Last Updated : 12 Mar, 2015 08:44 AM

 

Published : 12 Mar 2015 08:44 AM
Last Updated : 12 Mar 2015 08:44 AM

இன்று அன்று | 1954 மார்ச் 12: சாகித்ய அகாடமி தொடங்கப்பட்டது

சாகித்ய அகாடமி விருது - ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியான சிறந்த இலக்கியப் படைப்புகளை எழுதிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது. 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளில், தமிழ் படைப்புக்கான விருதை வென்ற ‘அஞ்ஞாடி…’ நாவலை எழுதிய பூமணி 9-ம் தேதி டெல்லியில் நடந்த விழாவில் விருதைப் பெற்றுக்கொண்டார். அவருடன், பிற மொழிகளில் சிறந்த படைப்புகளை எழுதிய படைப்பாளிகளும் விருதைப் பெற்றுக்கொண்டார்கள். விருதுடன் ரூ. 1,00,000 பரிசுத்தொகையும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை வழங்கும் சாகித்ய அகாடமி அமைப்பு, புது டெல்லியின் ஃபெரோஸ்ஷா சாலையில் உள்ள ரவீந்திரநாத் பவன் கட்டிடத்திலிருந்து செயல்படுகிறது. சங்கீத நாடக அகாடமி, லலித்கலா அகாடமி ஆகிய விருது அமைப்புகள் செயல்படுவதும் இந்தக் கட்டிடத்திலிருந்துதான்.

கலை, இலக்கியத்தின் ஆராதகரும் சிறந்த எழுத்தாளருமான ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில், சாகித்ய அகாடமி அமைப்பு தொடங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்பிருந்தே, இந்திய மொழி இலக்கியங்களுக்கு விருது வழங்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஆங்கிலேய அரசின் பரிசீலனையில் இருந்தது. 1944-ல் தேசிய கலாச்சார அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, கலாச்சாரத்தின் அனைத்துத் துறைகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்று ‘ராயல் ஏசியாட்டிக் சொசைட்டி ஆஃப் பெங்கால்’ எனும் அமைப்பின் பரிந்துரையை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொண்டது. சுதந்திரத்துக்குப் பின்னர், இலக்கியத்துக்கான விருது அமைப்பை அரசே ஏற்று நடத்துவது என்று 1952 டிசம்பர் 15-ல் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. 1954-ல் இதே நாளில் சாகித்ய அகாடமி அமைப்பு முறைப்படி தொடங்கப்பட்டது. இதன் தலைவராக நேரு பொறுப்பேற்றார். துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அரசு நிதியுதவியைப் பெறும் அமைப்பு என்றாலும், இது தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். சாகித்ய அகாடமியின் தலைவராகப் பொறுப்பெற்ற நேரு, “சாகித்ய அகாடமியின் தலைவருக்கான பணியில், பிரதமர் நேரு குறுக்கிடாமல் பார்த்துக்கொள்வேன்” என்று உறுதியளித்தார்.

அதே சமயம், சாகித்ய அகாடமி தொடங்கப்பட்ட மறுநாளே, தனது ஆதர்ச எழுத்தாளரும் கவிஞருமான சூர்யகாந்த் திரிபாதி நிராலாவுக்கு உதவுமாறு சாகித்ய அகாடமியின் செயலாளரான கிருஷ்ணா கிருபளானிக்குக் கடிதம் எழுதியதைச் சுட்டிக்காட்டுகிறார் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா. ‘புகழ்பெற்ற புத்தகங்களை எழுதியிருந்தாலும் பதிப்பாளர்கள் ஏமாற்றுவதால் வறுமையில் வாழ்கிறார் நிராலா. அவரிடம் பணமோ பொருளோ கொடுத்தாலும் அதை மற்றவர்களுக்குத் தானமாக வழங்கிவிடுகிறார். எனவே, அவருக்கு நேரடியாகப் பணம் வழங்காமல், அவரைக் கவனிக்கும் பணியைச் செய்துவரும் மற்றொரு கவிஞரான மகாதேவி வர்மாவிடம், நிராலாவுக்காக மாதம் ரூ. 100 வழங்க ஏற்பாடு செய்யவும்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டார் நேரு. சரியாக 4-வது நாள் (16-ம் தேதி), நேருவுக்குப் பதில் கடிதம் எழுதினார், கிருஷ்ணா கிருபளானி. கல்வி அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாதுடன் இதுதொடர் பாகப் பேசிவிட்டதாகவும், அந்தக் கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார் கிருஷ்ணா கிருபளானி. நெருக்கடியான அரசு நிர்வாகப் பணிகளுக்கு இடையிலும், வறுமை நிலையில் இருந்த எழுத்தாளருக்கு உதவ தனிப்பட்ட முறையில் முயற்சி எடுத்த நேருவின் காலம் மகத்தானது என்று குறிப்பிடுகிறார் ராமச்சந்திர குஹா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x