Published : 14 Mar 2015 12:03 PM
Last Updated : 14 Mar 2015 12:03 PM
நான் நாகராஜம்பட்டி கிராமத்தில் குடியிருந்தபோது, ஒருமுறை என் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இருந்த, மடம் என்று எங்களால் அழைக்கப்பட்ட, ஜெயகாந்தனின் அலுவ லகத்துக்கு வந்துவிட்டேன்.
ஒரு வாரம் அங்கேயே தங்கிவிட்டேன்.
அப்போதெல்லாம் ஜெயகாந்தன், மாலை 4 மணிக்கு மேல்தான் தனது மடத்துக்கு வருவார். காலையில் இருந்து மாலை வரையில் நாங்கள் அவர் வருகைக்காக காத்திருப்போம். ராமகிருஷ்ண மடத்தில் சந்நியாசி யாகச் சேர்ந்து, கொஞ்ச காலத்துக்குப் பிறகு அதிலிருந்து வெளியேறிவிட்ட ஒருவரும் தற்காலிகமாக ஜெயகாந்த னின் மடத்தில் வந்து தங்கியிருந்தார்.
அவர், ‘Gospel of Sri Ramakrishna’ என்கிற ஓர் ஆங்கிலப் புத்தகத்தை வைத்திருந்தார்.
பகலெல்லாம் பொழுதுபோக்க வேண்டி எதையெதையோ படிக்கத் தேடிக்கொண்டிருந்த என் கண்ணில் அந்தப் புத்தகம் தென்பட்டது. அதைப் படிக்க ஆரம்பித்தேன். அந்தப் புத்த கத்தை நான் படித்தது என் வாழ்வின் ஒரு முக்கியமான திருப்பம் என்றுதான் கூற வேண்டும். விவேகானந்தரைப் பற்றி நிறையப் படித்து தெரிந்து வைத்திருந்த எனக்கு, ராமகிருஷ்ணரைப் பற்றி விவரமாகத் தெரியாதிருந்தது.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகால ராமகிருஷ்ணரின் அன்றாட வாழ்க் கையை விவரித்த அந்தப் புத்தகத்தைப் படிக்க படிக்க எனக்கு பெரும் வியப்பு உண்டாயிற்று. ராமகிருஷ்ணரின் சபையில் நடந்த சில சம்பவங்களைப் போன்று, இங்கே ஜெயகாந்தனின் சபையில் சில சம்பவங்கள் நிகழ்வதாக என் உள்ளுணர்வுக்குப்பட்டது.
ராமகிருஷ்ணரை மொய்த்துக்கிடந்த சில இளைஞர்களைப் பற்றி அவர்களின் குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர். கொஞ்சம் முன்னர்தான் திருமணம் செய்துகொண்ட ஓர் இளைஞரும் அதில் அடக்கம். அந்த இளைஞரின் குடும்பத்தினர் படுகின்ற கவலையைப் பிற சீடர்கள் ராமகிருஷ்ணருக்குத் தெரிவிக்கின்றனர்.
‘‘இல்லையே! அவன் பெற்றோர் நேற்று என்னைப் பார்த்தார்களே… அவர் கள் என்னிடம் எதுவும் குறைபட்டுக் கொள்ளவில்லையே? என்னிடம் மிகவும் மரியாதையாகவும் வணக்கமாகவும் பேசினார்களே?’’ என்கிறார் ராம கிருஷ்ணர்.
அடுத்த முறை அந்த இளைஞரைச் சந்திக்கும்போது ராமகிருஷ்ணர், ‘‘நீ என்ன ராத்திரியெல்லாம் அவளிடம் வேதாந்தம் பற்றியே பேசிக் கொண்டிருக் கிறாயா? ‘Have a little fun with her’ என்கிறார். இதைப் படித்ததும் எனக்குச் சிரிப்புப் பொங்கிவிட்டது.
எங்கள் குடும்பங்களிலும், யாராவது பிறரிடம் பேசும் போது, இப்படி ஜெயகாந்த னோடு நாங்கள் சுற்றுவது பற்றிக் குறைபட்டுகொண்டது உண்டு. ஆனால், எங்கள் பெற்றோரும் அவரை நேரடியாகச் சந்திக்கிறபோது எல்லாம், ராமகிருஷ்ணரைச் சந்தித்த அந்தப் பெற்றோர்களைப் போலவே நடந்துகொள்வர்.
நண்பர் தண்டபாணியின் தந்தை வீரபத்திர முதலியார் மூன்று முறை திருப்பத்தூர் நகரசபைத் தலைவராக இருந்தவர். பழங்காலத்து திராவிட இயக்கப் பிரமுகர்களில் ஒருவர். அவர் தன் மகனுக்குத் திருமணம் செய்விக்க விரும்பியபோது, தண்டபாணி தனது லட்சியவாதக் கருத்துகளைக்கொண்டு அதற்கு இணங்காமல் இருந்தார். ஜெயகாந்தனோடு தனது மகனின் நட்பை வீரபத்திர முதலியார் முதலில் எப்படி நினைத்தாரோ, தெரியவில்லை. ஆனால், ஜெயகாந்தனின் நட்புறவால் தனது மகன் திருமணத்துக்கு இசைந்ததில், அவருக்கு ஜெயகாந்தனின் மீது பெரிய மரியாதை ஏற்பட்டுவிட்டது. ஜெயகாந்தன் திருப்பத்தூர் நகருக்கு வரும்போதெல்லாம், அவரோடு இருப்பவர்கள் அத்தனைப் பேருக்கும் சேர்த்து தண்டபாணியின் தந்தை பெரிய விருந்து தந்துவிடுவார்.
ராமகிருஷ்ணரின் சபை போல, இங்கே ஒன்று நடந்துகொண்டிருக்கிற மாதிரி எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. இவ்விரு இடங்களிலும், சங்கமிக்கின்ற நபர்களின் அந்தஸ்து உயரம் அடியோடு ஒழிந்துபோகிறது. வந்தவர் கள் இவர்களை வியந்து வணங்கிக் கைக் கூப்பி நிற்கிறார்கள். இவர்கள் சொல்கிற ஒவ்வொரு வாக்கியமும், உண்மையின் மீது வீசுகிற ஒரு வெளிச்சமாகிறது. தாங்கள் சொல்வதை எடுத்துக் காட்டுவதற்கு இவர்கள் அன்றாட வாழ்வின் சாதாரண சம்பவங்களையே உவமையாக கையாண்டு விடுகிறார்கள்.
நான் வந்து ஒரு வாரம் தங்கிவிட்டதில் சந்தேகமுற்ற ஜெயகாந்தன், தேவபாரதியிட பேசி விவரமறிந்து, அப்புறம் என்னுடன் பக்குவமாகப் பேசி என்னைத் திரும்பவும் ஊருக்கு அனுப்பி வைத்தார். ஊருக்குப் போன நான் ராமகிருஷ்ண ரின் உலகத்துக்குள் மேலும் மேலும் நுழைந்தேன்.
அதற்கு முன் விவேகானந்தரை நிறை யப் படித்திருந்த நான், ராமகிருஷ்ணரைப் பற்றியும் நிறையப் படித்துத் தெரிந்து கொண்டேன். மஹேந்திரநாத் குப்தா என்கிற மகானுபவருக்கு, உலகெங் கிலும் உள்ள ராமகிருஷ்ணப் பக்தர்கள் விழுந்து பணிந்து நன்றி கூற வேண்டும். அப்புறம் அன்னை சாரதாதேவியின் வாழ்க்கையையும் படித்தேன்.
ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அன்னை சாராத தேவி மூவரும் ஒரு முக்கோணம் போல அமைந்த மும்மணிகள். முழுவதும் அறிய விரும்புவோர் எல்லாம் இந்த மூன்று பேரையும் படிக்க வேண்டும். அப்புறம் நான் ஜெயகாந்தனைச் சந்தித்த சந்திப்புகளில் எல்லாம் ராமகிருஷ்ணரை அதிகமாகக் குறிப் பிடத் தொடங்கினேன்.
‘‘நீங்கள் ராமகிருஷ்ணரைப் போல பேசுகிறீர்களே… ஜே.கே!’’ என்றும் என் மனதில் பட்டதைச் சொல்லிவிட்டேன்.
ஒருமுறை ஆழ்வார்ப்பேட்டை மடத் தில் நண்பர்களிடம் அவர் ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது, நான் ஆர்வ மிகுதியால், ‘‘ராமகிருஷ்ணர்…’’ என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தேன். அவ்வாறு குறுக்கிட்டதற்குக் கோபித்துக்கொண்ட ஜெயகாந்தன், நான் சற்றும் எதிர்பாராத வகையில், ‘‘இங்கிருக்கும் யாருக்கும் இல்லாத ராமகிருஷ்ணர் பக்தி உனக்கு இருக்குமானால், அது ஒழிக!’’ என் றார். அதுவரை கேட்டவற்றில், அசந்தர்ப்ப மாகவும், அவசரமாகவும், ஆழ்ந்த பொருளற்றும் தெறித்த வார்த்தை அது ஒன்றுதான்.
ஜெயகாந்தனின் திட்டுகளுக்கு நாங்கள் வைத்த செல்லப் பெயர் ‘உண்டை’. நிச்சயம் இது எனக்கு ஓர் உண்டைதான். நான் வாயை மூடிக் கொண்டேன். அதற்கப்புறம் நான் ராமகிருஷ்ணரைப் பற்றி எதுவும் பிரஸ் தாபிப்பது இல்லை என்று தீர்மானித்துக் கொண்டேன்.
ஆனால், இரண்டு மாதம் கழித்து நான் மறுபடியும் ஜெயகாந்தனைச் சந்தித்தபோது ஜெயகாந்தன், ‘‘குப்பு சாமி நீ சொல்லிய மாதிரியே என் வீட்டிலும் சொல்கிறார்கள். நான் ராமகிருஷ்ணரைப் போல பேசுகிறானாம்!’’ என்றார்.
அப்போது நான் ஆனந்தப் புன்னகை புரிந்துவிட்டு, என் ராமகிருஷ்ணப் பக்தியைப் பற்றி அவர் கூறியதை மெல்லக் கவனப்படுத்தினேன். ‘‘அப் படியா சொன்னேன்...?’’ என்று அவர் வியக்கவும் வருந்தவும் செய்தார்.
அதற்குப் பிறகு ஜெயகாந்தனின் சபையில் நான் என் விருப்பப் பிரகாரம் எல்லாம் ராமகிருஷ்ண ரைப் பற்றிப் பேசத் தடையில்லாது போயிற்று.
ஜெயகாந்தனும் அவ்வப்போது ஏதாவது அழகாகப் பேசி, அதை நாங்கள் மிகவும் ரசிக்கும்போது எல்லாம், ‘‘என்ன… நான் ராமகிருஷ்ணர் பேசுவது போல பேசுகிறேனா..?” என்று புன்னகையுடன் கேட்பார்.
- வாழ்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:
pisakuppusmy1943@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT