Published : 24 Mar 2015 10:12 AM
Last Updated : 24 Mar 2015 10:12 AM
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துஸ்வாமி தீட்சிதர் (Muthuswami Dikshitar) பிறந்த தினம் இன்று (மார்ச் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
திருவாரூரில் (1775) பிறந் தவர். வைத்தீஸ்வரன் கோயில் முருகப் பெருமான் அருளால் பிறந்தவர் என்பதால், முத்துக்குமார ஸ்வாமி என்று பெற்றோர் பெயரிட்டனர். தந்தை ராமஸ்வாமி தீட்சிதரிடம் முறைப்படி வாய்ப்பாட்டு, வீணை பயின்றார். இனிமை யாகப் பாடுவார். இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றார்.
வேதம், சாஸ்திரம், தர்க்கம், வியாகரணம் (இலக்கணம்), காவியம் ஆகிய அனைத்தையும் 16 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார். இளமையிலேயே இறைவனைப் பற்றி பாடல்கள் இயற்றத் தொடங்கினார்.
திருவாரூர் கோயிலில் உள்ள அனைத்து கடவுள்கள் மீதும் பாடல் இயற்றியுள்ளார். காசியில் சிதம்பர யோகி என்பவருடன் 5 ஆண்டுகள் வசித்தார். அவரிடம் இசை யோடு தத்துவ ஞானமும் பயின்றார். அவர் சொன்னபடி கங்கையில் மூழ்கி எழுந்த இவருக்கு இறைவன் அருளால் வீணை கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
முருகப் பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். முருகனையே தன் குருவாக ஏற்றவர். இவரது பாடல் களில் ‘குருகுஹ’ என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது.
தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். பஞ்ச பூதங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்கள், புண்ணிய தீர்த்தங்கள், மொழிகள், மாயை குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார். நவாவர்ணக் கீர்த்தனைகள், பஞ்சலிங்க ஸ்தல கிருதிகள், கமலாம்பா நவாவர்ணம், அபயாம்பா நவாவர்ணம் உள்ளிட்ட பல கீர்த்தனைத் தொகுப்புகளை இயற்றியுள்ளார்.
72 மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனை இயற்றியுள்ளார். இதன்மூலம் அரிதான, அதிகம் பயன்படுத்தப்படாத ராகங்களிலும்கூட இவரது கீர்த்தனைகள் உள்ளன. பலமுறை புனித யாத்திரைகளை மேற்கொண்டு, பல தெய்வங்களைக் குறித்தும் கீர்த்தனைகளைப் பாடினார். இந்தியாவில் இவரது காலடி படாத இடங்களே இல்லை்.
இவரது பாடல்களில் கோயில்களின் வரலாறு, அவற்றின் பின்னணி ஆகிய தகவல்களும் உள்ளன. மேற்கத்திய இசையிலும் இவருக்கு ஞானம் இருந்தது.
இசையில் ஆரம்பப் பயிற்சி பெறுபவர்கள் எளிதாக கற்றுக்கொள்ளும் வகையில் இவரது பாட்டு இருக்கும். அதேநேரம், நன்கு தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் சபாக்களில் விஸ்தாரமாக பாடவும் ஏற்றவையாக இருக்கும். அது இவரது கீர்த்தனைகளின் சிறப்பம்சம்.
இவரது வாழ்வில் பல தெய்வீக அனுபவங்கள் நிகழ்ந்துள்ளன. இவர் பல அற்புதங்கள் நிகழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. வறட்சி நிலவிய கிராமத்தில் அமிர்தவர் ஷினி ராகத்தில் கீர்த்தனை பாடி மழையை வரவழைத்தார் என்று கூறப்படுகிறது. இதனால் ‘அமிர்தவர்ஷினி ராகத்தின் பிதாமகர்’ என்று போற்றப்பட்டார்.
ஏறக்குறைய 500 பாடல்களை இயற்றியுள்ளார். இறைவ னைப் பற்றி மட்டுமே பாடியுள்ளார். மன்னர்களையும் மனிதர்களையும் புகழ்ந்து பாடியதில்லை. 64-வது நாயன்மார், 13-வது ஆழ்வார் என்றெல்லாம் புகழப்பட்ட முத்துஸ்வாமி தீட்சிதர் 60 வயதில் (1835)இறைவன் திருவடியை அடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT