Published : 24 Mar 2015 08:49 AM
Last Updated : 24 Mar 2015 08:49 AM
ஆட்சி அதிகாரத்தை இந்தியத் தலைவர்கள் கையில் ஒப்படைப்பது தொடர்பாக விவாதிக்கவும் திட்டமிடவும் பிரிட்டிஷ் அமைச்சரவைக் குழு, இந்தியா வந்த நாள் இன்று.
இந்தியாவுக்கான பிரிட்டிஷ் அமைச்சரவைக் குழுவை அனுப்பும் முடிவை எடுத்தவர் பிரிட்டன் பிரதமர் அட்லி பிரபு. அதன்படி, பெத்திக் லாரன்ஸ் பிரபு, சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ், ஏ.வி. அலெக்ஸாண்டர் ஆகியோர் இடம்பெற்ற இந்தக் குழு, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அனைத்திந்திய முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளுடனும் இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக வந்திருந்தது. இந்தக் குழுவில் இந்தியாவின் வைஸ்ராய் வாவெல் பிரபு பங்கேற்கவில்லை.
இந்திய தேசிய காங்கிரஸின் சார்பில் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டவர் மவுலானா அபுல் கலாம் ஆசாத். அவருக்கு உதவியாக நேருவும் வல்லப பாய் பட்டேலும் இந்தார்கள்.
இக்குழுவின் முக்கிய நோக்கங்கள்
அரசியல் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக, இந்திய மாகாணங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி களிடம் முதல் கட்ட விவாதம் நடத்துவது.
அரசியல் சட்டக் குழுவை உருவாக்குவது. இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகளின் துணை யுடன் நிர்வாகக் குழுவை அமைப்பது. இந்தக் குழு காந்தியிடமும் ஆலோசனை நடத்தியது. இதில் இன்னொரு விஷயமும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த இந்தியாவாகவே இருப்பதா அல்லது முஸ்லிம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா முன்வைத்த கோரிக்கையின்படி இந்தியா - பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளாகப் பிரிந்துவிடுவதா என்பதுதான் அந்த முக்கிய விஷயம். இந்தியப் பிரிவினைக்கு காங் கிரஸ் சம்மதிக்கவில்லை. இதுதொடர்பாக காங்கிரஸ் - முஸ்லிம் லீக் இடையே சிம்லாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. மே 16-ல் ஒரு சமாதானத் திட்டத்தை இந்தக் குழு முன்வைத்தது.
டொமினியன் இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பது; முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாகாணங்களை வைத்து இரண்டு பிரிவாகப் பிரிப்பது; வட மேற்கு எல்லைப் புற மாகாணம், பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தான் இணைந்த பகுதியைத் தனியாகவும், வங்கம் மற்றும் அசாம் பகுதிகளை ஒரு பிரிவாகவும் பிரிப்பது; இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மத்திய மற்றும் தென்னிந்தியப் பகுதிகளை இன்னொரு பிரிவாகப் பிரிப்பது.
வெளியுறவுத் துறை, தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகள் மத்திய அரசின் வசம் இருக்கும். மற்ற அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் மாகாணங்களிடம் இருக்கும்.
மே 16-ல் முன்வைக்கப்பட்ட திட்டத்தில் மேற்சொன்ன திட்டங்கள் இடம்பெற்றன. பின்னர் ஜூன் 16-ல் இன்னொரு திட்டம் முன் வைக்கப்பட்டது.
இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியை இந்தியாவாகவும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியை பாகிஸ்தானாகவும் பிரிப்பது; சமஸ் தானங்கள் சுதந்திரம் பெறுவதற்கு அல்லது இந்த இரண்டு டொமினியன் நாடுகளில் இணைந்துகொள்வதற்கு அனுமதி வழங்குவது ஆகிய யோசனைகள் முன் வைக்கப்பட்டன.
இந்த இரண்டு திட்டங்களையும் ஏற்க முடியாது என்று முதலில் காங்கிரஸ் தெரிவித்துவிட்டது. முதலில் இத்திட்டத்தை ஏற்பதாகக் கூறிய முஸ்லிம் லீக், பின்னர் மறுத்துவிட்டது. பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு மே 16 திட்டத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. அதன் பின்னர், கடந்துசென்ற பல்வேறு அரசியல் நிகழ்வு களுக்குப் பிறகு, 1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதற்கு முதல் நாள் பாகிஸ்தான் சுதந்திரமடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT