Published : 16 Mar 2015 09:23 AM
Last Updated : 16 Mar 2015 09:23 AM
நத்தையம்மா நத்தையம்மா எங்கே போகிறாய்?
அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம் கொண்டு போகிறேன்
எத்தனை நாள் ஆகும் அத்தை வீடு செல்லவே?
பத்தே நாள்தான்; வேணுமானால் பார்த்துக்கொண்டிரு!
குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பிப் படிக்கும் வகையில் இருப்பதுதான் சிறந்த குழந்தை இலக்கியம் என்பார்கள். மேற்கண்ட பாடலுக்கும் இந்த இலக்கணம் பொருந்துகிறதல்லவா?
குழந்தைகளின் கவனத்தைக் கவர்வது அத்தனை எளிதான காரியம் அல்ல. அதேபோல், குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பது என்பது அசாத்தியமான உழைப்பைக் கோருவது. அவர்களுக்கான உலகம், மொழி, எளிமை என்று பல விஷயங்களைக் கைக்கொண்டால்தான் குழந்தைகளும் வாசிக்கும் வகையிலான இலக்கியத்தைப் படைக்க முடியும். தமிழில் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர் அழ. வள்ளியப்பா. குழந்தைக் கவிஞர் என்று சொன்னாலே அதன் பின்னான வார்த்தையாக அழ. வள்ளியப்பாவின் பெயர்தான் மனதில் தோன்றும். குழந்தை களுக்கான பாடல்கள் மட்டுமல்லாது, அவர்களின் பொது அறிவையும் நல்லொழுக்கத்தையும் வளர்க்கும் விதமான கதை, கட்டுரைகளையும் எழுதியவர் அழ. வள்ளியப்பா. குழந்தை இலக்கியத்தில் பிறரும் ஈடுபட பெரும் ஊக்கியாக இருந்தவர்.
குழந்தை இலக்கியத்துக்குப் புகழ்பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தின் இராயவரத்தில் 1922 நவம்பர் 7-ல் பிறந்தார்.
அவரது ஆரம்பக் கல்வி ராயவரத்தில் அமைந்தது. பிறகு இராமச்சந்திரபுரத்தில் உள்ள பூமீஸ்வர ஸ்வாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளி நாட்களிலேயே அவரது கற்பனைத் திறன் பளிச்சிட்டது. எனினும் குடும்பச் சூழ்நிலை காரணமாக அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. பிறகு, வை. கோவிந்தனின் ‘சக்தி' இதழின் பொருளாளராக 1940-ல் பணியில் அமர்ந்தார் வள்ளியப்பா. அந்த இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்த தி.ஜ.ர., வள்ளியப்பாவின் கற்பனைத் திறனைக் கண்டு, எழுதுமாறு ஊக்குவித்தார். அந்த உற்சாகத்தில் ‘ஆளுக்குப் பாதி’ எனும் தனது முதல் சிறுகதையை எழுதினார் வள்ளியப்பா.
1944-ல் ‘மலரும் உள்ளம்' எனும் அவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. 1961-ல் அவர் வெளியிட்ட ‘சிரிக்கும் பூக்கள்' எனும் கவிதைத் தொகுப்பு, ‘குழந்தைக் கவிஞர்’ எனும் பட்டத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது. ‘பாலர் மலர்’,‘டமாரம்’, ‘சங்கு’ ஆகிய இதழ்களின் கவுரவ ஆசிரியராகப் பணியாற்றிய அழ. வள்ளியப்பா, ‘பூஞ்சோலை’, ‘கோகுலம்’ ஆகிய சிறுவர் இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார். தன்னைப் போலவே குழந்தை இலக்கியத்தில் ஈடுபட்ட எழுத்தாளர்களை ஒன்றிணைத்து, ‘குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்’ எனும் அமைப்பை உருவாக்கினார். மிகுந்த அக்கறையுடன் குழந்தை இலக்கியத்தை வளர்த்தெடுத்த அழ. வள்ளியப்பா, 1989-ல் தனது 67-வது வயதில் இதே நாளில் காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT