Published : 18 Mar 2015 09:20 AM
Last Updated : 18 Mar 2015 09:20 AM
தேசத் தந்தையாக இந்தியர்களால் போற்றப் படும் காந்தி, தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்ட கதை தெரியுமா? 1922-ல் இதே நாளில் வன்முறையைத் தூண்டி விட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் காந்தி.
1919-ல் ரவுலட் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்தது. ஒரு நபர் தேசத்துரோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சந்தேகம் ஏற்பட்டால், விசாரணையின்றி அவரைச் சிறையில் அடைக்கும் அதிகாரத்தை இந்தச் சட்டம் அரசுக்கு அளித்தது. 1919 ஏப்ரல் 13-ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையும் இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, ஒத்துழையாமை இயக்கத்தை 1920-ல் காந்தி தொடங்கினார்.
ஆங்கிலேய அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றைப் புறக்கணிக்கவும், அந்நியப் பொருட்களை வாங்காமல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்றும் இந்தியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அரசுப் பணியில் இருந்தவர்கள் ராஜினாமா செய்தனர்; பிரிட்டிஷ் அரசு அளித்த கவுரவப் பட்டங்களைப் பலர் துறந்தனர். இந்தப் போராட்டத்துக்கு இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. எனினும், கட்சியின் இளைய தலைமுறையினரும், பெருவாரியான இந்தியர்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள். இந்தியா முழுவதும் நடந்த இந்த மாபெரும் போராட்டத்தால், நாடே ஸ்தம்பித்தது. அரசு நிறுவனங்கள் செயலற்றுப் போயின. இதனால், ஆங்கிலேய அரசு கடும் அதிருப்தி அடைந்தது.
அதேசமயம், கோடிக் கணக்கான மக்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தை காந்தி கைவிட வேண்டிய சூழலும் உருவானது. அதுதான் செளரி செளரா சம்பவம். ஐக்கிய மாகாணத்தின் (தற்போதைய உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் ஒன்றிணைந்த பிரதேசம்) கோரக்பூர் மாவட்டத்தின் செளரி செளரா நகரில் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் சிறைவைக்கப்பட்ட காவல் நிலையத்தைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
கூட்டத்தைக் கலைக்க போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில், 3 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் தங்களைத் தாக்கவருவதைக் கண்ட போலீஸ்காரர்கள் காவல் நிலையத்துக்குள் போய்ப் பதுங்கிக்கொண்டார்கள். ஆர்ப்பாட்டக் காரர்கள் காவல் நிலையத்துக்குத் தீவைத் தார்கள். இதில், 23 காவலர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியடைந்த காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.
“கடவுள் என் மீது அளவற்ற கருணை கொண்டிருக்கிறார். மென்மையான, உண்மை யான, பணிவான எண்ணங்களுடன் கூடிய மக்கள் பங்கேற்கும் மகத்தான போராட்டம் நடத்தும் அளவுக்கு இந்தியாவில் நம்பகத் தன்மையும், வன்முறையற்ற சூழலும் உருவாகவில்லை என்று கடவுள் என்னை எச்சரித்திருந்தார். இப்போது செளரி செளரா சம்பவத்தின் மூலம், அதை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறார்” என்று காந்தி குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்துக்குத் தான்தான் முழுப் பொறுப்பு என்று கருதிய காந்தி, அதற்குப் பிராயச்சித்தமாக 5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
எனினும், தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில், 1922 மார்ச் 10-ல் காந்தி கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 1922-ல் இதே நாளில் காந்தி மீதான குற்றச்சாட்டு உண்மை எனக் கூறி அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், அவரது உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, 1924-ல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT