் பிரச்சினை? எங்கள் வாழ்க்கைக்குள் வர்றீங்க. எங்கள் மீது அளவு கடந்த அன்பை காட்டி காதலில் விழ வைக்கறீங்க. கடைசியில் நாங்கள் எங்களை உங்களுக்கு தந்த பிறகு 'இல்லை இல்லை... எனக்கு குடும்பம் இருக்கிறது, கனவு இருக்கிறது' என்று பேசத் தொடங்குகிறீர்கள். இதெல்லாம் உங்களுக்கு ஏன் முதலில் தோன்றுவதில்லை?
உன்ன மாதிரி ஓர் இந்தியன் அன்று என்னை கல்யாணம் செய்திருந்தான்னா இன்று எழுபது வயதில் நான் கடைக்கு தனியே வருவதற்கான தேவை இருந்திருக்காது. என்ன காதலிச்சவன் இன்று ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பணக்காரனாக சந்தோஷமாக இருக்கிறான். நானோ முதுமையில் தனிமையில் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன்" என்று பேசிவிட்டுச் சென்றார்.
நம் ஊரில் பெண்களை தங்கைகளாக, தோழியாக, காதலியாக பார்க்கத் தெரிந்தவர்களுக்கு, வெளிநாட்டுக்கு வரும்போது மட்டும் புதுவித பார்வை பிறக்கின்றது. மாடர்ன் உடை அணிவதாலும், பார்த்தவுடன் புன்னகைத்து ஹாய் சொல்வதாலும் பல இளைஞர்கள் இன்று தவறான நோக்கத்தோடு பெண்களை நாடத் துவங்குகின்றனர்.
ஒருமுறை வாஷிங்டன் டி.ஸி சென்றபோது, அங்கே ஒருவன் "எனக்கு உன் காலேஜ் பொண்ணுகிட்ட (இந்தியப் பெண்) இன்ட்ரோ கொடுடா. எனக்கு அவளை பிடிச்சிருக்கு" என்றான்.
"நீயே போய் பேச வேண்டியது தானே?"
"சரி, அவ நம்பர் மட்டும் கொடு நான் உஷார் செஞ்சிக்கிறேன்" என்றான்.
"இல்லைடா அவளுக்கு இந்தியால பாய்ஃபிரெண்ட் இருக்கான்"
"இந்தியால தானடா இருக்கான். நான் இங்க சும்மா யூஸ் பண்ணிக்கதான் கேட்டேன்" என்றான்.
மற்றொரு நிகழ்வு:
"உனக்கு இங்க யாரும் கேர்ள்பிரெண்ட் இல்லையாடா?" என்று நண்பனிடம் கேட்டேன் "இல்லைடா. நமக்கு இருக்குற வேலையில எதுக்கு அதெல்லாம். அது மட்டும் இல்லாம Girls Here Are Very Clingy-டா" என்றான்.
"Clingy (நசை) எந்த வகையில?" என்றேன்.
"இல்லைடா நமக்கு இருக்குற அறிவுக்கு மட்டும்தான் அவங்க நம்மகிட்ட வருவாங்க. ஒரு பொண்ணு அப்படிதான் பிரெண்ட் ஆனாள். நாங்க உறவில் இருந்தோம். அதுக்கு அப்புறம் எப்போ பார்த்தாலும் வீட்டுக்கு வர ஆரம்பிச்சிட்டா. நான் வீட்டுல இல்லைன்னா கூட எனக்காக காத்திருக்கிறா. அடிக்கடி பார்க்கனும்ன்னு சொல்றா. நமக்கு இருக்குற வேலையில இதெல்லாம் எப்படிடா முடியும். கழட்டி விடுறதுக்குள்ள... அய்யய்யோ..." என்று பேசினான்.
"இங்க நம்ம ஆளுங்க பண்றது டிசென்ட்டாவே இல்லைடா. இப்படியே போச்சுன்னா நம்மள யாரும் மதிக்க மாட்டாங்க" என்று நண்பன் புலம்புகிறான்.
வெளிநாட்டுக்கு வரும் இளைஞர்களே இப்படித்தான் செய்கிறார்கள் என்று கூறவில்லை. தன்னை பார்ப்பதற்கு யாரும் இல்லை, தன்னை சாடுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் யாரும் இல்லை என்கிற நிலை பிறக்கின்றபோது நம் ஆட்கள் பலர் எப்படி நடந்து கொள்கிறார்கள். உண்மையிலே நாம் பண்பட்டவர்கள் தானா? இல்லை நம்மை சூழ்ந்துள்ள சமுதாயத்திற்காக போலி முகமூடி அணிந்து திரிகிறோமோ? என்ற பல கேள்விகள் மனதில் எழுகின்றது.
பயணம் சென்று கொண்டிருக்கும்போது ஒருவர் கூறினார்... "உன் அம்மாவையும், காதலியையும், உன் தங்கையையும் மற்றவர் எப்படி நடத்த வேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, அந்த வகையில் நீ மற்ற பெண்களிடம் நடந்துகொள்" என்றார். அற்புதமான வார்த்தைகள் அவை. ஒரு பெண்ணை காதலியாக நேசிப்பது தவறில்லை. ஆனால், மனதில் கள்ளத்தனத்துடன் ஒருத்தியை அடைவதற்காக காட்டப்படுகின்ற நேசம் இழிவானது.
"நான் எனது தேவைக்காக உன்னைப் பயன்படுத்திக் கொண்டேன்" என்று ஒரு பெண் கூறினால் அதை உங்களால் எப்படி தாங்கிக் கொள்ள முடியாதோ அதே போலத் தானே அவர்களுக்கும்?
அமெரிக்காவாக இருந்தாலும் சரி... இந்தியாவாக இருந்தாலும் சரி... பெண்கள் பெண்கள்தான். அவர்களைப் பண்டமாக பார்க்கின்ற ஆண்களின் இச்சைப் பார்வைகள் மாறிட வேண்டும். நம் நாட்டை பிற நாடுகள் மரியாதையாக பார்ப்பதற்க்கான காரணம் நம் பண்பாடு தான். அதுவும் இப்படிப் போலியாக்கப்படும்போது எண்ணங்கள் சிதைவு தான். எள்ளி நகையாடப்படுவது பாரதமும் ஆண்மையும் தான்.
அந்நிய மோகத்தை விட, அந்நிய நாட்டில் வரும் மோகம் மிகவும் மோசமானது. இல்லையா?
ஹரி- தொடர்புக்கு nanaprabhu5591@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT