Published : 08 Mar 2015 01:14 PM
Last Updated : 08 Mar 2015 01:14 PM
பிரபல உருதுக் கவிஞர், இந்தி திரைப்படப் பாடலாசிரியர் சாஹிர் லுதியான்வி (Sahir Ludhianvi) பிறந்த தினம் இன்று (மார்ச் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் (1921) பிறந்தவர். இயற்பெயர் அப்துல் ஹயீ சாஹிர். ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா பிரிந்ததால், சிறு வயதில் இருந்தே அம்மாவிடம் வளர்ந்தார். இவ ரது இளமைப் பருவம் ஏழ்மையிலும் போராட்டத்திலும் கழிந்தது.
* கல்லூரியில் படிக்கும்போது, இவர் எழுதிய ஈரடிக் கவிதைகளால் பிரபலமானார். கல்லூரிப் படிப்பை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. வாழ்க்கையை ஓட்டப் பல்வேறு வகையான வேலைகளைச் செய்தார்.
* 1943-ல் லாகூர் சென்றார். அதே ஆண்டில் ‘தல்கியா’ என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அதன் பிறகு, இவரது புகழ் பரவியது. 1945-ல் உருதுப் பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
* கம்யூனிச சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர். பத்திரிகையில் எழுச்சிக் கட்டுரைகள் எழுதினார். 1949-ல் பாகிஸ்தான் அரசு கைது வாரன்ட் பிறப்பித் ததால், லாகூரில் இருந்து தப்பி டெல்லிக்கு வந்தார். சிறிது காலத்துக்குப் பிறகு மும்பையில் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தி படங்களில் பாடல்கள் எழுதத் தொடங்கினார்.
* முதன்முதலாக இவரது பாடல் இடம் பெற்ற திரைப்படம் ‘ஆஸாதி கி ராஹ் பர்’ (1949). எஸ்.டி.பர்மன் இசையில் வந்த ‘நவ்ஜவான்’ (1951) படத்தில் வரும் ‘தண்டி ஹவாயே லெஹரா கே ஆயே’ பாடல் மூலம் மிகவும் பிரபலமானார்.
* தொடர்ந்து, பல்வேறு படங்களுக்கு காலத்தால் அழி யாத உயிரோட்டமான பல பாடல்களை எழுதினார். இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள் விரும்பும் பாடலாசிரியராகத் திகழ்ந்தார். இறைவன், அழகு, மதுவைப் புகழ்ந்து எழுதுவதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருந்தார்.
* தனித்துவம் வாய்ந்த இவரது பாடல் வரிகளில் வாழ்வின் துயரங்கள், அர்த்தமற்ற போர்கள், அரசியல் செயல்பாடு கள் குறித்து இருக்கும். பொதுவாக இசைக்குப் பாட்டு எழுதுவது இவருக்குப் பிடிக்காது.
* இவரைப் பற்றி இந்தியா, பாகிஸ்தானில் பல புத்தகங் கள் வெளிவந்துள்ளன. டேனிஷ் இக்பால் எழுதிய ‘மை சாஹிர் ஹூ’ என்ற புத்தகம் இவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறும் ஆராய்ச்சிப் புத்தகமாக விளங்கியது. 2010-ல் ‘சாஹிர்’ என்ற மேடை நாடகத்தை இக்பால் எழுதினார். பெரும் வெற்றி பெற்ற இந்த நாடகம், டெல்லியில் பலமுறை அரங்கேறியது.
* வானொலியில் பாடல்கள் ஒலிபரப்பப்படும்போது பாட கர், இசை அமைப்பாளருடன் பாடலாசிரியர் பெயரை யும் சேர்த்துக் கூறும் வழக்கம் இவரது முயற்சியால்தான் தொடங்கியது.
* பாடல்களுக்கு ராயல்டி பெற்ற முதல் பாடலாசிரியர் இவர். தனக்கு சரி என்று படுவதை பளிச்சென்று சொல்வார், துணிச்சலுடன் செய்வார். மக்கள் கவிஞ ராகப் போற்றப்பட்ட சாஹிர் லுதியான்வி 59 வயதில் (1980) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT