Published : 23 Mar 2015 06:25 PM
Last Updated : 23 Mar 2015 06:25 PM
தான் கண்ட கேட்ட எதிர்கொண்ட பிரச்சனைகளை அவ்வப்போது முகநூல் நிலைத்தகவல்களை சின்னச்சின்ன கீற்றுகளாக தந்திருக்கிறார் ரஹீம் கஸாலி. அதை ஒரு நூலாகக் தொகுத்து அதற்கு 'கஸாலித்துவம்' என்றே அவர் பெயரும் இட்டுள்ளார்.
சாதாரணமாக சமூக வலைதளத்தில் எழுதுவோர் அவரவர்களுக்கென்று ஒரு சார்புநிலையெடுத்து எழுதுவார்கள். அதில் நல்லது கெட்டது எப்படியென்றாலும் ஒரே நிலையில் நின்று வீச்சரிவாள் கொண்டு போகிற வருகிறவர்களையெல்லாம் வீசுவார்கள்.
ஆனால் கஸாலி சற்றே வித்தியாசப்படுகிறார். எந்தச் சார்பும் இல்லாமல், அதற்காக நடுநிலையென்ற பெயரில் கழுவுகிற மீனில் நழுவுகிற ஆளாகவும் இல்லாமல் இருக்கிறார். பிரச்சனையின் தீவிரத்துக்கு தகுந்தாற்போல் தன் நிலைப்பாட்டை அவ்வப்போது செதுக்கிச் செல்கிறார்.
தான் பதிவிடும் ஒவ்வொரு நிலைத்தகவலுக்கும் இடம், பொருள், ஏவலுக்கு ஏற்ப துவங்களை ஹேஷ்டேக் மூலம் தூவிச் செல்கிறார் கஸாலி.
திமுக பணக்காரர்களாகப் பார்த்து வேட்பாளராக நிறுத்துகிறது. அதிமுகாவோ மக்களிலிருந்து வேட்பாளைரை தேர்வு செய்கிறது என்று ஒரு இடத்தில் நிலைத்தகவலைப் போடும் கஸாலி, இன்னொரு இடத்தில் கருணாநிதியின் வயதைச் சொல்லி விமர்சிக்கும் மூன்றாந்தர பேச்சாளர்களை கண்டிக்கவும் செய்கிறார்.
எதை எழுதினாலும் அதில் நகைச்சுவை சற்றே தெரிக்கிறது. அது ரசிக்கும்படியாகவும் இருக்கிறது. ஃபேஸ்புக்கில் அமாவாசையாக உள்ளே நுழைந்தவர்களை நாகராஜ சோழனாக மாற்றியதே லைக்கின் சாதனை என்று பேஸ்புக்கில் எழுதுகிறவர்களுக்கு தன்னம்பிக்கை தருகிறார்.
''என்னதான் இருந்தாலும் விஜயகாந்த் தன் படத்திற்கு அனல் தெறிக்கும் வசனம் எழுதிக்கொடுத்த லியாகத் அலிகானை விட்டிருக்கக் கூடாது. அவர் மட்டும் கேப்டனுடன் இருந்திருந்தால் மேடைக்கு மேடை, ஊருக்கு ஊர் இப்படி உளறிக்கொட்டும் அவல நிலை கேப்டனுக்கு வந்திருக்காது'' என்று சிரிப்புமூட்டுகிறார்.
மேலும், எம்ஜிஆர் முதல்வர் ஆனபிறகும் நடிக்க ஆசைப்பட்டு வாலி கதை வசனத்தில் இளையராஜா இசையமைக்க லதா ஜோடியாக நடிக்க நாஞ்சிலார் தலைமையில் உன்னைவிடமாட்டேன் படவிழா துவங்கியது போன்ற அறிய செய்திகளையும் தருகிறார்.
குழந்தைகளுக்கு ஒரு வருடம் என்பது சிலநிமிடங்களே... அட ஆமாங்க ஒரு வருடத்திற்கான காலண்டர் தாளை ஒரு சில நிமிடங்களில் கிழித்துவிட்டான் என் மகன் என்று சிலாகிக்கவும் செய்கிறார்.
அதிர்ஷ்டத்தை நம்புகிறவனோடு சேர்ந்தால் உழைப்பை கொச்சைப்படுத்திவிடுவான் என்று ஆட்களை இனங்காட்டும் கஸாலி, சுகப்பிரசவம் என்று சொல்லப்படும் பிரசவங்கள்கூட தாய்க்கு மரணவலியையே கொடுக்கும் என்று நெகிழவைக்கவும் செய்கிறார்.
சமூக வலைதள எழுத்துக்குப் புதிய பாதையை தனித்துவத்துடன் வகுத்துக்கொண்டுள்ள ரஹீம் கஸாலியின் முயற்சியில் உருவான 'கஸாலித்துவம்' நூலை, ரிஸால் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.
கஸாலியின் ஃபேஸ்புக் பக்கம் >https://www.facebook.com/rahimgazali
*
நூல்: கஸாலித்துவம்
வெளியீடு: ரிஸால் பப்ளிகேஷன்ஸ், இஸ்மாயில் தெரு, அரசர்குளம், புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு: 91-74011 30505
மின்னஞ்சல்: rizalpublications@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT