Last Updated : 20 Mar, 2015 09:40 AM

 

Published : 20 Mar 2015 09:40 AM
Last Updated : 20 Mar 2015 09:40 AM

இன்று அன்று | மார்ச் 20 1602: டச்சு கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்டது!

கிழக்கிந்திய கம்பெனி என்றாலே பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அது மட்டுமல்லாமல், டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி, போர்த்துக்கீசிய கிழக்கிந்தியக் கம்பெனி, பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி, ஸ்வீடிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி என்று பல கிழக்கிந்தியக் கம்பெனிகள் இருந்தன. எல்லாம், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைக் கைப்பற்றி, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிய ‘கம்பெனிகள்’தான்!

அந்தக் காலகட்டத்தில் கடல் மூலம் வணிகம் செய்வதில் இருந்த பிரச்சினைகள் காரணமாக ஆசிய நாடுகளில் வணிக மையங்களை நிறுவி, அதன் மூலம் வணிகத்தை நடத்தலாம் என்று மேற்கத்திய நாடுகள் முடிவெடுத்தன. இந்த வணிக மையங்களுக்கு அரசுக்கு இணையான அதிகாரங்களும் வழங்கப்பட்டன. இந்த யோசனையை முதலில் செயல்படுத்தியது பிரிட்டன்தான்.

கம்பெனிகளில் மூத்ததான, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, 1600 டிசம்பர் 31-ல் தொடங்கப்பட்டது. அதற்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு, 1602 மார்ச் 20-ல் தொடங்கப்பட்டதுதான் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி அல்லது ‘விரிங்கெ ஊஸ்ட்டிண்டிஸ் கம்பானி’(அதாவது, ஐக்கிய கிழக்கிந்தியக் கம்பெனி - சுருக்கமாக வி.ஓ.சி.). டச்சு என்று அழைக்கப்படும் நெதர்லாந்து அப்போது ஸ்பெயின் ஆட்சியின் கீழ் இருந்தது. அந்நாட்டிடமிருந்து 1581-ல் விடுதலை பெறுவதாக அறிவிக்கப்பட்டாலும் 1648-ல் தான் ஸ்பெயினிடமிருந்து முழுமையாக விடுதலை பெற்றது. இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகளில் தங்கள் வணிகத்தை நிலைபெறச் செய்யவும், ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெறுவதற்காகப் பொருளாதார வலிமையைப் பெறவும் இந்த கம்பெனியைத் தொடங்க அனுமதி அளித்தது நெதர்லாந்து. 21 ஆண்டு காலத்துக்குத் தனியுரிமையும் அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதன்படி, எந்த நாட்டுடனும் போர் தொடுக்கவும், குற்றவாளிகள் என்று கருதப்படுபவர்களைக் கைது செய்து விசாரிப்பதுடன் தண்டனை வழங்குவது, ஒப்பந்தங்களைச் செய்வது, சொந்தமாக நாணயங்களை அச்சிட்டுக்கொள்வது, எல்லாவற்றுக்கும் மேலாகக் காலனிகளை நிறுவுவது என்று சகல அதிகாரங்களும் வழங்கப்பட்ட கம்பெனி அது! 17-ம் நூற்றாண்டில் டச்சு அரசைச் செழிக்க வைத்த இந்நிறுவனத்தின் காலம் அந்நாட்டின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. உலகில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட பன்னாட்டு நிறுவனம் இதுதான். அத்துடன், முதன்முதலாகப் பங்குகளை விற்கத் தொடங்கிய நிறுவனமும் இதுதான்.

இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை என்று ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த கம்பெனி கொடிகட்டிப் பறந்தது. 16-ம் நூற்றாண்டில் போர்த்துக் கீசியர்களின் வசம் இருந்த தமிழகத்தின் பழவேற்காடு பகுதி 1606-ல் டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது.

இந்த நிறுவனத்தின் படைகள், பிரிட்டிஷ் கப்பற்படை யைத் தோற்கடித்து, தங்கள் வணிக எல்லையை விரிவு படுத்தின. கிழக்கிந்தியப் பகுதிகளில் போர்த்துக்கீசியப் படைகளையும் விரட்டியடித்தன இந்நிறுவனத்தின் படைகள். 2 நூற்றாண்டுகள் கோலோச்சிய இந்தக் கம்பெனி, 18-ம் நூற்றாண்டின் இறுதியில் திவாலானதால், கம்பெனியைக் கலைத்துவிட்டது நெதர்லாந்து அரசு. அதற்கடுத்து வந்த 50 ஆண்டுகளில் முழு இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பும் பிரிட்டனிடம் போய்ச்சேர்ந்தது தனி வரலாறு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x