Published : 18 Mar 2015 11:28 AM
Last Updated : 18 Mar 2015 11:28 AM
இருளப்பசாமியின் கர்ப்பகிரஹ மூட்டப் புகையில் அருளேற்றிக் கொண்டிருந்தான் தவசியாண்டி.
இருளப்பனுக்கு கோபம் கொம்பேறி போயிருந்தது. எத்தனை பலி கொண்டாலும் அடங்காத கோபம். மூடி இருந்த கண்கள் திறந்து செங்கங்காய் தகித்தன. ஓங்கிய கை அரிவாளில் முளைத்த மூன்றாம் கண், எட்டுத் திக்கும் இரை தேடிச் சுழன்றது. வெட்டுக் கிடாய்களின் ரத்தத்தோடு வேறு ரத்தத்தையும் குடம் குடமாய் குடிக்க, நாக்கு முழம் நீண்டது.
எதிரே நிற்கும் எவர் கண்ணுக் கும் புலப்படாமல், தவசியாண்டி யின் காதோரம் பேசினார் இருளப்பசாமி.
“பசிக்குதுடா தவசி. பதினேழு வருஷப் பசி..!”
“காவு தர்றேன்… காவு தர்றேன். இருளப்பன் மனம் குளிர காவு... தர்றேன்” தவசியாண்டியின் கண் ஓடிய திசையில் அரண்மனை உடையப்பன் வந்து கொண்டிருந் தான்.
கோயில் சனம் முழுக்கவும் விலகி வழிவிட்டு நின்றது. தனக்காக விரிந்த பாதையில் பெருநாழி முதலாளியை முன் தள்ளி நடந்தான் உடையப்பன்.
ஆல மரத்தோரம் மறைந்து நின்ற வெள்ளையம்மா கிழவி, உடையப்பனின் பிடறியில் கண் பதித்திருந்தாள்.
உடையப்பனுடன் வந்த பரி வாரங்கள், புடை சூழ நின்றார்கள்.
குலசாமியை சேவிக்க கரம் குவித்ததும் உடையப்பனுக்கு வியர்த்தது. உள்ளே இருளப்பன் நிற்க வேண்டிய இடத்தில் தவசியாண்டி நின்றான். குருதி சொட்ட சொட்ட நீளும் நாக்கோடு நின்றான்.
கண்களில் பூச்சி பறக்க, சனக் கூட்டத்தைப் பார்த்தான் உடையப்பன்.
“அய்யா… இருளப்பா..!” ஆயிரக்கணக்காய் உயர்ந்து குவிந்த கரகோஷங்களின் கண் களுக்குக் குலசாமியே தெரிந்தான். “அய்யா… இருளப்பா..!” உடையப்பனின் கண்களுக்கு தவசியாண்டியே தெரிந்தான். இடது கைவாக்கில் நின்ற பெருநாழி முதலாளியின் தோளை ஆதரவாக தொட்டு நிலைகொண்டான்.
கண்மாய் பாதையில் கூட்டு வண்டி வந்து கொண்டிருந்தது. செண்பகத் தோப்பில் இருந்து வாயில் நுரை தள்ள துரைசிங்கம் ஓட்டி வந்த காளைகள், சீராய் நடை போட்டு வந்தன. வண்டிக்குள் இருக்கும் அரியநாச்சி. முன் திரைச் சீலையை கை அகலத்துக்கு விலக்கி, திருவிழாச் சனத்தை நோட்டமிட்டாள்.
வைக்கோல் பிரிக்குள் ஒளிந் திருக்கும் ஆயுத உருப்படிகள், அலுங்காமல் வந்தன.
காட்டுப் பூ செவ்வந்தியின் கண்ணில் படும் தெரு, வீடு, வாசல், முளைக் கொட்டுத் திண்ணை, முளைப்பாரி எல்லாம் அருங்காட்சியாக விரிந்தன.
திசை சொல்ல ஆள் இல்லாத ஊருக்குள் காரை நிறுத்திவிட்டு, திருவிழா இரைச்சலை குறி வைத்து கண்மாய் பாதையில் நடந்து வந்தான் கஜேந்திரன்.
புற்றுக்குள் இருந்து தலை நீட்டும் செந்நாகம் போல், ஆலமர மறைப்பில் இருந்து கூர்ந்து கொண்டிருந்த வெள்ளையம்மா கிழவியின் கண்ணில் கூட்டு வண்டி பட்டது. அடிவயிறு பிசைந்தது.
‘இது, ரணசிங்கம் ஓட்டித் திரிந்த கூட்டு வண்டி. வண்டியை ஓட்டி வர்றவன், தாடி முடி வெச்ச சின்ன வயசு ரணசிங்கம் மாதிரி தெரியிறான். வண்டிக்குள்ளே யாரு?’ புலப்படாமல் கழுத்து நீட்டி கண்காணித்தாள். வந்த வண்டி கூட்டத்துக்குள் நுழையாமல், மேற்கே கூடி கோயிலுக்குப் பின்புறம் போய் நின்றது. ‘நல்ல அறிகுறியாகத் தெரியலே. ஏதோ பெருசா விபரீதம் நடக்கப் போவுது.’ நிலைகொள்ளாமல் திரும்பியவளின் கண் எதிரே பேரன் கஜேந்திரன் நடந்து வந்துகொண்டிருந்தான். கிழவிக்கு மூச்சு இரைத்தது. ‘இவன் ஏன் இங்கே வந்தான்?’ தடுமாறி நடந்தாள்.
உக்கிர பூஜையைத் தொடங்கி இருந்தான் தவசியாண்டி.
சனம், பரவசத்தில் கத்தியது.
“அய்யா… இருளப்பா! சாமி… அய்யா!”
ரெட்டைக் கல் தூணில் தொங் கும் நேர்த்திக்கடன் வெண்கல மணிகளை, சிறுவர்கள் போட்டி போட்டு ஆட்டி பேரோசை எழுப்பினார்கள்.
இளவட்டங்கள் ‘வைக்கோல் பிரி’ ஆட்டத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.
கொம்புப் பூ சுற்றிய வெட்டுக் கிடாய்கள், வளர்ந்த திமிர் அடங்காமல் சிலுப்பிக் கொண்டு நின்றன. காவல்க்காரத் திருமால் தேவரின் கை அரிவாள், கிடாய்களுக்கு நேர்முகம் திருப்பி வெள்ளிப் பளபளப்பில் மினுங் கியது.
தலைக் கிறுகிறுப்பைச் சமாளித்து கண் திறந்த உடையப் பன், கர்ப்பகிரஹத்துக்குள் பார்த்தான். இருளாண்டி நின்றார். தவசியாண்டியைக் காணோம்.
ஆலமரத்தைச் சுற்றி, நேர்த்திக் கடன் செதறு தேங்காய்கள் குவிந்தியிருந்தன. உடைத்துச் சிதறடிக்க, அவரவர் குவியலுக்கு முன் இளவட்டங் கள் நின்றார்கள்.
பொங்கலிட்டு இறக்கிய பானைகளின் கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த மாவிலைகளும் மஞ்சள் கிழங்குச் செடிகளும் அனலில் வாடிப் போயிருந்தன.
ஐஸ் வண்டிக்காரனை சிறுவர் கள் மொய்த்தார்கள்.
இறங்காமல் கூட்டு வண்டிக் குள்ளேயே அமர்ந்திருந்தாள் அரியநாச்சி.
வைக்கோல் பிரிக்குள் நுழைந் திருந்தான் துரைசிங்கம்.
வண்டியை விட்டு இறங்கி தனியே நின்றாள் செவ்வந்தி. தனியே வந்து கொண்டிருந்த கஜேந்திரன், தனியே நின்ற செவ்வந்தியைப் பார்த்தான். அரை பாதி பார்த்த செவ்வந்தி, மலங்க விழித்தாள். இமைகள் படபடக்க மறுபடியும் பார்த்தாள். கஜேந்திரன் பார்த்துக்கொண்டே வந்தான்.
“அடேய்… கஜேந்திரா!” ஓட்டமும் நடையுமாக பதறி வந்தாள் வெள்ளையம்மா கிழவி.
“நீ ஏண்டா… இங்கே வந்தே?”
“ஏன் பாட்டி? நான் வரக் கூடாதா? நீதானே சொல்லுவே நம்ம ஊரு… நம்ம ஊருன்னு?”
கஜேந்திரனின் இரண்டு தோள் களையும் பிடித்து திருப்பினாள். “வேண்டாம்… நீ அப்படியே திரும்பி போயிரு. இங்கே என்னமோ நடக்கப் போகுது!” தள்ளினாள்.
கோயிலுக்குப் பின்புறம் நின்ற கூட்டு வண்டித் திரை விலகியது. அரியநாச்சி இறங்கினாள். வைக்கோல் பிரிக்குள் நின்ற துரைசிங்கத்துக்கு கூட்டத்துப் பக்கம் விரல் நீட்டி ஆள் காட்டினாள்.
தவசியாண்டியின் கோடாங்கிச் சத்தம் கிளம்பியது.
‘டுண்… டுண்… டுண்ண்… டுண்… டுண்… டுண்ண்…’ கோயில் மணிச் சத்தம் கணகணத்தது.
‘வைக்கோல் பிரி’ ஆட்டம் தொடங்கியது. ஆலமரத்துப் பட்சிகள் கூச்சலிட்டுப் பறந்தன. ‘பிரி’ ஆட்ட இளவட்டங்களுக்குள் துரைசிங்கம் கலந்தான்.
செதறுகாய்கள் நொறுங்கிச் சிதறின.
“அய்யா… இருளப்பா! சாமி… அய்யா!” சனம் கத்தியது.
வைக்கோல் பிரி ஆயுதங்கள் மோதின. கிடாய்கள் வெட்டுப் பட்டன.
வரிசையாய் வெட்டுப்பட்டுச் சரிந்த கிடாய்த் தலைகளுக்குள் உடையப்பன் தலை கிடந்தது. வைக்கோல் பிரி சுற்றிய ஒருவன் சுழற்றி எறிந்த வளரி, ஊரைப் பார்த்து ஓடிக் கொண்டிருந்த பெரு நாழி முதலாளியின் கழுத்தைக் குறி வைத்துப் போனது.
- குருதி உறைந்தது
எண்ணங்களைத் தெரிவிக்க: irulappasamy21@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT